வெள்ளி, 20 ஜூலை, 2012

புன்னகையால் ஒரு போர் செய்.



 புன்னகை
இதயம் நிகழ்த்தும் தொழுகை
இதழ்கள் புகழ்த்தும் கவிதை.
முகவரி அறியா முகத்தையும்
புன்னகையால் புலம் விசாரிப்பதால்
மொழிப்பிரச்சினையில்லா நலன் விசாரிப்பு

புன்னகை ஒரு புனிதப்போர்
இரும்பை உருக்கும் ஈர்ப்புத்திரவம்
இரு இதழ் நடத்தும் ஈரச்சரசம்

புன்னகை மௌனத்திற்கெதிரான பிரகடனம்
புன்னகை புனிதமான புதிர் நடனம்
புன்னகை பொக்கிஷம்,புன்னகை அற்புதம்
புன்னகை பலம்,புன்னகை தவம்
புன்னகை சந்தோசத்தின் சரணாலயம்
புன்னகை சங்கீதத்தின் சாம்ராஜ்யம்.

முதலீடு அல்லாமல் செலவு செய்யும் மூலதனம்
முதல் போட்டால் கிடைக்கும் வேதனம்.
புன்னகை வணங்கும் கை
புன்னகை வாழ்த்தும் மெய்

புன்னகை மனிதனே
உனக்கு மட்டும் கிடைத்த உயிர்ப்பு
காணும் உயிர்களை கண்களால் நலம் கேள்
புன்னகையால் வணங்கு
புன்னகையால் வாழ்த்து ....,முடிந்தால்

புன்னகையால் ஒரு போர் செய்.


வெறிச்சோடிக்கிடந்த ஒரு கோடை.



 சூரியன் இறங்கிநடந்தது ஊரில்
பூச்சி,புழு தங்காததால்
வானம் மலட்டுப்பேர் கேட்டகாலமது
சாவு நிச்சயிக்கப்பட்டதால் கிணறுகளிலிருந்து
தவளைகள் தாவ எத்தனிக்கவில்லை
பூமியின் படுகை எங்கும் புலால் நெடி
ஆறுகள் சேறுவெடிக்க
வெறிச்சோடிக்கிடந்த ஒரு கோடை.

வேர்கள் கைவிட்டதால் புழுக்கம் மரங்களுக்கு
ஆடைகள் அவிழ்த்து வீசின காற்றில்
பறவைகள் கூடழிந்து எதிலியாய் ஏங்கின
வேறொரு தேசமேக விரும்பி
பசியில் அலைந்து
மண்ணின்தோலை உரித்தெடுத்தன மந்தைகள்.

சாகுபடிகள் எல்லாம் சாகும் படிகளாய்
இனி பஞ்சம் பாய்போட்டுறங்கும்
காய்த்த நிலம் கருகி வறண்ட ஒருகாலம்
இன்னும் நீடித்தால் பூமிக்கு மனிதர்கள்
இன்னொரு கிரகத்திலிருந்து இறக்குமதி செய்ய வரும்.
முக்கிய அறிவித்தல்;
சற்றுமுன் கிடைத்த தகவல்களின் படி
வானம் இப்ப மாசமாம்
அப்ப மழை பிறக்கும் ஊர் கூடிபெயர் வைக்க.





புண்ணியங்களின் பூக்காலம்.



கண்ணியமான பொழுதுகள் உழுதி
புண்ணியமான நிகழ்வுகள் எழுதி
அரங்கேற்ற முஸ்லிம்கள் ஆயத்தம்
அதுதான் ரமழான் பிறை தோற்றம்
வான் கரைஎல்லார் விழியும் மாலை
வளர்பிறை தேடி அலையும் நாளை
அடுக்களை,வீடு மனம் சுத்தமாகும்
அலுமாரி திறபட கை"குர்ஆன்"தேடும்
பள்ளிகள் ஒருபடி மேலே துலங்கும்
பரிசுத்த வேதம் பூமியில் இலங்கும்.

இளையவர்,முதியவர் இருவரும் சமமென
இறைவனின் நியதியை அனைவரும் வரமென
பசியினை துறந்து நிசிகளை மறந்து 
பாவத்தை எரிக்க விறகுகள் சேர்ப்பார்
ஆபத்திலிருந்து அனைவரும் காப்பார்
அடிக்கடி வாய்கள் வேதத்தை ஓதும்
அடிப்படை கொள்கையில் மாற்றங்களேகும்
கோடிகள் சேர்த்தவன் குடிசையில் வாழ்பவன்
மாடிகள் கட்டி மன்னனாய் ஆழ்பவன்
சரிசமம் என மனம் கூறும் -நோன்பு
முடிந்த பின் முருங்கையில் ஏறும்.

நிலையினை மாற்றிட முடியும்-என்ற 
நிய்யத்து மனதினில் வைப்போம்
நிறை மனதாய் நோன்பு நோற்போம்-மறுமை
நிரந்தர வாழ்வுக்காய் உழைப்போம்
மகத்துவ நோன்பிடம் கேட்ப்போம்-பெருமை
மா நபி வழியினில் சேர்ப்போம்
புண்ணிய ஆறு  புறப்பட்டு வருது
கண்ணியத்தோடு நீ அள்ளிப்பருகு.