வியாழன், 27 மார்ச், 2014

எனது மரணம்.









உடை வாளை
இறுக்காத சரணகதியும்
உயிர் வாழ கேட்கின்ற
இறுதி நிலையுமாய்
அமையும் அத்தருணம்

நிகழ்கால நிரலொன்றின்
நிச்சிலப் பொழுதொன்றில்
நிமிடத்திற்கும்
வினாடிக்கும் இடையில்
கண்காணிப்பை மீறி
கணிக்கப் பட்டிருக்கும் அந்நொடி

யார் பிடித்து வைத்திருப்பாரோ
யாருக்கும் தெரியாது
உள்ளிழுத்த காற்றை
வெளியேற விடாத வேளையாய்
சம்பவிக்கும் அச் சடங்கு

உடன்கட்டை ஏற என்னுடன்
ஒப்புக்கொண்டவள்
உயிர் கட்டை இறங்க
தப்பிக் கொண்டவளாய் தள்ளி நின்று
ஒப்பாரியை ஒப்புவிப்பாள் ஊருக்கு

பிள்ளைப் பாத்திரங்கள்
பிரிந்த மாத்திரத்தில்
கண்கள் பனிப்பார்கள்-கொஞ்சம்
கவலை தொனிக்க

சக சொந்தங்கள்-என்
சா முன் குறை மெழுகி
அனுதாப பூச்சுகளால்
அநியாயத்துக்கு வெள்ளையடிப்பர்

பெயர் மறந்த ஊர் பிரியத்தின் பேரால்
“மையத்து”அல்லது பிணம் என்று
மகுடம் சூட்டுவர்

ஊர் வலமாய் வரும்-என்
உடல் வளம் கைமாற
நான் ஆக்கிரமித்த மண்
என்னை ஆக்கிரமிக்க
வாய் பிளந்து
வழிபார்த்து காத்திருக்கும்.