திங்கள், 4 ஜூன், 2012

குளத்தை நினைந்தழுது .....!



அல்லி மலர்ந்த குளம்
ஆம்பல்கள் நிறைந்தகுளம்
கல்லில் துணிதுவைத்து
களிப்போடு குளித்தகுளம்
சள்ளல் மீன் பிடித்து
சமைத்துண்டு மகிழ்ந்தகுளம்
இப்போது எங்கே இதயம் கனக்கிறது ,
இருவிழியும் பனிக்கிறது ......

ஊர் முற்றி கூடியதால்
உருமாறி போனதுவா..?
நீர்வற்றி போனதனால்
நிறம்மாறி போனதுவா ....?
ஈரைந்து வருடங்கள்
இல்லாத இடைவெளியை
ஆராய்ந்து பார்க்கையிலே
அடிமனது வலிக்கிறது ........

ஊரை முடமாக்கி -கல்மேல்
உட்கார வைத்திருக்கும்
பேரை நினைக்கையிலே
பிரியம் அன்றி கோபம் வரும் .
கல்மனையால் ,கட்டிடத்தால்
காணாமல் போயிருக்கும்
குளத்தை நினைந்தழுது
குளிக்கிறது இருவிழியும்.......

சினை வைத்த மீன்களெல்லாம்
செத்திறந்து போயிருக்கும்
ஒற்றைக்கால் தவமிருந்த
ஊர் கொக்கும் செத்திருக்கும்
பொட்டியான் மீன் புறக்கி
புதருக்குள் வைத்துண்ட
பூனையும் செத்திருக்கும்

இடுப்பில் குடமிடுக்கி
இசைப்பாட்டு பாடிவந்த
இளசுகள் முதிர்ந்திருக்கும் ....,
இருந்தும் மனதில்
பழசுகள் படிந்திருக்கும் .