திங்கள், 3 மார்ச், 2014

தலை துவட்டும் மழை அரசி.

நீர் நேசத்துக்குரிய நெசவாளி

நூதனமாய் வான் ஏறி
‘நீர்’ நூல் திரிக்கவும்
நிதானமாய் தரையிறங்கி
‘வெள்ள’ஆடை  தரிக்கவும்
மழைக்கு மட்டுமே சாத்தியம்

பயிர்களை வாசிக்கவும்
உயிர்களை நேசிக்கவும்
தாகித்தோரை யோசிக்கவும்
பழகியிருப்பதால்
நீர் பொய்க்காத உண்மை
புடம் போட்ட வெண்மை

கடலில் குளித்து
வானில் தலை துவட்டும்
வல்லமை பெற்ற மழை அரசி
நீர் வராத உருக்கு மோட்சமில்லை
ஏன்-நிழல் என்ற முகவரி கூட இல்லை

கீழிருந்து மேலாகவும்,
மேலிருந்து கீழாகவும்
இடமிருந்து வலமாகவும்
வலமிருந்து இடமாகவும்
வெற்றிடங்களை நிரப்பி விடுவதால்
தண்ணீர் வாக்கியங்களால் நிரம்பும்
நீர் குறுக்கெழுத்துப் போட்டி
காற்று வந்து உன்னுடன்
கை கோர்க்கின்ற போதுதான்
குளம்மி வரும் கட்டங்கள் வந்து
குழப்பி விடுகின்றன

வேர்களுக்கு நீர் பூக்கொடுத்து
விருந்து வைக்கவும்
விரல்பிடித்து தளிர் தரித்து
நிலை நிறுத்தி நிற்கவும்
மழை நீர் உம்மால் மட்டுமே
நிதர்சனமாகிறது

மழைக்கு ஏழைகள் எங்கள் மீதே
எப்போதும் இரக்கம் அதிகம்
அதனால் தான்
அடிக்கடி கூரை வழி இறங்கி
குசலம் விசாரிக்கின்றது
எங்கள் தரிசுகளின் தலைகோதி
தானியக் குருத்துகளுக்கு நீர்தூவி
பூவலங்காரம் செய்து
புன்னகைப்பதால்தான்
நாங்கள் இன்று
மனிதம் தொலைந்த மண்ணில்
கொடுமையின் கோடையில் நின்று
துளிர்க்கிறோம் உன் துணையால்

கடலில் குளித்து
வானில் தலை துவட்டும்
மழை அரசியே
நீர் முத்து களை சிந்தி விடுகிறாய்
சொத்துக்கள் பொருள் கூடி
வித்துகள் வெடிக்க
நிரந்தரமாய் தங்கிவிடாமல் வந்து போ
வரண்டு கிடக்கும்
எமது மேய்ச்சல் நிலங்கள் வளம் பெற