ஞாயிறு, 21 அக்டோபர், 2012

மரத்தை நினைந்தழுது.


அது மரமல்ல....,
ஞானமடம்
எங்கள் குடும்பப்பள்ளி
கூடுமிடம்

உண்ணக்கனிதந்து
உறங்க மடிதந்த
நிழல் வீடு

உன்னை வேரோடு சாய்த்து
வீழ்த்தி விட்ட செய்தி
கேட்ட கணமே
கேவிற்று என் மனசு...,
ஆறாத்துயரில்
அழவேண்டும் போலிருக்கு

விளா மரமென்று
வீராப்பாய் சொன்னவர்கள்
எழா மரமாக்கி உன்னை
ஏன்தான் தறித்தனரோ?

வீட்டிற்கு முன்னால்
வேடந்தாங்கல் ஆனதற்கா?
ஓட்டுக்கு ஊறுசெய்து
உடைத்து அழித்ததற்கா?
ஓசிப்பழம் தின்று
உடம்பு வழர்த்தவர்கள்
வீட்டுக்கு முன்னால்
விளா மரம் இருப்பது
ராசி இல்லையென்று
ஜோசியம் சொன்னதற்கா?
இல்லை;
இலையுதிர்த்து பழுக்கூட்டி
ஈர்க்குகள் தேய்ந்ததற்கா?
முன்னால் ஒரு தொத்து
முளைக்க விடுவதற்கா?

விளா மரமென்று
வீராப்பாய் சொன்னவர்கள்
எழா மரமாக்கி உன்னை
ஏன்தான் தறித்தனரோ?

மசக்கை வரும் பெண்களே
உங்களுக்கு இனி
மாங்காய் மட்டும்தான்
பழங்கள் புறக்கி
பழஞ்சோறு கரைத்துண்ட
வாண்டு பசங்களெல்லாம்-இனி
வான் முகட்டைதான்பார்த்து
எச்சில் நா ஊற
இதயத்தால் அழுவனரே

உன்னில் குடியிருந்த
ஊர்குருவி என்னாச்சோ?
காகம் கரைந்து
களைப்பாற எங்கு போச்சோ?
................................................
உறவுகளே....,
தெவிட்டி போனதென்று-இட
தேவைக்கு அழித்திருப்பின்
அடுத்த வழவுக்குள்
ஓர் மரத்தை மிக
ஆளமாய் நட்டிடுவீர்.


திங்கள், 15 அக்டோபர், 2012

சிறகுகள் சிதைக்கப்பட்ட பறவையின் பாடல்!


நீ உன் பொழுது போக்கிற்காக
படைத்தெடுத்த,அல்லது செய்த
ஒரு பண்டம் போலவே
கவலையை தரும் விதம் என்னை
கையாளுகிறாய்

எனக்கான வாழ்வு
உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டதாய்
செயல்களால் நீ
ஒப்புவிக்கின்றாய்
அளவு கடந்த உன் அவதானிப்புகள்
ஆயுள் முழுக்க அவஸ்த்தையாகி
விபரிக்க மொழியின்றி வேதனைகளாய்

குரலினை நசுக்கி விட்டு
பேச சொல்கிறாய்
கால் கட்டு போட்ட நீயே
நச்சரித்து எச்சரிக்கிறாய்
நடக்க சொல்கிறாய்
சிறகுகள் சிதைய சிறையில் தள்ளி
பறவென்று பணிக்கிறாய்

மனசு கனத்து
துயர் பகிர மொழியின்றி
மௌனத்தின் பாடலாய்
விரிகிறதென் கீதம்

வர்ணங்கள் குழைத்து
பூசி மினுக்கிய சிறை கூண்டில்
தள்ளி விட்டு சாத்தப்பட்ட
என் சுதந்திரத்துக்கு முன்னால்
நீ யொரு கைதியாய் நடமாடுகிறாய்

வானளவு உயர்ந்திருந்த
என் பிஞ்சு கனவுகளை
கலைத்து கத்தரித்தது
நீதானென்று என்னால்
நிருபிக்க முடியும் ஆனால்;
எனது நாகரீகம் நாகரீகமானது 

வியாழன், 11 அக்டோபர், 2012

கண்ணீருக்குள் வசிக்கின்றவள்!




சூசகமாக சொல்வதென்றால்
யாசகம் கேட்டுத்தான்
இத்தனை உயரத்திற்கு வந்து
என்னை அவள்
வாழ்த்தி வணங்கினாள்

கொந்தளித்துகொண்டிருக்கும்
இரண்டு சமுத்திரங்களுக்கு நடுவில்
அவளது உலகம் படைக்கப்பட்டிருந்ததாக
சொல்லியழுத பொது
எனது கடல்களும் உப்புக்கனதியால்
உவர்க்கத்தொடங்கின

மிகவும் குறுகிய நன்மைகள் மட்டுமே
அனுபவித்திருக்க வேண்டுமவள்
இல்லையென்றால் துயரங்களையே
வாழ்வாக்கியிருக்க வேண்டிய
அவசியமிருந்திருக்காது

இனிமைகளை பருக எத்தனித்து
ஏக்கத்தின் தாகத்தால்
தோற்றதொரு தோற்றம்
முகம் முழுக்க நிரம்பி வழிந்தது பசியாய்

கைப்பிடித்தவன் கைகளுவியதால்
எந்த ஆறுதல்களாலும்
அணைக்கப்படாத தீ
அவள் தேகமெங்கும்
தீய்த்திருக்க வேண்டும்

கொடுத்ததை வாங்கியவள்
நன்றிப்பூக்களை உதிர விட்டு 
படிக்கட்டுகளில்
இறங்கிக்கொண்டிருந்தாள்
தடுக்கி விழுந்து அவள் முன்
உருண்டு கொண்டிருந்தது என் மனசு
அவளது வாழ்க்கையைப்போல்!

சனி, 6 அக்டோபர், 2012

பிரியமான தூண்டில் காரிக்கு.



காயத்தை தருவதிலே உந்தன் பங்கு
கனிசமாய் ஆனதனால் நானோ நொந்து
மாயத்தை விளங்காமல் அனுதினமும்
மன்றாடி தோற்கின்றேன் உந்தன் முன்பு

பேசாமல் வார்த்தை யொன்றை இதழ்களிடை
பிசைகின்ற படிமத்தை சொல்வதென்றால்
நாளொன்று போதாது ஆரணங்கே-உன்
நளினத்தில் பதிலின்றி திரும்புகின்றேன்

சாமத்து கனவுகளில் அருகில் வந்து
சரிபாதி நானென்று பீத்துகின்றாய்
நாயத்தை கேற்கின்றேன் சொல்லாமல் நீ
நழுவி தான் போகின்றாய் நியாயம் தானா?

பாவத்தை செய்து விட்ட பரம்பரைக்கு
பழிதீர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடா
கோபத்தை கண்களிலே கொப்பளித்து
கொல்கின்றாய் பெண்ணே இது பாவம் தானே?

மோகத்தில் உன் பின்னே பருவ காலம்
முடிவின்றி போயிற்று என்பதாலே
விடிவின்றி யாக்காது எந்தன் வாழ்வை
விடை கூறி,இணையாகி வாழ வா நீ.