புதன், 29 ஆகஸ்ட், 2012

என் இரவுகளை குடித்த நுளம்பு.


ஒரு சாலையோர சந்திப்பில்
கண்களால் கடந்து போன
அதிபயங்கரங்கள் நிறைந்த நிகழ்வு அது
கனவிலும் எண்ணியிருக்க வில்லை நான்
இத்தனை கவலைகளை தரும்
காரியமாகுமென்று.........

ஒரு தேர்ந்த கவிஞனைப்போல்
இப்போதெல்லாம்
கவிதைகள் எழுதுகிறேன்
விடிவதற்குள் கிழித்தெறிந்தும் விடுகிறேன்
நிலவை பூமிக்கு இறக்கின்றேன்
நட்சத்திரங்களிடம்
நிலவு அழகில்லையென்று
குறை கூறி கோபப்படுகின்றேன்

முன்பு இருந்த முகம்
இப்போது இல்லை என்னிடம்
அமிர்தத்தையே அருவருப்போடு
அணுகுகிறேன்
பசிக்கப்பசிக்க ஒரு பட்டினி விரதம்
எதற்குள்ளும் இறங்காத நான்
இரவுகளுக்காக ஏங்குகிறேன்
இருளுக்குள் தூய்ந்து தேங்குகிறேன்

செடிகளே சேதாரங்கள் பற்றி
சிந்திக்காத பொது
வண்டுகளை துரத்தி,துரத்தி
பூவினை காத்து பூரிப்படைகிறேன்
ஒன்றுமே புரியாத ஒன்று
என் மூளையின் மூலையில்
கூடாரமடித்து குந்தியிருக்க வேண்டும்
இல்லையென்றால் எனக்கு எதற்கு
இந்த வேண்டாத வேலைகள்?

சிந்திக்கத்தெரியாதவன் என்று
நீங்கள் கூட என்னை நிந்திப்பீர்கள்
நூதனமாக நுழைந்து
தினம்,தினம்
என் இரவுகளை குடித்து ஏப்பமிடும்-அந்த
சுடிதார் நுளம்புக்கு புரியும்
இந்த கவிதைக்குள் இருக்கும் சூத்திரம்.



சனி, 25 ஆகஸ்ட், 2012

கூத்தாடிகளின் காலம்.




பாலொழுக,தேனொழுகப் பேசி
பாமரரை ஏமாற்றும் லூசி
கூட்டமொன்று புறப்பட்ட காலம்
கூத்தடிப்பார் பாரிருந்து கோலம்
யாருமில்லை இவரைப்போல் என்று
யாசகனைப்போல் வாசல் நின்று
கேட்டிடுவார் தொண்டர்கள் பிச்சை
கேவலத்தை பார்க்க இயலா கொச்சை

பத்தினியின் பிள்ளை போல் வேஷம்
பாமரன் மேல் கொள்வார்கள் நேசம்
முதிர்ந்தவர்கள் கண்டால் ஓர் பாசம்-தேர்தல்
முடிந்த பின்னால் எல்லாமே நாசம்
மண்குதிரை ஏறியிவர் பயணம் 
மடத்தனமாய் ஆனதனால் கவனம்
வாக்குரிமை உள்ளவர்காள் தருணம்
வழங்கிடுவீர் நல்ல பதில் சகுனம்

வாயிலில்லை நல்லதொரு சுத்தம்
வம்பளப்பார் எதிர்த்தவனை நித்தம்
தேவிடியாள் பெற்ற பிள்ளை போல
தெருவில் நின்று கூத்தடிப்பதால
கட்சியதன் நற்பெயரோ கெடும்
கடைசியிலே தோல்வி கையை சுடும்
நிலைமைதான் அவர்களுக்கு வரம்
நினைவில் வை தான் வளரும் மரம்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை!



 
பசி மறந்து,துயில் துறந்து
பாவக்கறை களைந்து
பரி சுத்தம் ஆனவராய்
பன்பாலே சிறந்தவராய்
ஒருமாசம் முழுக்க
உண்ணா பகல் கழித்த
மகத்துவ நோன்பின்பால்
மன்றாடி யா இறைவா
நேசக்கரம் நீட்டி நினைந்தழுது
நெஞ்சுருகி பிரார்த்தித்த
உலகத்து முஸ்லிம்கள்-நாம்
ஒன்று கூடி இப்பொழுது
"ஷவ்வால்"தலைப்பிறைக்காய்
சங்கமித்து நிற்கின்றோம்

"அல்ஹம்து லில்லாஹ்"
"அல்லாஹ்"பெரியவனே!
நாங்கள் உனக்காக
நாவிற்கு விலங்கிட்ட
மாதத் தவத்தை
மா பெரியோன் உன்னிடத்தில்
கையளித்து விட்டோம்
கறையிருப்பின் பெருமனதாய்
ஏற்றுக்கொண்டு இறைவா-எம்
ஏடுகளை நிறைத்திடுவாய்

