புதன், 5 செப்டம்பர், 2012

என் குடியிருப்புக்கு உன்னை அழைக்கிறேன்.


வேர் அறுந்த வலியுடன்
வசித்தல் என்பது எனக்கு
வாழ்வாகிற்று.....
உறவற்ற அன்றில் நான்
ரணங்களின் குறிப்புகளோடு
அழித்து,அழித்து எழுதப்பட்டிருக்கின்றன
எனது நாட்கள்.

சொப்பனங்களில் லயித்து
வெகுமதிகளில் சுகித்து
ஒரு பறவையாய் சிறகடிக்க
இறக்கைகள் கத்தரிக்கப்படுவதற்கு-முன்
எனக்கும் இருந்ததொரு எண்ணம்

மன்னிக்குக,
வசீகரங்களை தூவி நீ வாழ்த்த
ஏற்று வணங்கி வரவேற்கும் நிலையில்
இப்போது என் இருப்பு இல்லை.


உன் பூக்கூடைகளை சுமக்க
மனசின் கை
ஆசையோடு அணுகுகிற போதும்
வலிமை இழந்த தகிப்பில்
மீழ்கிறேன் பழைய இடத்திற்கே!

என் இரவுகளை பருகிப்,பருகி
தனிமை வயிறு முட்டிச்சாகும் இனி..
இலகுவாக யாரும் வந்தடைய
வசதியாக்கி என் தேசமே
அமைவிடத்திற்கு
அடையாளமிட்டிருக்கின்றது
வழியில் இருக்கிறதென் குடியிருப்பு
வாசல்களே வீடுகளாயிருக்கும்
என் இல்லிடத்திற்கு வா...

காதலோடு அல்ல....,
ஒரு கூடை கைக்குட்டையோடு!