செவ்வாய், 26 மே, 2015

அமைதி இழந்த பொழுது.

நடைமுறையிலுள்ள எல்லாம்
முறைமைகளாக மாறி
பெரும் பயத்தை தோற்றுவிக்கின்றன

வாழ்வு பற்றிய கனவில்
இழப்பை தவிர
எதையும் யோசிக்க முடியாதபடி
ஆதிக்கத்தை கூர்மையாக்கி
வைத்திருக்கிறது காலம்

மொழிகளாலும்,சாதி பேதங்களாலும்
ஆஸ்த்தி,அந்தஸ்த்து என்றும்
மனிதத்தை கூறுபோடும்
நடைமுறை சிக்கல்கள்

பணத்தால் மட்டுமே
ஓரளவேனும்
வாழ்வை தக்கவைக்கலாம்
என்றாகிப்போனதோர்
பொதி செய்யப்பட்ட ஜீவிதம்

செம்மையாக்கப்படாத
இந் நாழிகைகளில் சாத்தியமற்ற
ஆசைகளோடு மனசு
இறுகி இருக்கிறது பாறையென...

அச்சுறுத்தலுக்குள்ளான இக்கணங்களில்
இழக்கவென்று
உயிர் தவிர
ஒன்றும் இல்லா நிலையிலும்
இயல்பான விடயங்கள் கூட
பாரிய அழுத்தம் தந்து
பயம் காட்டுகின்றன

எதற்கும்
முன் நின்று முகம் காட்டி
எதிர்க்க திராணியற்ற இயலாமை

குறிப்பாக;
நிறைவேறாது என அறிந்தும்
நீ என்மேல்
வலிந்து தினித்துவிட்டுப்போன

காதலும்தான்!

புதன், 13 மே, 2015

நிகழ்காலத்தில் வசிப்பவனின் விதி.



இழப்பின் பெரும் துயர்
நிரம்பி வழியும் மொழியால்
சிக்கலான கணக்கொன்றை
காலத்தின் முன் போடவேண்டியாயிற்று,
இலகுவாக முடித்து விட தக்கதாயும்
பிழைத்து விட வாய்ப்புகள் அற்றதாயும்
எண்களை இட்டிருப்பினும்
கணக்கு பிழைத்தே போகிறது

இன்றைய நாளின் இயந்திர உழைப்பின்
பெருகும் சொப்பனங்களில் லயித்து
வருமானத்தை கூட்டிப் பார்ப்பதற்குள்
கழிபட்டுப் போகிறான்
தான் வகுத்த கணக்கின் முன்

வழிநெடுக குறுக்கிடும் சிறு பராய புள்ளிகளை
பூச்சியங்களாய் பெருமானமற்ற
பொருளாக்கி விரட்டி விடினும்,

பெரும் எண்பூதங்களை சமாளிப்பதில்
நடைமுறை சிக்கல்கள் பற்றி படர்ந்து
ஊழியாய் எழுகின்றன

அந்நொடியே மீள் திரணியற்று
நொடிந்து விழ
பொய் கணக்கொன்றை போட்டவனாகிறான்

சுயம் இளந்து பிதற்றுபவனின் துயில்
பயங்கரங்களின் கொலைக்களமாகின்றன
கழுத்தை இறுக்க ஒரு கயிறும்
காவ நான்கு உறவும்
தவர்க்க முடியாது
தன்னுடன் இருப்பது போலான கனவிலிருந்து
மீளவே முடிவதில்ல

ஒவ்வொரு பின்னிரவிலும்

ஞாயிறு, 10 மே, 2015

நிலத்தை வாசிப்போம்

புலம் பற்றி 
புகழ்ந்து தள்ளும் நாம் 
நிலம் பற்றி 
நினைத்துப் பார்ப்பதேயில்லை. 
ஒரு மண்ணும் 
அறியாதவர்களாகவே 
இருக்கிறோம் இன்னும். 



விளை நிலமாய் தென்படும் வெளி 

கட்டிடங்கள் நடப்படும் களம் 
பயணிக்க 
பாதை விரித்திருக்கும் பரப்பு 
இவ்வளவுதான் நாம் 
இருக்கும் நிலம்பற்றி 
அறிந்திருக்கும் அளவு 



தாய் வழி தொடங்கிய பயணம் 

தரைவழி நகர்ந்த பின் 
நிலத்தின் வழிதானே 
நிறைவுக்கு வருகிறது? 
வேலிகளை நகர்த்த பழகிய நாம் 
விளையாட்டுக்கேனும் 
மண்ணை நேசிக்கும் 
மரியாதையை பழகவில்லை ஏன்? 