சுவனத்து பூஞ்சோலை
சோபனத்தை அடைவதற்காய்
அவனியிலே உழைக்கின்ற
அடியார்கள் அனைவருக்கும்
முஸீபத்தை போக்கி-நல்
மூமின்களாக்கி
'பரக்கத்தை' ஈந்து
படியளப்பாய் 'ரஹ்மானே'

சட்டம் சொல்வது போல்
'ஷக்காத்' கொடையளித்து
அன்பு உறவுகளை
ஆதரவால் அலங்கரித்து
புத்தாடை தரிப்பித்து
பூ மணம் பூசி நன்று
பெருநாள் எடுக்க
பேராவல் கொண்டுள்ளோம்
எங்கள் அனைவரதும்
இதயத்து பிரார்த்தனையை
ஏற்றுக்கொண்டு நீ
எம் வாழ்வில் மாற்றங்கள்
காட்டிக் கபுலாக்கி
கரை சேர்ப்பாய்"யா அல்லாஹ்"





புதன், 15 ஆகஸ்ட், 2012

மனம் நனைத்த மழை.



உலர்ந்திருந்த ஒரு பொழுது
முகில்கள் வானில் முளைக்க
மயில்கள் ஆடின களைக்க
காற்று கூடி கலைக்க-நீர்
பூக்கள் வானம் தெளிக்க
மழை,மழை,மழை
பூமிக்கு வான் நீட்டும்
புதினப் பூச்செண்டு
இயற்கை எழுதும்
ஈரக் கவிதை
குளிரூட்டப்பட்ட கூதல் சந்தம்
தலை துவட்டியபடி
மனம் ரசிக்கும் ரம்யம்


மரங்களுக்கு வானம் வழங்கும்
தண்ணீர் தர்மம்
இயற்கைக்கு இயற்கையின் ஈகை
மழை
அழகான ஆனந்தம்
இதமான இன்பம்
துளி,துளியாய் சிலிர்க்க வைக்கும்
தூவான சில்மிஷம்
புத்துணர்ச்சி தந்து மனம் நிறைக்கும்
புனித நீர் புதையல்

மரங்கள் சிரிக்க
இலைகள் முளைக்க 
கிளைகள் விரிக்க
மொட்டுகள் முகிழ்க்க
பூக்களாய் மகிழக்க 
இயற்கை செழிக்க
மழை,மழை,மழை

மா  களனிகள் நிறைக்க
மா மருதம் நிலைக்க
மகா பஞ்சம் பறக்க  வேண்டும்
மழை,மழை,மழை.





திங்கள், 13 ஆகஸ்ட், 2012

தொலைந்து போவதென்னும் வாழ்வு!



குடும்பங்கள் கூடி குசு,குசுத்து
பலகாரங்கள் பரிமாறி
நாள்,நட்சத்திரம் பணம்,பதவியென
எல்லாம் இணங்கிய பின்
திகதியையும் தீர்மானித்து விட்டீர்கள்

அம்மி மிதித்து,அருந்ததி பார்த்து
மேள,தாளங்களோடு
என்னை எங்கோ
அனுப்பி வைக்கத்தானே
இத்தனை அமர்க்களம்?

சரி....
வழியனுப்பும் இடத்துக்கே
வந்து விட்டீர்கள்
பெற்று,பெயரிட்டு பிரியமுடன் வழர்த்த
உங்களை கேட்கின்றேன் உரிமையோடு
இப்பயணத்தின் தூரத்தை,அல்லது முடிவை
யாராவது எதிர்வு கூறுங்களேன்
என் கனவுகளையும்,எதிர் பார்ப்புகளையும்
இங்கேயே புதைத்து விட்டு
புறப்படுவதற்கு?!

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

புழுவின் உணவு.



 பூச்சிகள் பீச்சும்
ஒரு புழுவுடன் வசிக்கிறேன்
பழகிப்போன விதியென்றாகிற்று.

அருவருக்கத்தக்க,விலக்கப்பட்ட
எல்லாவற்றிலும் மேய்ந்துவிட்டு
அருகே நெளியும் புழுகண்டு
உடல் கூனிக்குறுகும்
விம்மிக்கசியும் மனசை பெற்றோர்களின்
வறுமையால் ஒற்றிக்கொண்டு
வாழவேண்டியதாகிற்று 
வாழ்வென்பதால்.

விளக்கணைந்து
குறுக்கீடுகளற்ற நிசியில்
நிரம்பித்ததும்பும்
மௌனத்தினூடே தாவி ஊரும் புழு அது
என்னை இலையாய் கிடத்தி
இரா முழுக்க
இரகசிய மர்மங்கள் துளாவி
பசியாறி மகிழும்
......................................,
விடிய தாழ்திறக்கும் கதவின் பின்
விரிந்து கிடக்கும் பழுக்கள்
இதயத்தை அழுத்தும் சுமைகளாக!

எனது பகல் முழுவதையும்
அருந்தி ருசிக்க
மனையும்,பிள்ளைப்பூச்சிகளும்
இரவை தின்று தொலைக்கும்
அருகிலுள்ள புழு.

