வியாழன், 31 மே, 2012

புன்னகை கோடி கொண்டிடும் அழகே

புன்னகை கோடி கொண்டிடும் அழகே
பொன்னகை சூடிவந்திடும் நிலவே
உனது நிழலே வாழ்வின் எல்லை
உன்னைப்போலே யாரும் இல்லை


பிறந்தாய் தேவதை போலவா
வாழர்ந்தாய் தென்றலின் மீதிலா
கலந்தாய் பூக்களில் வாசமா
இணைந்தாய் நெஞ்சினில் நேசமா
மலர்ந்தாய் ஆவணி மாசமா
புனைந்தாய் தாவணி வேஷமா

புன்னகை கோடி கொண்டிடும் அழகே
பொன்னகை சூடிவந்திடும் நிலவே...

மேனி சந்தன ஜோதியா
பூ நீ குங்கும ஜாதியா
தேவி மின்னலில் பாதியா
மண்ணில்பெண்மையின் ஆதியா
ஊரில் உன் பெயர் ராணியா
உன்னால் நானின்று ஞானியா

புன்னகை கோடி கொண்டிடும் அழகே
பொன்னகை சூடிவந்திடும் நிலவே...

ரதியே நாணமுன் பெண்மையா
விதியே நனுந்தன் பொம்மையா
விழியே நீர்த்துளி உண்மையா
விரலே நீ விட வில்லையா
மௌனம் என்னடி நீளுமா
மரணம் என்னுயிர் ஆளுமா

புன்னகை கோடி கொண்டிடும் அழகே
பொன்னகை சூடிவந்திடும் நிலவே...



மாறாத வடுக்கள்


சமுத்திரத்தை போல்
விரிந்து இருக்கிறது வடுக்கள்
இவை கயங்களில்லை,ரணங்கள்.

மீட்சியற்றதோர் அதிகாரத்தின் கீழ்
சுவடுகள் தெரியும்
வாழ்வின் எச்சங்கள் .

அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல
எதுவுமில்லை ........,
இந்த பிச்சைப்பாத்திரங்களை தவிர !

புதன், 30 மே, 2012

வெளவால்களின் உலகம்.

விசித்திரமான பிறப்போன்றை பெற்ற
மமதையில்
ஒரு தலைகீழ் தவம்.
எதுவும் தெரியும் என்கிற
ஒன்றும் அறியா கண் மூடித்தனம்.
நிசிகளின் மௌனம் கிழித்து
பிரளயங்களை தோற்றுவிக்கிற
குணாதிசயம்,
இன்றைய மனிதர்களுக்கும்
இருக்கிறது நிறையவே! 

ஒரு தாயின் அழுகுரல் ....!



உறவின்பெரும் தகிப்பில் களிப்பூட்டி நீ சிரித்தாய் 
 .............,உயிர் பூவாய் என்வாசலில்
முற்றத்து பூஞ்செடிகளை கவனிப்பதில்லை நீ ..,வந்தபின்
மடிகிடத்தி நான் மகிழ, மடி கிடந்து நீ உழல -என்
துயில் துரத்தி விசிறினேன் 
கொசு ,நுளம்பு உன்னை குத்தாதிருக்க 

தந்தையின் அகாலப்பிரிவு 
அவலத்தின் பின் -தனிமையில் உயிர் தடவி 
பருகி நெகிழ்ந்தேன் உன்னை
என் அந்திமத்தை தாங்கிப்பிடிப்பாய் என்றெண்ணி

என் கனவுகள் ,ஆசைகள் சிதைந்தது
நீ பிடித்தாய் உனக்கான துணையை 
என்னை நழுவ விட்டு ,விட்டு 
உன்னை ஒரு அதிதியாய் வழர்த்து 
அகதியாய் போயின்று தனித்துக்கிடக்கின்றேன் 
தாவரிப்பின்றி

உயிரில் பாதி நீ என்று ஊர் மெச்ச வழர்த்தேன் 
பெயர் வைத்த எனக்கு பிடரியில் அடித்துவிட்டாய் 
கருப்பை தொடங்கி நேற்றைய நிமிஷம் வரைக்கும் 
இரு சகாப்தங்களில் ஒரு சராசரி மனிதனாய் நீ
தாய்மையின் விலையறியா 
மனித பதராய் போன மகனே உன் பின்புலம் பற்றி 
முன்னமே தெரிந்திருப்பின்
தரித்த கணமே கிள்ளிஎறிந்திருப்பேன் 
 !ஒரு உண்ணிபோல் உன்னை


முதிர் கன்னியின் ஏக்கம் .




