ஞாயிறு, 1 டிசம்பர், 2013

பூ உதிரும் சாமம்.



பட்டியை பரப்புவதில்
எப்பவும் மறிக்“கடா”க்களுக்கு மதிப்புதான்
முதல் உள்ள கசாப்பு கடைக்காரனும்
பணம் புரட்ட பழகியதால்
எந்த விலை வந்தாலும் விடுவதில்லை.

கிழக்கின் மூலையெங்கும்
முற்றத்தில் செடியினை நடுபவன்
ஒரு வீட்டையும் கட்டவேண்டியிருக்கின்றது
இதிலிருந்து அறிய முடிகிறது
சொறணையற்று போயிற்றென்று
சமுதாயம் பற்றி யோசிப்பவனை விட
ஆதாயம் ஒட்டி நேசிப்பவனே நிலைக்கிறான்

வேதத்தின் நெறி பேண தெரியாத தேவாங்கு
மதவாதம் பேசுபவனோடு மல்லுக்கு நுழைகிறது
ஆபத்துக் குதவாத அநியாயம் சமபங்கு
சாபத்துக்குரித்தாகும் சந்ததியாய் விளைகிறது


வியப்பிலாழ்த்தத் தகு வினோதமாய்
பெரும் பேரழிவொன்று அதிகார பூர்வமாய்
அங்கிகரிக்கப் படுகிறது நாள்,நட்சத்திரம் பார்த்து

கனிந்த இரவின் கண்கள் மூடியிருந்த சாமம்
கனவுகளை பெருக்கிக் கொண்டிருந்த
புது மணப் பூ பிரிந்து கிளை விலகி
விரதம் கலைய விழுகிறது
தாவித் தவித்து அலைந்து அடங்கியதோர்
மந்தியின் மடியில்

உள்ளே,வெளியே என்ற இரண்டு முகங்களுடன்
சாத்தப் படுகிறது கதவு மிக அமைதியாக
கதவின் தாப்பாள் உட்பட நாட்புறமும்
அடர்த்தியின் பலம் நிறைந்து வழிய
சட்டை கழற்றி காமம் கரு நாகாய் புரள
பீதியற்ற மகுடி
வாசம் கொள்கிறது
அறை முழுதும் விஷம் பீச்ச!




சனி, 14 செப்டம்பர், 2013

நிசிகளை வாசிக்கிறவன்.



















பருவத்து நிலமதில் பயிர் செய்ய வந்து நீ
காதலை பூவென விதைக்கின்றாய்
பருகிடத் துடித்திடும் தாகத்தை தந்து நீ
துயில் தனை தினம்,தினம் சிதைக்கின்றாய்

விழிவழி ஏகி மனவெளி தாவி
ரகசிய அறைகளை திறக்கின்றாய்
மொழியின்றிப் பேசி புன்னகை வீசி
ரசிக்கின்ற முறைகளை தினிக்கின்றாய்

புதுமையின் பதுமைகள் தாங்கிய நவீனமாய்
கவிதையின் சுவையென இனிக்கின்றாய்
புதுப்,புது முறைகள் ஓங்கிய நளினமாய்
நினைவினில் துடித்திட பணிக்கின்றாய்

அழகிய கனவுகள் அடிக்கடி தருகின்றாய்
அடிமன உணர்வுகள் வருடி நீ திரிகின்றாய்
இளமையின் பசிகளில் பழகி நீ பிசைகின்றாய்
இளகிய நிசிகளில் விலகியேன் அசைகின்றாய்?


புதன், 7 ஆகஸ்ட், 2013

விட்பனைக்கு ஒரு மனசு!

மனதின் இருப்பு
பிடித்தமானதாய் இல்லை
தேவையற்ற எதையாவது
துரத்திவந்து வாசலில் விட்டு
வேடிக்கை பார்க்கிறது
மறுபடியும் முருங்கை ஏறிய
வேதாளமாய்...!