இப்படித்தான் ஒவ்வொரு பொழுதுகளும்
புழுவின் உணவாகி
செ'ரி'(த்)துக்கொண்டிருக்கின்றேன்.

துயர் மிகு பாடல்.




காதலில் பிரிவு கடினமானது
ஊறி உருகி உதிர்கிற படி உயிர்.
நிமிஷா,நிமிஷ  நெருக்குதல்களில்
வருஷங்கள் அனுபவித்த வதை!

மிகவும் அந்நியப்பட்டுப்போன
நமது அன்பு பற்றி
துயர்மிகு விசும்பல்களுடன்
ஒலிக்கின்றது என் பாடல்.

ஆழியில் சுழலும் குமிழியின் தகிப்புடன்
தன் உருவை தக்கவைக்க இயலாமல்
தவிக்கின்றதென் ஆன்மா

இனி.....,
மோட்ஷ விமோசனத்துக்கான
பிரயத்தனங்கள் என்னிடமில்லை;
வாழ்வு பற்றிய கனவை
பிரிவு கலைத்து விட்டது.

தனிமையின் வேக்காட்டில்
உயிர்,உருகி சிதைகிற நிமிஷங்களில்
புழுங்கி வெந்த மனசை நான்
பசியாறிக்கொண்டிருக்கின்றேன்.

வெப்பிசாரக்கோடுகளால்
காலம் நிரப்பி வைத்திருக்கும்
கண்ணீர் வெளியில்
என்னிடமிருப்பது......,
வெறுமையை தவிர வேறில்லை.

உயிரே உனக்கெப்படி அங்கு?

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

யாதுமாகிய நீயே தாயே !


என் அசைவுகளில் நகர்கிற உயிர் நீயெடி
என் நினைவுகளில் விளைகிற பயிர் தாய் மடி 
முதல் அழுகை,முதல் சிரிப்பு,முதல் ஊண்
முதல்,முதலாய் நானறிந்த புது உலகம் தாய்

உன்னிலிருந்து பிரித்து எனக்குள் ஊற்றினாய்
உயிரை பிழிந்து பரிவை தினம் நீ காட்டினாய்
என்னை மதித்து அதிதியாய் நீ மாற்றினாய்
உன்னை உருக்கி எனக்குள் தீபம் ஏற்றினாய்

உன்போல் தாயே பாசம் ஊட்ட-இந்த 
உலகினில்  யாரும் நிகராய் இல்லையடி
உண்மையை சொன்னால் தாயே நீதான்
உயிரின் வாழ்நிலை எல்லையெடி

கண்ணின் மணிபோல் காப்பதனாலே
கருணையில் நீயொரு வள்ளலெடி-உன்
காலடி மீதினில் சொற்கம் என்றால்
பெருமையில் நீ பெரும் பெருமையடி

சந்தன ஜோதி சமரச ஜாதி தாய் நீ-என்
சாதனைக்கெல்லாம் தாயே நீயே ஏணி
உந்தன் பிள்ளை ராஜ்ஜியத்தில் நீ ராணி-என்
உயிருள்ள வரையில் சுமப்பதென் கடமை வா நீ.





திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ஒருத்தியின் கண்ணீர் சமுத்திரம்.


 ஊறிக்கசிந்த விரக தாபத்தில் தனித்தபடி
இளமையை தின்றுகொண்டிருக்கும்
பசி எனது

நிறமிழந்து மங்கிப்போகும் இத்தேடலில்
நீதானென்று அனுமானிக்கமுடியாது
ஒவ்வொரு முறையும்
தோற்றுபோகிறதென் விழிகள்
உன் குரல் பருக எத்தனித்து தாகித்தபடி
செவிடாகிக்கொண்டிருக்கிறதென் புலன்கள்
 பூப்பானதிலிருந்து
இன்றைய தேதிவரை புதிது,புதிதாய்
பகிர்ந்து கொள்ளவென்று நதிகளை இணைத்து
ஒரு கடல் முத்தம் தேக்கிவைத்திருந்தேன்

 என் தேடலின்
கனவிலும் உன்னை காண வில்லை
இப்போதென்ன……..,
கயல்கள் குதித்த காலம் மாறி 
முயல்கள் பதுங்க கரைகள் வளரும்
காடாகும் இனி இந்த சமுத்திரம்.


வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

எனது நிலை!



 கடைமைக்காக
இணைந்து பிரியும் கணவன்,
பெற்றதற்காக
பணிகள் எதிர்பார்க்கும் பிள்ளைகள்

குதர்க்கமாக பேசி நாளும்
வார்த்தையால் குதறியபடி
கூட இருக்கும் அத்தை

வரதட்சனை பாக்கியை
ஞாபக மூட்டி நகைக்கும் மாமா

"ஏண்டி வந்த"என்ற கேள்வியோடு
தாமதிக்க விடாமல் விரட்டும்
தாய் வீடு

அனைத்தையும் தாண்டி
..............................................,
தினமும்
அணையாமல் கனன்றுகொண்டிருக்கும்
அடுப்பங்கரையில்
வறுபடுகிறது என் வாழ்க்கை.