ஞாயிறு, 27 ஜனவரி, 2013

காத்திருத்தலின் வலி !





















என்னை உலகமாக சித்தரித்தாய்
நிலவை,நதிகளை,நட்சத்திரங்களை
பூந் தோட்டங் களையெல்லாம்
இடண்டாவதாக்கி ஒதுக்கினாய்
என்னை முதன்மை படுத்தி.
அதை உண்மையென
ஒப்புவிப்பது போல்
காலமும் நம்முடன்
கைகோர்த்து கிடந்தது
காதலில் தூய்த்து.

பெரும் கோடையின்
பின்வந்த நாளொன்றில்
நிரம்பிக்கிடந்த மனசுக்கு தகுந்த படி
இடைவெளிகளை பரிசளித்து
தொழில் தேடி தூர ஏகினாய்
விரைவில் திரும்பும் விடை வாங்கி.

விரலுயர்த்தி காட்ட விரும்ப வில்லை
எங்கேயோ தவறு
நேர்ந்திருக்க வேண்டும் 
தொடர்பை நீ துண்டிக்கும் அளவு

ஆயினும்
தவமென தனித்து
உன் ஞாபகங்களோடு
வாழ்தல் என்பது எனக்கு வரமாகிற்று
அதனால்தான்
தூர்ந்து போன பருவத்தை
தூக்கி பிடித்தபடி என் இரவுகளை
தனித்து விட்டிருக்கிறேன்

கனவுகளை தேடியலைந்து
தோற்று திரும்பும் கணங்களில்
வெப்பிசாரங்களால் நிரம்பி வழியும்
என் நிமிஷங்கள்...............

புலர்கிற பொழுதுகளில் நீ அனுப்பும்
அலட்சியங்களை சேமித்து
காத்திருத்தலின் வலிகளோடு
புளுங்கி வெந்த மனசை இப்போது
பசியாறிக் கொண்டிருக்கின்றேன்.

இன்றோ,நாளையோ அல்லது
இன்னும் சில காலத்தின் பின்
தகவல் அனுப்புவாய்
என் இருப்பை சந்தேகித்தபடி
அப்போது நான்
மரணத்தின் பிடியில் அகப்பட்டு
செத்துக்கொண்டிருப்பேன்
எப்போதும் உன்னை
நினைத்துக்கொண்டிருந்த
பாவத்துடன்!