புதன், 11 ஜூலை, 2012

நிழல் யாத்திரை.


இதுவரைக்கும் தெரியவில்லை இதன் தூரம்.
அடுத்த சந்திப்பில் முடியலாம் அல்லது,
இன்னும் கொஞ்சம் நீளலாம்...

ஒரு மயக்கம்,இன்னும் சொல்வதென்றால்;
இறுதி மூச்சை இறுகபிடித்திருக்கும் பெரும் சிரமம்.
வசிகர புன்னகைகள் வீசி வழைத்து போட்டவள்
கண்கள் உடைந்துவிள கால்மாட்டில்
என் உயிர்கள் மெழுகாய் உருகின அருகில்.
நிமிஷங்களை எண்ணிக்கொண்டிருக்கிறேனா?
நிறம் பிரிக்க இயலாத ஒரு நெருடல்.

இப்போதெல்லாம் வியாதிக்கு,வியாதி
மாத்திரைகளும் மலிந்துவிட்டன.
அளவோடு குடித்தால் உறக்கம் கொடுக்கும்
அதிகமானால் உயிரை எடுக்கும்.
அனுபவம்கள் என்னை ஒரு மரம் போலவே மதித்து
கூடுகட்டி தலையில் குடியிருக்கின்றன
தத்துவங்களை உதிர்க்கும் வித்தகனாய் நான்.

சுற்றத்தினரின் சுக விசாரிப்பு
இளசுகளின் ஏளனப்புன்னகைகள்
மனசை வருடிவிடும் மயிலிறகுகளாய்
அரைவாசிக்கு மேல் தேறியதோர் திருப்தி.

கண்விழித்தேன்
இரவின் கழுத்து துண்டிக்கப்படிருந்த ஒருகாலை.
அவசர மனிதர்களின் உலகில்
எதுவும் அறியாதவர்களாய்
அவரவர் அலுவல்களில்...,
மூழ்கியிருந்தார்கள் அலுவலகத்தில்.
எனது இருக்கையில் வேறொருவன்
பதவி உயர்வு கிடைத்த தொணிமாறாமல்.

நவீனத்தின் பிசாசு முகங்கள்!


சுருங்கிப்போனது வாழ்வு
ஒரு "பென்ரை"வுக்குள் 
வாசிப்பு,நேசிப்பு எல்லாம்
மடிகணணி மங்கையின் மடிக்குள்
விசை தட்ட விரிகிறது
புதினங்களுடன் பூமிப்பந்து 
சுழலும் உலகை ஒரு நொடியில்
சுற்றிவரும் சூட்சுமம்தனை 
அறிந்து கொண்டது வியப்பைத்தரும்
விஞ்ஞானம்

ஒரு புறம் ஐந்தடி மனிதனின் ஆடை
அடியாய் குறைய,
மறுபுறம் கை குத்தரிசி சோறும்
கருவாட்டு குழம்பும் இருக்க
"பாஸ்ட்புட்"மேல் பற்றுக்கொண்டு
விரும்பிக்கேட்கிறது
கொழுப்பு பிடித்த கொள்ளை மனசு

பெரிசும்,இளசும் "பேஸ்புக்"எனும்
மோகக்கட்டிலில் உரித்துபோட்ட அம்மணமாய்
கிளர்ச்சிதரும் காம வார்த்தை புணர்ச்சிகளோடு
செய்மதி தொழில்நுற்ப தூண்டிலில்
மதிகெட்ட மீனாய் மனிதம்

நாகரீகத்தை நவீனத்தின் பிசாசு முகங்கள்
கையாளும் விதம்
கவலையை தருகிறது
இத்தனைக்கும் இவர்களுக்கு
 'கவறச்சி 'என்கிற பேய் கட்டாயம் வேண்டும்
"சிக்னல்"என்கிற வேப்பிலையோடு