திங்கள், 31 டிசம்பர், 2012

கவரிமான் சாதி..!



நீ...
மரியாதைக்குரிய
மானினம்
வாழ்வோடு போராடி
வசைகளுக்குள் நீராடி
தோற்றுப்போக விரும்பாமல்
உயிர் நீற்றுப்போனாய்-அதனால்
நீ கவரிமான் சாதிதான்.

மோக பிசாசுகளின்
முகமூடி கிழித்து விட்டு
அகம் மூடி மண்ணறைக்குள்
ஆசுவாசம் அடைந்து விட்டாய்

அருமை மகளே
ஆருயிர் சகோதரியே
பரஸ்பரமாயிருந்த
பண்புள்ள தோழியே
விசுவாசிகள் அற்ற ஊரில்
வசித்து சுவாசிப்பதை விட
சாவின் மடியில் சரணடைவது
சாத்வீகமானது என்பதை நீ
சத்தியமாக்கி விட்டாய்

எவரும் ஏதும் சொல்லி
ஏளனம் செய்யாவாறு
உதிர்ந்து உன்புகழை
உயரத்தில் ஏற்றி விட்டாய்
சிதைத்தவர்கள் பதை,பதைக்க நீ
சிகரத்தில் ஏறி விட்டாய்

இதழ் அவிழ்க்கும் முன்னமே
காம்போடு கருகிய-உன்
கனவு மொட்டுகளை,
வாழ்வு பற்றிய
வசந்த சுகந்தங்களை
காவுகொண்ட அந்த
காவாலி கும்பலினை
பலி பீடம் ஏற்ற சொல்லி
பறை ஒலித்து மாண்டு விட்டாய்
இறை இடத்தில் மீண்டு விட்டாய்

செவ்வாய், 25 டிசம்பர், 2012

சுனாமி நினைவுகள்.



           2004-12-26
அது ஒரு ஞாயிறுகாலை
சனியாய் விடிந்தது
பிணியாய் முடிந்தது 
இப்போதும் எண்ணிப்பார்க்கையில்
நினைவில் சுனாமியாய்
அத்து மீறி அலையென எழுந்து
உயிரை உலுக்கி விடுகிறது 

மகிழ்ந்தபடி அலை கையசைத்து
மடிநிறைய மீன்கள் தந்த கடல்
ஊர் நிறைய மரணங்கள் தந்த
ஒரு மாயப்போழுது

ஆசியாவின் கரைகள்  எங்கும்
கண்ணீரின் ஓடங்கள் கரை ஒதுங்கி
தரைதட்டி தவித்த தருணங்கள் அவை

கடலின் தீராபசிக்கு
சில நாடுகளின் பல..  ஊர்கள்
ஊணாகி உரு அழிந்து
வீணாகிப்போன விபரீதம்
நிகழ்ந்த நிமிடங்கள் அவை
நினைக்கும்போது
நெஞ்சில் நீர்முட்ட
உடைந்து விழிகள் 
உருகி வடிகின்றன

அன்னைபோல் எண்ணி
அனைவராலும்
உயிருக்கு மேலே
உயர்த்திப்பிடித்த கடல்
சீற்றத்தொடெழுந்து
சிறைபிடித்து உயிர்களினை
குஞ்சு,குமரை
குடிமறவா பாலகரை
பிஞ்சுத் தாய் மாரை
பிரித்து உறவுகளை
சிலுவையில் அறைந்த
மாயப்பொழுது
மனசைவிட்டு மறையாத
காயப்பொழுது...........

அது சரி ..ஏ கடலே
தூத்து வாரி உயிர்களை
அள்ளிக்கொண்டு போனாயே
திருப்பித்தரும் தீர்மானத்தோடா?!


வெள்ளி, 21 டிசம்பர், 2012

உயிர் தந்த உறவுக்காரி.