நாக்கை தொங்கவிட்டலையும்
விசர் நாயாய்
அலைகிறது தெருத்,தெருவாய்
பச்சா தாபங்கள் பழைய பரணில்
கருவாடாய் காய
எச்சில்களுக்காய் எங்கிறது
பிச்சைக் காற பிறப்பு

யாராவது கேட்டால்
சும்மாவாவது யாரேனும்
ஒரு பைத்தியத்துக்கு
கொடுத்து தொலைக்க வேண்டும்
குரங்கு மனசை


ஒரு ஏழைக்கு உதவ இடமில்லை
சீதனமின்றி ஒரு குமருக்கு
வாழ்வளிக்க வக்கில்லை
பெற்றோரை பிரியமாய் பார்க்க
பிரியம் இல்லை
இறைவன் விரும்பத்தக்க கடமை
எதையும் செய்ய வக்கத்த
மண்ணாங்கட்டி மனசு
என்ன மண்ணாங்கட்டிக்கு?

மனசை அது இருந்த இடத்திலிருந்து
எடுத்து விட்டு
கூழாங் கற்கள் இட்டு நிரப்பி
குழந்தைகளிடம் கொடுக்க வேண்டும்

கிலிக்கியாய் கிலிக்கித்திரிய!

வெளிநடப்பு.

உன் செவ்வாயால்
என்னை திங்களென்றாய்
நுரைக்க,நுரைக்க விரும்பி
நதிகள் பெருக்கெடுக்க
மனசின் நாற்திசையும்
பிரவாகித்து பீறினாய் அன்று..

இன்று......................,
புறக்கணிப்பின் பெயரால்
மனசால் திறக்கவிருந்த
கடைசிப் படலையும்
இறுகச் சாத்திவிட்டாய்

மூச்சு முட்டுகிறது
என் காத்திருப்பின்
கடைசித் தருணங்களும் மூழ்க

வாழ்வு பற்றியதான
கனவுகளை கலைத்து விட்டன
இன்றைய உன்
நெருக்கடிகளின் பேரிரைச்சல்

வலியை மொழிய வழியின்றி
குரலை இறுக்கியபடி நாசிக்குள்
நீ மூட்டிய தீ

வேப்பிசார வெப்பம்
கனன்றெரியும் காட்டுத்தீயாய்
உயிரை சிதைக்க ஊளியென..


நம்பவைத்து ஏமாற்றுவதையும்
உலக நீதிக்குள் உட்புகுத்தி
வழக்காக்கத் தக்கதாய் சட்டம் வகுத்து
தண்டனைக்குள்ளாக்கி
புழக்கத்துக்கு கொண்டு வரவேண்டும் இனி..

இப்பவும் உன்னை சபிப்பதற்கு
மனசில்லை .....,
இதன் பின்பும் என்னிடம்
சிநேகம் இருக்கின்றன கடல்போல்
இது கனவாய் இருக்கட்டும் என்றே
பிரார்த்திக்கின்றேன்

உன்மேல் இருக்கின்ற காதலால்!

சனி, 27 ஜூலை, 2013

சர்ப்பங்கள் நெளியும் மண்!


பட்டங்கள் ஏற்றி தும்பிகள் பறந்து

இறகுலரா எங்கள்
பட்டாம் பூச்சிகள் பாடி,ஆடி
மகிழ்ந்துலவிய மலர் வெளிகள்
புடையன்கள் உலவும் புதராய்,
கறையான் களிடமிருந்து
காப்பாற்றிய காணி,பூமிகள் எல்லாம்
இன்று சர்ப்பங்களின் புற்றாய்

யாராலும் எளிதில்
விளங்கிக் கொள்ள ஏதுவற்ற முறையில்
சமாதான பட்சிகளின் வாழ்வின் மிச்சம்
பீதிகளால் மொழி பிரித்திருக்கின்றன

சுதந்திரத்தை அச்சப் படுத்தியவாறு
விரிபுடையன்கள்
மலைப் பாம்புகளின் சாயலில்
மண் பற்றி,விஷத்தை பீய்ச்சியபடி
வழி நெடுகிலும்.................,
புழுதி உறுஞ்சி நெளிகின்றன

முறையற்று பிறப்பித்த
ஹறாம்குட்டிகளாய்
மசூதி,மாட்டிறைச்சிக் கடை,
மையவாடி,தெருக்கோடி என..