மாற்றி ,மாற்றி விசுக்கப்படும் 
சாட்டையின் விசையில் வலியின் ஈரம்........,
எதிர்வு கூறுவதும் ,
நம்பி ஏமாறுவதுமான
வானிலை அறிக்கை வழக்கம் போல்
எனது வாழ்வும்  கையாளப்படுவதுதான்
இதில் கவலைக்குரியது ....!
நம்பிக்கையின் வேரை
பிடுங்கி எறிந்துவிட்டது காலம் 
எனது சொப்பனங்களில் 
வாழ்வு பற்றிய கனவே இனி வராதே...!!
எதிர் பார்ப்புகளில் பயணித்து 
இடிந்து விழ ,எழ 
இதயத்தி கால்களால் இயலவில்லை 
என் இரவுகள் வெறுமையாகவே ...,
ஏழ்மையின் அந்தப்புரத்தில் 
காத்திருப்பின் வெகுளித்தனங்களுடன்
ஆயுளின் அரைவாசிக்குமேல் 
......................................................,
இனி என்ன.. மரணம் தானே 
என் வாசலுக்கு எப்போதுவேண்டுமானாலும் 
அவை வந்து விட்டு போகட்டும் 
அவனைத்தவிர !


செவ்வாய், 29 மே, 2012

முற்றம்


பூவாய் முளைத்து வாசலாய்இருக்கிறேன்.
கதவு திறந்த உங்களுடன் கைகுலுக்க.
வருக! வாழ்த்துகிறேன் தோழமையோடு தோழாக.

பச்சக்கள்ளி


நான் வெச்ச பேரு பச்சக்கள்ளி .
உள்ளதுமொண்டு, உசிரு மாமாட .
சும்மா சொல்லப்போடா தாராபேடு போல .

கல்யாணம் பண்ணச்சொல்லி கரைச்சல் உம்மா .
வயசையும் பாக்கணுமே வாழ
எனக்கு முடிஞ்சது இன்னொண்டோட .

பழைய நெனப்புல பகிடியா கதைச்சன்.
 "புளுத்தினது போதும்
புதினம் காட்டாம போங்க மச்சான்,
கையுட்டுப்போட்டு கதைக்க வந்திட்டயல்"

ஆசைய பாரு அடங்காப்பிடாரிர
அப்ப பச்சக்கள்ளி,இப்ப பருவ கிளி.

தப்பித்து வந்தவனின் மரணம்.




நன்பனும் இல்லை,உறவும் இல்லை அவன். 
முகம் மளித்து மூன்று,நான்கு வருடம் இருக்கவேண்டும்.
தாடிக்குள் ஒளிந்திருந்தான் கரடியாய்.
எங்கேயோ பார்த்த பரிச்சயத்தில்தான் பேசத்தொடங்கினான்.
வாழ்வது பற்றிய கனவுகளின் மூட்டைகளை
மாராப்பாய் கட்டி தோளில் போட்டபடிதான் வந்திருக்க வேண்டும் .
சட்டி ,பானை ,உலாமூடி,பீங்கான் ,அகப்பையென குடும்பமாய்
வாழ்வதிலிருக்கும் அலாதியை சொல்லிவிட முடியாது எளிதில் என்றான்.

காண்டா மிருகங்களின் கால்களின்கீழ் பட்டு
அவனது உலகமே அழிந்ததாய் கதறினான் .
நெருப்புமழை பொழிந்த வானத்தின் கீழ் வசித்ததாகவும்,
குரூரமான எல்லா விஷஜந்துக்களையும் பார்த்ததாகவும்,
பயத்தின் நடுக்கம் மேலிட தழுதழுத்த குரலில் சொன்னான்.

வாழ்வு பற்றிய பசி, தாகம்
அவனது கண்களிலிருந்து உதிர்ந்து விழுந்தது நெருப்பின் சாயலில்.
வயிற்றை இறுக தடவிய படி ஐயா என்றவாறு சரிந்தான்
மீண்டெழ முடியாதபடி சாவின் மடியில்.
இறுக மூடிய விரல்களை பிரித்தபோது .....,
உள்ளங்கையில் ஒரு பிடி மண்ணிருந்தது .
அவனது ஊரினுடயதாய் இருந்திருக்க வேண்டுமது.
மரண வாக்குமூலமாய் என்னிடம் கூறியதை பார்த்தால்
இவன் பொய் சொல்லியிருக்க மாட்டான்.
என்பதை எண்ணியெண்ணி,பேய் பிடித்தது போல்
அதற்கு பின்வந்தநாட்கள் தூங்கவே இல்லை நான்.