ஞாயிறு, 9 டிசம்பர், 2012

காற்றின் வலி!



என்னை அடக்கி வைக்க எத்தனிகின்ற
பெரும் முயற்சிகளை
தோற்கடித்தபடி
ஒலிக்கின்ற மொழியெனது

எந்த பூச்சாண்டிகளுக்கும்
அடிபணிந்து என் சுதந்திரத்தை
அடகுவைக்க இயலாதென்னால்
நெருக்கமாய் இருந்து சுவாசிக்கும் சக்தியும்
நெருப்பையே நெருங்கி ஊதிவிடும் உக்தியும்
தெரிந்தது எனக்கு மட்டும்தான் இங்கு

ஐம்புதங்களிலேயே உங்கள்
புலன்களுக்கு புலப்படாத புதினம் நான்
அளவு கருவிகளையே மீறும்
அதிசயம் தான்
எதிர்வு கூறுபவர்களையே எதிர்த்து மீறும்
வல்லமை பெற்ற வரலாறு எனது
மூங்கில் துளை தாவி இசை முத்தெடுக்கவும்
மூக்கின் வழி  ஏகி உயிர் வித்தெடுக்கவும்
என்னால்  இயலும்

நான் மழையோடுகலந்து நனைகிறேன்
வெயிலோடு உலர்ந்து விளைகிறேன்
மரங்களோடு சரசம் செய்து மகிழ்கிறேன்
மலர்களோடு உரசி தினம் மணக்கிறேன்
மனங்களில் கூடாகி
உயிர்கள் வசிக்க உறைவிடமாகிறேன்
நான் சுழன்றால் சுறாவளி
சுமுகமானால் தென்றல்
இளகினால் இதம்
இறுகினால் ஜடம்

காலம் காலமாய் உங்களுடன்
கைகுலுக்கி
ஆயுளுக்கு அருகாமையில்
தூய்மையோடு
துணை நிற்பவன் நான்
ஆனால்; இப்போதெல்லாம்
அளவுக்கு மிஞ்சிய உங்கள் ஆசை
கலப்படத்தை என்மீதும்
கரைத்து கலந்து விட்டீர்கள்
சுவாசிக்க முடியாது தலை சுற்றுகிறது
உங்களோடு எனக்கும்

ரசாயனங்கள்  கலவை செய்த படி
குப்பைகள் தெருவில் கொட்டி
ஊத்தைகளை சலவை செய்யாது
ஆயுளை குறுக்கி
அடுத்த சந்ததியை முடமாக்கும்
கனவான்களே,பணவான்களே
இப்போது சொல்லுங்கள்
உங்கள் வாழ்க்கையோடு
வலை பின்னலாயிருக்கும் என்னை
கையாலாகாதவன் என்று
கணித்து விடலாமா?
உங்கள் நினைவுகளுடன்
உழலும் என்மேல் சுமைகளை
திணித்து விடலாமா?!