புதன், 2 ஜனவரி, 2013

அகதியான கனவுகளுக்குரியவன்.



அழகான கற்பனைகளுடன்
துயிலுக்குள் பாய்விரித்து
நிலவை தலையணையாக்கி
நட்சத்திரங்களின்
காலுன்றியபடி
கண்மூடுகிறேன்.....
சிம்ம சொப்பணங்களில்
வாழ்தல் என்பது மிக அலாதியானது.

எவராலும் புரிந்து கொள்ள இயலாத
புதினம் அது
யாரும் மொழிபெயர்க்க முடியாத
மொழியது
பருவங்களின் இடபெயர்ச்சியில்
சில மாற்றங்களோடு என்னுடனயே
வளர்ந்து விட்டது
அது கனவில்லை
என்னை அணைத்தபடி
உறங்கும் குழந்தை

அப்போதெல்லாம் அது
அழகானதாகவும்,
ஆரோக்கியமானதாகவும்
இருந்தது என்னிடம்
 நான் அதை நெஞ்சில் பதியமிட்டு
கண்களுக்குள் வளர விட்டேன்

பின் அதைவிட்டும் பிரியமுடன்
பிரிய வேண்டியதாகிற்று
வாழ்வென்பது
பிரிதலும்,சேர்தலும் தானே?

ஆயினும் என் அவதானிப்புகளில்
கனவு பெருத்திருந்தது ஒரு
பீனிக்ஸ் பறவை போல்....,

பின்வந்த பொழுதுகளின் புலர்வில்
நாறிக்கொண்டிருக்கும்
உலராத மலமாய்
துன்பியல் நிகழ்வுகள் தன்னை
காயப்படுத்தியதாய் சொல்லியழுது
ஒப்பாரி வைத்து ஓலமிட்டது

எனக்கு மனசில்லை அதை மீண்டும்
வாரி அணைத்து வாழ்த்த
தூக்கி எறிந்து விட்டேன் எங்காவது
தொலையென்று.

நீங்கள் இனி பார்ப்பீர்கள்
அநாதையாகி எதிலியாய்
அலைந்து திரியும் என் கனவு!