ஞாயிறு, 1 டிசம்பர், 2013

பூ உதிரும் சாமம்.



பட்டியை பரப்புவதில்
எப்பவும் மறிக்“கடா”க்களுக்கு மதிப்புதான்
முதல் உள்ள கசாப்பு கடைக்காரனும்
பணம் புரட்ட பழகியதால்
எந்த விலை வந்தாலும் விடுவதில்லை.

கிழக்கின் மூலையெங்கும்
முற்றத்தில் செடியினை நடுபவன்
ஒரு வீட்டையும் கட்டவேண்டியிருக்கின்றது
இதிலிருந்து அறிய முடிகிறது
சொறணையற்று போயிற்றென்று
சமுதாயம் பற்றி யோசிப்பவனை விட
ஆதாயம் ஒட்டி நேசிப்பவனே நிலைக்கிறான்

வேதத்தின் நெறி பேண தெரியாத தேவாங்கு
மதவாதம் பேசுபவனோடு மல்லுக்கு நுழைகிறது
ஆபத்துக் குதவாத அநியாயம் சமபங்கு
சாபத்துக்குரித்தாகும் சந்ததியாய் விளைகிறது


வியப்பிலாழ்த்தத் தகு வினோதமாய்
பெரும் பேரழிவொன்று அதிகார பூர்வமாய்
அங்கிகரிக்கப் படுகிறது நாள்,நட்சத்திரம் பார்த்து

கனிந்த இரவின் கண்கள் மூடியிருந்த சாமம்
கனவுகளை பெருக்கிக் கொண்டிருந்த
புது மணப் பூ பிரிந்து கிளை விலகி
விரதம் கலைய விழுகிறது
தாவித் தவித்து அலைந்து அடங்கியதோர்
மந்தியின் மடியில்

உள்ளே,வெளியே என்ற இரண்டு முகங்களுடன்
சாத்தப் படுகிறது கதவு மிக அமைதியாக
கதவின் தாப்பாள் உட்பட நாட்புறமும்
அடர்த்தியின் பலம் நிறைந்து வழிய
சட்டை கழற்றி காமம் கரு நாகாய் புரள
பீதியற்ற மகுடி
வாசம் கொள்கிறது
அறை முழுதும் விஷம் பீச்ச!