ஞாயிறு, 20 டிசம்பர், 2015

திருகோணமலையில் 15-12-2015அன்று தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டு
அமைப்பும், கனடா படைப்பாளிகள் உலகமும்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடாத்திய
இலக்கிய விழாவின் போது எனது கவிதை புனைவுக்கு கிடைத்த சான்றுகளும் விருதும்.

“புகழ் அனைத்தும் இறைவனுக்கே!”




சனி, 19 டிசம்பர், 2015

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்விகலைகலாச்சார பன்னாட்டு அமைப்பு சர்வதேச அளவில் 2015 நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில்  முதலாமிடம் பெற்ற எனது கவிதைக்கு கிடைத்த சான்றிதழ். 



தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு சர்வதேச அளவில் 2015 நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில்  முதலாமிடம் பெற்ற எனது கவிதை

முதலாமிடம் பெற்று பரிசும்,சான்றிதழும் கவியருவி பட்டமும் வென்ற கவிதை

விவசாயின் விடியல் என்று..?
)(  ************ )( ************  )(

ஊர் நிலை ஓதிடும் உண்மை இதை
உங்கள் முன் கூறிடும் என் கவிதை
வாய்க்கால் வரப்பு வயல் வழிகள்
வாய்க்கப் பெற்ற நில வெளிகள்
நெல்லு,தென்னை,மா, பலா வாழை
வில்லு நீரால் செழிக்கும் சோலை
கரும்பும் கூட விரும்பும் படியாய்
நாவில் இனிக்கும் சுவையின் வடிவாய்


ஆயினும் உழவன் அழுதிடும் நிலை
ஆனது இங்கே விளைச்சலின் விலை
பாடு படுபவன் பழுத்திடும் இலை
ஆடும் கழித்திடும் அழுகிய குழை
தேடி யாருமே உதவிட இல்லை
வாடிப் போகுது வாழ்வதன் எல்லை


பூமியை தாய்போல் பார்த்திடும் சாதி
புவியில் இருப்பது கிராமத்தில் பாதி
ஏர்தனை பிடித்த ஏழையின் விதி
எழுதி முடிப்பதோ தரகர்கள் கெதி
விவசாயிதான் உழைப்பதன் ஆதி
விளைந்ததை விற்க எங்கடா நீதி


ஈரத்தை பார்த்தால் இது நெல்லா கேட்கிறான்
இரக்கமே இன்றி இடுவம்பாய் தாக்குறான்
நிறமதை கூர்ந்து நிறுவையில் கழிக்கிறான்
நிறையது குறைவா பதெரென முழிக்கிறான்
விலையதை கழித்து கூட்டலில் குறிக்கிறான்-ஏழை
வியர்வையில் குளித்து உயரத்தில் ஜொலிக்கிறான்


ஏழையின் பிழைப்பது வாடியாய் ஒழுகுது
எட்டப்பர் நிலைப்பது மாடியாய் உயருது
சட்டத்தை மாற்றாத சபைகளும் பெருகுது
சளைக்காது உழைப்பவன் வயிறது எரியிது
ஊணை தருபவன் மண்ணென போனான்
உறுஞ்சி பெறுபவன் மன்னனாய் ஆனான்
ஏனடா மானிடா இந்நிலை தொடருது
இதற்கொரு விடிவு நாள் எப்படா விடிவது?!




புதன், 25 நவம்பர், 2015


நீர்சுழி மேலெழுந்து
மீன் கொத்தியின் நிசியில்
சலனத்தை தோற்றுவிப்பது போன்று
குளம் நம் கண்களை
ஏமாற்றி விடுகிறது.

நீராடிப் பறவைகளின் தடாகமாய்
அலாதிகளால் பூசி மெழுகப்பட
குளத்தின் பரப்பு
ஆம்பல் பூத்த கரைவெளியாகி
மாயங்களை திணித்து
மீன்கள் துள்ளி விளையாடி குளிக்கும்
நீர்த்தொட்டி என விரிகின்றன..

மூர்ச்சையுற வளிபட்ட துடுப்பினது
வலிமிகு கணங்களை
திரும்பிப் பார்க்காது தோணி
ஒரு கரையை மறு பாகத்திற்கு
இழுத்துச் சென்று பொருத்திவிடும்
தொணியில் ஆடுவது போன்று
நாம் பார்வைகளால்
மேய்ந்து கொண்டிருக்கிறோம்.

இதற்கு மேலும்
ஒரு படகோட்டியின்
வாழ்வு நகரும் பிரயத்தனத்தை
சில நாணயங்களை திணித்து
செல்லாக் காசாக்கி விடவும்
நாம் பின் நிற்பதில்லை.

குளம் என்பதன் கீழ்
மூடி மறைக்கப்பட்ட மண்
சேற்றில் புதைந்து
மூழ்கி மூர்ச்சையுற்று
அடிமண்டிக் கிடக்கிறது என்பதெல்லாம்
ஒரு நீர் துளி போலேனும்
யாரின் மனதிலும்
படிந்து விடுவதில்லை.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

இவ்வழியால் போக முடியும்.