உயிர் தந்த உறவுக்காரி.
பாசமுடன் தாயவளோ பிசைந்து விட்டாள்
பாத்திரமாய் பாரினிலே ஆக்கிவிட்டாள்-என்
வாழ்க்கைக்கு சொந்தக்காறி ஆகிவிட்டாள்
வரம் போன்று நான் போற்ற தேறிவிட்டாள்
நற்பண்பு சரிவின்றி தோற்றுவித்தாள்
நான் வாழ்த்த வரியின்றி தோற்கவிட்டாள்
உயிருக்குள் உயிர்வைத்து உயிராக்கினாள்
உதிரத்தை அமுதாக்கி பயிராக்கினாள்
அம்மாண்ணும் உறவாக உறவாகினாள்
அன்புக்கு அவளேதான் நிகராகினாள்
கவனத்தை முழுதாக எனக்காக்கினாள்
சுவனத்தை பாதத்தில் உருவாக்கினாள்
நிலவுக்குள் வழிகின்ற ஒளியாகினாள்-என்
நிழலுக்குள் நெளிகின்ற உருவாகினாள்
அனலுக்குள் குளிர்கின்ற பனியாகினாள்
அழகான தாயென்னும் கனியாகினாள்
என்பார்வை தெளிவாக வழியாகினாள்
எப்போதும் தெவிட்டாத மொழியாகினாள்
பசிக்கின்ற பாத்திரத்தில் ஊணாகினாள்
கசக்கின்ற மாத்திரையில் தேனாகினாள்
பிணிவந்தால் அவளேதான் மருந்தாகினாள்
பிரியத்தில் கடல்போல உரு மாறினாள்
தகுதிக்கு மேலாக எனை நோக்கினாள்
தான்பிள்ளை ஊர் போற்றும் மகனாக்கினாள்

வியாழன், 20 டிசம்பர், 2012

ஓவியத்தின் குமுறல்.




கிறுக்கியவன் பிசிறிய
வர்ணங்களுக்குள்ளிருந்து
உன்னை வசீகரித்ததாய்
என்னை எடுத்து
சட்டங்களிட்டு நாற்திசையும்
கண்ணாடி சிலுவையில்
அறைந்து வைத்திருக்கிறாய்

ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் அழகு
அற்புதமாய் இருப்பதாய்
காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஓவியம் பற்றி
காண்பவர்கள் கருத்து பகிர்கிறார்கள்

வரைந்தவனும்,வாங்கிய நீயும்
பாராட்டை பங்கிடுகிறீர்கள்
சட்டங்களுக்குள் மௌனித்து
உடைந்து சிதறும் உணர்வு
என்னுடையது என்பதை
அறியத்தான் ஆளில்லை.

அதன் மொழியறியாமல்
எல்லா இல்லங்களின் சுவர்களிலும்
ஒரு ஓவியம்
மௌனித்தபடி
தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
என்னைப்போல்!

புதன், 19 டிசம்பர், 2012

அது வரும்...!



 ஒரு பறைவையின் இறகு 
உதிர்வது போல்
ஒரு பூவின் இதழ் விரிவது போல்
சிறு பசியில் குழந்தை
அழுவது போல்
பெரும் நிசியில் மௌனம்
நுழைவது போல்
அது வரும்

இருண்ட வானம் கலைவது போல்
மிரண்ட காளை அலைவது போல்
மூர்க்கத்தனத்தின் பிரளயத்தோடும்
பார்க்க இயலா பரபரப்போடும்
அது வரும்
தவணை கேட்க மறுத்த நொடியாய்
தலையணையோடு சரித்த படியாய்
தாலாட்டு கேட்டு சிரித்த வடிவாய்
தாயவள் வயிற்றில் தரித்த படியாய்
அது வரும்


துயரத்தின் உயரத்தையும்,
நீளத்தின் ஆளத்தையும்
வாழ்க்கையின் கோலத்தையும்
அறிந்துணர்ந்து மனிதன் ஆராய
அது வரவேண்டும்
அது வந்தால் தான்
வாழ்க்கையின் மெய்,பொய்
இரண்டையும் இனம் பிரிக்க
ஏதுவாகும் இருப்பவனுக்கும்,
மண்ணுள் செரிப்பவனுக்கும்
அதனால் அதுவரும்
நீங்கள் அழைக்காமல்
மரணம் என்னும்
மலர்செண்டு கொண்டு
உங்களை அடைய அது வரும். 



