வியாழன், 11 ஏப்ரல், 2013


கடின வளைவுகளுக்கிடையில்
தாவிக்குதித்து உமிழ்ந்து,உருகி,ஊறி
ஒரு நதியாய்
விரிந்திருக்க வேண்டும் நீ
இல்லையென்றால்;
இத்தனை பக்குவங்கள்-உன்
பக்கத்திலிருந்திருக்காது

நீ கலங்காத ஜதி,
ஹலாலான ஜோதி
ஜீவ காருண்யங் கொண்டு
உயிர்கள் உற்பத்திசெய்வதோடு
நின்று விடாமல்-தேசம்
கலங்கிய சந்தர்ப்பங்களை
தெளிய வைத்த
ஜல சாம்ராஜ்ஜியம் நீ

நீ பெரும் மலைகளை
சந்தித்திருக்கின்றாய் அதனால் தான்
ஆளங்களை பதுக்கி வைக்கத்தகு
ஆளுமை கிடைத்திருக்கின்றதுனக்கு

பிம்பங்களை பிரதி பண்ணும் நீர்
இயக்கங்களுக்குள் அடங்கா
வியத்தகு விசித்திரம்

ஆயினும்;
பீறிட்டு பாயும் பிரமாண்ட
தகுதியுடைய
தண்ணீர் வாக்கியமே
சாதாரண காவி
அணைகளுக்குள் கட்டுண்டு இன்னும் நீ
அமைதி காப்பதுதான்
ஆச்சரியமான அம்சம்!