புதன், 7 ஆகஸ்ட், 2013

விட்பனைக்கு ஒரு மனசு!

மனதின் இருப்பு
பிடித்தமானதாய் இல்லை
தேவையற்ற எதையாவது
துரத்திவந்து வாசலில் விட்டு
வேடிக்கை பார்க்கிறது
மறுபடியும் முருங்கை ஏறிய
வேதாளமாய்...!

நாக்கை தொங்கவிட்டலையும்
விசர் நாயாய்
அலைகிறது தெருத்,தெருவாய்
பச்சா தாபங்கள் பழைய பரணில்
கருவாடாய் காய
எச்சில்களுக்காய் எங்கிறது
பிச்சைக் காற பிறப்பு

யாராவது கேட்டால்
சும்மாவாவது யாரேனும்
ஒரு பைத்தியத்துக்கு
கொடுத்து தொலைக்க வேண்டும்
குரங்கு மனசை


ஒரு ஏழைக்கு உதவ இடமில்லை
சீதனமின்றி ஒரு குமருக்கு
வாழ்வளிக்க வக்கில்லை
பெற்றோரை பிரியமாய் பார்க்க
பிரியம் இல்லை
இறைவன் விரும்பத்தக்க கடமை
எதையும் செய்ய வக்கத்த
மண்ணாங்கட்டி மனசு
என்ன மண்ணாங்கட்டிக்கு?

மனசை அது இருந்த இடத்திலிருந்து
எடுத்து விட்டு
கூழாங் கற்கள் இட்டு நிரப்பி
குழந்தைகளிடம் கொடுக்க வேண்டும்

கிலிக்கியாய் கிலிக்கித்திரிய!

வெளிநடப்பு.

உன் செவ்வாயால்
என்னை திங்களென்றாய்
நுரைக்க,நுரைக்க விரும்பி
நதிகள் பெருக்கெடுக்க
மனசின் நாற்திசையும்
பிரவாகித்து பீறினாய் அன்று..

இன்று......................,
புறக்கணிப்பின் பெயரால்
மனசால் திறக்கவிருந்த
கடைசிப் படலையும்
இறுகச் சாத்திவிட்டாய்

மூச்சு முட்டுகிறது
என் காத்திருப்பின்
கடைசித் தருணங்களும் மூழ்க

வாழ்வு பற்றியதான
கனவுகளை கலைத்து விட்டன
இன்றைய உன்
நெருக்கடிகளின் பேரிரைச்சல்

வலியை மொழிய வழியின்றி
குரலை இறுக்கியபடி நாசிக்குள்
நீ மூட்டிய தீ

வேப்பிசார வெப்பம்
கனன்றெரியும் காட்டுத்தீயாய்
உயிரை சிதைக்க ஊளியென..


நம்பவைத்து ஏமாற்றுவதையும்
உலக நீதிக்குள் உட்புகுத்தி
வழக்காக்கத் தக்கதாய் சட்டம் வகுத்து
தண்டனைக்குள்ளாக்கி
புழக்கத்துக்கு கொண்டு வரவேண்டும் இனி..

இப்பவும் உன்னை சபிப்பதற்கு
மனசில்லை .....,
இதன் பின்பும் என்னிடம்
சிநேகம் இருக்கின்றன கடல்போல்
இது கனவாய் இருக்கட்டும் என்றே
பிரார்த்திக்கின்றேன்

உன்மேல் இருக்கின்ற காதலால்!