மருதாணி புள்ளிகளும் உன் வெட்க சிரிப்பும்.



சாலையோர சந்திப்பில்
கண்களால் கடந்து 
சிரிப்பால் நீ..
நட்சத்திரங்களை உதிர்த்துவிட்டாய்
எனக்குள் பௌர்ணமிகள் உதித்தன
கனவுகளின் சொற்காதேசத்துக்கு
கைகோர்த்து என்னை
அழைத்து செல்கின்றன..
உன் வெட்கம்.

அன்பே.....
இறந்து இன்னுமொருதடவை
பிறக்கலாம் போலிருக்கிறது
உன்னை அணு,அணுவாய் தரிசிக்க

மருதாணி புள்ளிகளுக்கிடையில்
சிவந்துகிடக்கும் உன் எழில் கண்டு
பூக்கள் இனி பொறாமைப்படும்
உன்னிடம் தோற்க விரும்பாத
குயில்கள் இனி ஊமையாக உலவும்
மோட்சமடைந்த உனது
கால் கொலுசின் சிணுங்கல்களில்
பறவைகளின் பாடல்
தினம்,தினம் என்னை
தவிப்பிலாழ்த்தி தாலாட்டுகின்றன

ஓடைகளில் உலவி தாவிக்குதிக்கும்
மீன்களுடன் விளையாட துடிக்கும்
மனசு என்னுடையது
இன்று உன்
பூப்பெய்திய புன்னகையின் பின்
மனசும்,வயதும் ஒன்றாய் இணைந்து
ஒற்றை வரவுக்காய்
இரட்டைத்தவம் இருக்கிறது

வந்து போ என் வாசல் பக்கம்
காதலிக்க வேண்டாம்-ஒரு
கைகுலுக்கலாவது  தந்து
நீ வாழும் ஊரில் வசிப்பது
எனக்கு
பெருமைக்குரிய பெறுபேறு.












திங்கள், 17 டிசம்பர், 2012

விலகி நில்!


ஒவ்வொரு இரவிலும் பூக்கூடைகள் 
இறக்கி வைத்தாய்
என் மன வாசலெங்கும் வாசம்
சொற்க வசம் ஏகிய கனவுகள்
நீ தந்தாய்......
என் வாழ்க்கை திரண்டு, முற்றி
அர்த்தமாகி விட்டதென்ற ஒரு
அநியாய கற்பனையில் கனிந்தேன்

குறும் புன்னகை வீசி 
சூடான பானத்தை ஆறிய
பார்வையால் பருகி
குடும்பத்தை அனுப்பி பேசுவதாக
குறிவேறு சொல்லி குடிபெயர்ந்தாய்

நாற்திசையும் முற்ற வெளியெங்கும்
நம்பிக்கையின் வேர்கள் நட்டாய்
சுற்றத்தினர்  முகங்களில்
சுமுக புன்னகையின் பூக்கள்
எனக்குள் பட்டாம் பூச்சிகளின் பறத்தல்

வந்தவர்கள் உன் வாக்குமூலத்தை
சமர்பித்தார்கள்
என்னை உயிருடன் எரிக்க
சிதைக்கு வைக்கும் சிறு தீயாய் ....!
பொறிகலங்கி  போனேன் நான்
அசையும் வாகனம்,
அசையா சீதனம்-சீர்வரிசை
போதாதற்கு என் அழகை விமர்சித்து
ஒரு ஆச்சரியகுறிப்பு 

நிறங்களை மொழிபெயர்த்து
விமர்சித்த உன் கூற்றை
நான்  ஆட்சேபிக்கின்றேன்

என் கருமையை வசைபாட
உன்னை நான் நியமித்தாய்
நீ  நினைத்திருக்கிறாய்
உன் அறியாமையை
பறைசாற்றியபடி..............,

கிழடாகிப்போன உன்னையும்
மலடாகிப்போன உன் மனசையும்
கட்டிக்கொண்டு காலமெல்லாம் அழ
நாதியற்றவள் என்று நீ
நம்பிக்கொண்டாய் போலும்?
சீ..கேவலம்
விமோசனம் வேண்டும் விலகி  நில்!