தானியங்கள் தருவித்து 

பஞ்சமின்றி 
உயிரினங்கள் உயிர் வாழ 
நீரை உள்ளே நிறுவி 
இறைவன் ஈந்த நிலம் பற்றி 
ஆழ்ந்து அறிந்து உணராமல் 
சடப் பொருட்களுக்கு உள்ள 
சம்மந்தம் போலும் இல்லாத 
தான் இயங்கிகளாகவே இருக்கிறோம் 



பூமி ஒரு புல் கம்பளம் 

பச்சை வயல் நூல் இழைகளால் 
நெசவு செய்து 
இச்சைதீர மனிதம் சுகிக்க 
இயற்கை போர்த்திய பொன்னாடை 


மண்ணை சுரண்டுவதற்கு 

படித்த நாம் 
கொஞ்சமாவது 
நிலத்தை சுத்தப் படுத்த பழகவில்லை 
மலைகள் உயர்ந்து யாசிக்கின்றன 
விதைகள் பூமியால் சுவாசிக்கின்றன 
வனமோ வேரால் வாசிக்கின்றன 
இலைகள் நிழலால் நேசிக்கின்றன 
வானமோ மழையால் பூஜிக்கின்றன 
நாம் மனசால் யோசிக்கிறோமா? 


இனியாவது; 

தாய்நிலம் தொட்டு தரிசிப்போம் 
உதிர்ந்து வணங்கும் பூக்களுக்குள்ள 
புரிதலேனும் நமக்கு இல்லாததுதான் 
நடைமுறை குற்றம் 
சுற்றத்தை ஏனும் சுத்தமாக வைத்திருந்து 
வளரும் தலைமுறைக்கு 
நிலத்தின் வரலாறு சொல்வோம் 
மாதா மடிக்குப் பின் 
நிலம் தானே நமக்கு நிரந்தரம். 
ஏப்ரல் மாத கவிதை போட்டி முடிவுகள்.
--------------------------------------------------
இம்முறைபோட்டியில் முன்று கவிதைகள் பாராட்டை பெறுவதுடன் "தடாகத் தாமரைகள்" எனும் கவிதை தொகுதியில் இடம் பெறுகின்றது
03- விவசாயி

ஏர் பேனா கொண்டு
பூமித்தாளில்
எழுதவும்,
வாசிக்கவும்
வினைமிகு வினா நடவும்
நல் வித்து கண்டு விடை தரவும்
நெல் முத்து கொண்டு உணவிடவும்
இவர்களால் மட்டுமே இயலுமாகிறது

மண்ணை நம்புகிற மகான்கள்
பூமி கண்டெடுத்த புதையல்கள்
பூமியை புதையலாக்கும் புதல்வர்கள்
புனிதமிகு புருஷர்கள்-இந்த
விவசாயி என்னும் வீரியம்மிக்க
விதை நெல்கள் என்றால்
வேற்றுக் கருத்துண்டா
விளக்குங்கள்

சொல்லுங்கள் சோதரர்களே
“ஏசி”யையும்,”இன்டர்நெற்”றையும்
தவமாக எண்ணி
தர்க்கம் புரிபவர்களில்
எத்தனை பேர்
இயற்கைக்காய் கையேந்தி
இறைவனை இரஞ்சி இருக்குறீர்கள்?

உலகத்தில் மழைக்காக
மனுச் செய்பவர்கள்
விவசாயிகள் அன்றி
வேற்றாள் உண்டா
நகரம் மழையை ஏசி கரிக்கும்
கிராமம் மழையை பேசி சிரிக்கும்
நிழலை நிறுத்தவும்,பசியை துரத்தவும்
பயின்றிருக்கிறான்
பாட்டாளி என்கிற-விவசாய படைப்பாளி
அவர்களை
படிக்காத பாமரர் என்ற பாகு பாட்டில்
கருவறுக்க வேண்டாம் கை கொடுப்போம்
அவமதிக்க தூண்டா அரவணைப்போம்

ஒவ்வொரு உணவையும்
ஊணாக்கி உண்ணுகையில்
படைத்தவனுக்கு (இறைவனுக்கு)
நன்றி செலுத்தும் போது
பாட்டாளியையும் பந்திக்கு அழைப்போம்
ஒரு விவசாயின் வியர்வையை
நினைவால் பிசைந்து
நாமும்
பாட்டாளியின் கூட்டாளி என்று
கூட்டாக பசியாறுவோம்
விவசாயிக்கு நாங்கள்
விருது கொடுக்க வேண்டாம்

விரல் கொடுபோம் போதும்
களத்து,மேட்டில் அவன் படைப்புக்கு
அது நாம் விரித்த
செங் கம்பளமாய்
-அவன்
உள்ளத்தில் இருக்கும்
உயர் சம்பளமாய்
-தினம்
சந்தோசம் பெருக்கும்.