கால நிலத்தின் மேல்
வாழ்க்கை என்ற ஊரிலிருந்துதான்
தொடங்குகிறது அந்த வழி

எப்படி நடந்தால் போய் சேர முடியும்
எப்படி நடந்தாலும் போய் சேர முடியும்
இப்படியும் நடக்கலாம்
அப்படியும் நடக்கலாம்
தடுக்கி விழுந்த நொடி
தடிகளை ஊன்றிய படி
யாரையும் முந்திக் கொண்டும்
குறுக்கறுத்தும் கடக்கலாம்
உங்களுக்கு வசதியாக
பாதை அதன் பாட்டில் விரிந்து கிடக்கிறது

பயணத்தை நீங்கள் துவக்கிக் கொள்ளல்லாம்
அம்மணமாய், வெறுங் காலுடன்
உயர் ரக சப்பாத்துக்கள் தரித்தும்
அல்லது....., உங்களிடம்
வாகன வசதி இருந்தால்
கால்களை களற்றி அதனுள்
போட்டுக் கொண்டும் போகலாம்

இடுகாடு வரை போகும் என்று
போனவர்கள் சொன்னார்கள்
அப்படி இல்லை என்றே
இங்கு இருப்பவர்கள் பலர் இன்னும்...,

ஆனால்;
திரும்பி வருவதற்கான வழி மட்டும்
இந்த தெருவில் இல்லை என்று

எல்லோருக்கும் தெரியும்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தனித்தலின் ரணம்.
**************************

அடர்ந்த இடர் காடு
சுற்றி வனமாக
நீ விட்டுச்சென்ற தனிமை
பெருங் கோடைக்குள்
என்னை தள்ளிவிட்டது

மழையென வந்து போனாலும்
இனி..
துளிர்த்தலுக்கான சாத்தியம்
இல்லை இந்த கொடியில்

அன்புக்கான என் ஏக்கத்தில்
நீ பாய்ச்சிய வேல்
ஆணிவேரையே அசைத்து விட்டது

சூடி மகிழ்விக்க பூக்களோ
நுகர்ந்து இன்புற வாசமோ அற்று
மலடும் இல்லை குருடும் இல்லை
என்றாகிற்று ஜீவிதம்

கை தட்டல்களுக்காகவோ,
ஆடி அசர வைக்கவோ
என்னிடம் மகுடிகள் இல்லை

உன் எதிர் பார்ப்புகளின் தளங்களை
நான் இளந்து வெகு நாட்களாச்சு

இருப்பை பறை சாற்ற
வெறுமனே அசைவில்
ஒளித் துணுக்குகளை விசுறும்
ஒரு மின்மினியாய்
வாழ்க்கை வெளியில்
வசித்து விட்டுப் போகிறேன்
நீ விட்டுச் சென்ற வெற்றிடத்தில்!



செவ்வாய், 26 மே, 2015

அமைதி இழந்த பொழுது.

நடைமுறையிலுள்ள எல்லாம்
முறைமைகளாக மாறி
பெரும் பயத்தை தோற்றுவிக்கின்றன

வாழ்வு பற்றிய கனவில்
இழப்பை தவிர
எதையும் யோசிக்க முடியாதபடி
ஆதிக்கத்தை கூர்மையாக்கி
வைத்திருக்கிறது காலம்

மொழிகளாலும்,சாதி பேதங்களாலும்
ஆஸ்த்தி,அந்தஸ்த்து என்றும்
மனிதத்தை கூறுபோடும்
நடைமுறை சிக்கல்கள்

பணத்தால் மட்டுமே
ஓரளவேனும்
வாழ்வை தக்கவைக்கலாம்
என்றாகிப்போனதோர்
பொதி செய்யப்பட்ட ஜீவிதம்

செம்மையாக்கப்படாத
இந் நாழிகைகளில் சாத்தியமற்ற
ஆசைகளோடு மனசு
இறுகி இருக்கிறது பாறையென...

அச்சுறுத்தலுக்குள்ளான இக்கணங்களில்
இழக்கவென்று
உயிர் தவிர
ஒன்றும் இல்லா நிலையிலும்
இயல்பான விடயங்கள் கூட
பாரிய அழுத்தம் தந்து
பயம் காட்டுகின்றன

எதற்கும்
முன் நின்று முகம் காட்டி
எதிர்க்க திராணியற்ற இயலாமை

குறிப்பாக;
நிறைவேறாது என அறிந்தும்
நீ என்மேல்
வலிந்து தினித்துவிட்டுப்போன

காதலும்தான்!

புதன், 13 மே, 2015

நிகழ்காலத்தில் வசிப்பவனின் விதி.



இழப்பின் பெரும் துயர்
நிரம்பி வழியும் மொழியால்
சிக்கலான கணக்கொன்றை
காலத்தின் முன் போடவேண்டியாயிற்று,
இலகுவாக முடித்து விட தக்கதாயும்
பிழைத்து விட வாய்ப்புகள் அற்றதாயும்
எண்களை இட்டிருப்பினும்
கணக்கு பிழைத்தே போகிறது

இன்றைய நாளின் இயந்திர உழைப்பின்
பெருகும் சொப்பனங்களில் லயித்து
வருமானத்தை கூட்டிப் பார்ப்பதற்குள்
கழிபட்டுப் போகிறான்
தான் வகுத்த கணக்கின் முன்

வழிநெடுக குறுக்கிடும் சிறு பராய புள்ளிகளை
பூச்சியங்களாய் பெருமானமற்ற
பொருளாக்கி விரட்டி விடினும்,

பெரும் எண்பூதங்களை சமாளிப்பதில்
நடைமுறை சிக்கல்கள் பற்றி படர்ந்து
ஊழியாய் எழுகின்றன

அந்நொடியே மீள் திரணியற்று
நொடிந்து விழ
பொய் கணக்கொன்றை போட்டவனாகிறான்

சுயம் இளந்து பிதற்றுபவனின் துயில்
பயங்கரங்களின் கொலைக்களமாகின்றன
கழுத்தை இறுக்க ஒரு கயிறும்
காவ நான்கு உறவும்
தவர்க்க முடியாது
தன்னுடன் இருப்பது போலான கனவிலிருந்து
மீளவே முடிவதில்ல

ஒவ்வொரு பின்னிரவிலும்