புதன், 12 டிசம்பர், 2012

கிராமத்து காட்சி பல..கண்டேன்!

நாற்று வழி விளை நிலங்கள்
சோலை கண்டேன்
காற்று வழி நறுமணங்கள்
லீலை கண்டேன்

ஊற்று வழி நீர் வழிய
ஓடை கண்டேன்
சேற்று வழி கதிர் விளைய
வாடை கண்டேன்

பாட்டு மொழி புலவனைப்போல்
உழவன் கண்டேன்
மேட்டு வெளி வயல் நிறைய
பகலோன் கண்டேன்

 காட்டுமரம்  வழர்முறையின்
பழக்கம் கண்டேன்
வீட்டின் உள்ளே மாதர்களின்
ஒழுக்கம் கண்டேன்

வாட்டுகிற பஞ்சத்தை
ஓட்டுகிற படைகள் கண்டேன்
தூற்றுகிற நெஞ்சத்தை
போற்றுகிற முறைகள் கண்டேன்.

குறை-சாட்டுகிற மக்களற்ற
குக்கிராமம் என்பேன்
பறை-வேட்டொலிக்க சொல்வேன்
இது பொற்கிராமம் என்பேன்
 

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

காற்றின் வலி!



என்னை அடக்கி வைக்க எத்தனிகின்ற
பெரும் முயற்சிகளை
தோற்கடித்தபடி
ஒலிக்கின்ற மொழியெனது

எந்த பூச்சாண்டிகளுக்கும்
அடிபணிந்து என் சுதந்திரத்தை
அடகுவைக்க இயலாதென்னால்
நெருக்கமாய் இருந்து சுவாசிக்கும் சக்தியும்
நெருப்பையே நெருங்கி ஊதிவிடும் உக்தியும்
தெரிந்தது எனக்கு மட்டும்தான் இங்கு

ஐம்புதங்களிலேயே உங்கள்
புலன்களுக்கு புலப்படாத புதினம் நான்
அளவு கருவிகளையே மீறும்
அதிசயம் தான்
எதிர்வு கூறுபவர்களையே எதிர்த்து மீறும்
வல்லமை பெற்ற வரலாறு எனது
மூங்கில் துளை தாவி இசை முத்தெடுக்கவும்
மூக்கின் வழி  ஏகி உயிர் வித்தெடுக்கவும்
என்னால்  இயலும்

நான் மழையோடுகலந்து நனைகிறேன்
வெயிலோடு உலர்ந்து விளைகிறேன்
மரங்களோடு சரசம் செய்து மகிழ்கிறேன்
மலர்களோடு உரசி தினம் மணக்கிறேன்
மனங்களில் கூடாகி
உயிர்கள் வசிக்க உறைவிடமாகிறேன்
நான் சுழன்றால் சுறாவளி
சுமுகமானால் தென்றல்
இளகினால் இதம்
இறுகினால் ஜடம்

காலம் காலமாய் உங்களுடன்
கைகுலுக்கி
ஆயுளுக்கு அருகாமையில்
தூய்மையோடு
துணை நிற்பவன் நான்
ஆனால்; இப்போதெல்லாம்
அளவுக்கு மிஞ்சிய உங்கள் ஆசை
கலப்படத்தை என்மீதும்
கரைத்து கலந்து விட்டீர்கள்
சுவாசிக்க முடியாது தலை சுற்றுகிறது
உங்களோடு எனக்கும்

ரசாயனங்கள்  கலவை செய்த படி
குப்பைகள் தெருவில் கொட்டி
ஊத்தைகளை சலவை செய்யாது
ஆயுளை குறுக்கி
அடுத்த சந்ததியை முடமாக்கும்
கனவான்களே,பணவான்களே
இப்போது சொல்லுங்கள்
உங்கள் வாழ்க்கையோடு
வலை பின்னலாயிருக்கும் என்னை
கையாலாகாதவன் என்று
கணித்து விடலாமா?
உங்கள் நினைவுகளுடன்
உழலும் என்மேல் சுமைகளை
திணித்து விடலாமா?!