எங்கும் இனி..இப்படித்தான்
பாம்புகள் ஊரும் ஊருராய்..
நாட்காலிகளை நகர விடாமல்
தன் இருப்பை தக்க வைப்பதில்
குறியென இருக்கும் ஒரு
சமுகத்தின் குரல்கள் மௌனித்து
பிணமாய் இருக்கும் நாட்களில்!


வெள்ளி, 12 ஜூலை, 2013

நீ.. மழையாகிற கணங்கள்!

நீ.. மழையாகிற கணங்கள்!


முகப் பூவிரிய

மழையாய் நீ வந்து போகிறபோது
மனசு மண்மணக்க
குளிர்ந்து போகின்றன
எம் நிலப்பரப்பெங்கும்

எமக்குள் பூத்தபடி
வாச நெடி கமழும் சோலையை
தும்பிகள் உலவும் வெளியினை
சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகளின்
இசையோடிணைந்த பறத்தல்களை என..
வயலும்,வளமும் சார்ந்த
மாருதமொன்றை நீ
பார்வைகளால் பதியமிடுகின்றாய்

கொடுங் கோடையிலும்
ஈரப்பதம் மிகு இதம் தரும்
சிலிர்ப்பான சில்மிஷங்கள்
உனக்கே உரித்தான உரிமம்
அவ்வப் போது எமக்கும்
பந்தி வைத்து பசியாற்றுகிறாய்

ஜீவித வெடிப்புகளின் இடையே
உயிர் உடைந்து உருகி
கலைகிற கணங்களெல்லாம்
புன்னகைத்து பூஞ்சரங்களை
பா சரமாய் பரிசாய் பகிர்கிறாய்

பிறப்பித்தலின் விலையை
சிறப்பித்தல்களால் தர விளைகிறாய் நீ
வண்ணங்கள் கலந்து உன்னை
வடிக்காத போதும்
எம் எண்ணங்கள் உணர்ந்து
இலங்கிடும் உயிர் ஓவியமே

எமது இறுதி வரை
இதே மனசோடும் வயதோடும்
இப்படியே இருக்க மாட்டாயா?
மனம் ஏங்கிற தினங்களில்
மழையாகிற கணங்களாய்!


திங்கள், 17 ஜூன், 2013

தலை எழுத்து தந்தவன்.



வாசிக்கும் நாவில்
என் பெயரின்
முதல் எழுத்தை முன் மொழிய
தலை எழுத்து தந்த
தலை எழுத்து நீ

சிந்தை நிறைந்திருக்கும் தந்தையே
நீ
வீ ரியமுள்ள விருட்சம்
தாய் மண்ணில் விதை தூவினாய்
தளிராய் நான் முளைக்க மர மாக்கினாய்
எனது கிளையெல்லாம் மலர்கள்
பூரிப்பில் கனிந்து இன்று
உன் புதல்வனாய் நிற்கின்றேன்

எனக்கான முகவரியை எழுதி
வழிமொழிந்த வள்ளல் நீங்கள்
தவறி தருதலையாய் போகாமல்
பெருகி உயர் நிலையை அடையும்
சூட்சுமத்தை உணர்த்திய
சூத்திர தாரி
நீங்கள் தான் என்றால்
நிகரில்லை ஒப்பிட

சரித்திரங்கள் காட்டி
சமத்துவத்தை ஊட்டி,
பாசத்தை கூட்டி,அறிவை புகட்டி,
ஆழுமை தீட்டி
வளர்த்த நீ எனக்கு அப்பா
வள்ளல்தான் என்று
நான் சொன்னால் தப்பா?

என்னை உன்னாய்
எப்படி செதுக்கினாய்?
பேசும் வாயெல்லாம்
பெருமையாய் சொல்லும்
உன்போல் நானென்று
உயர்வுடன் தானின்று

ஊர் மெச்சும் பெயர் வைத்தாய்
உயிர் மிச்சம் எனில் வைத்தாய்
கருணையில் நீ என்றும்
காட்டாற்று வெள்ளம் போல்
அருமையில் அப்பா உன்போல்
ஆருமில்லை ஊரிலென்பேன்!