வெள்ளி, 12 ஜூலை, 2013

நீ.. மழையாகிற கணங்கள்!

நீ.. மழையாகிற கணங்கள்!


முகப் பூவிரிய

மழையாய் நீ வந்து போகிறபோது
மனசு மண்மணக்க
குளிர்ந்து போகின்றன
எம் நிலப்பரப்பெங்கும்

எமக்குள் பூத்தபடி
வாச நெடி கமழும் சோலையை
தும்பிகள் உலவும் வெளியினை
சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகளின்
இசையோடிணைந்த பறத்தல்களை என..
வயலும்,வளமும் சார்ந்த
மாருதமொன்றை நீ
பார்வைகளால் பதியமிடுகின்றாய்

கொடுங் கோடையிலும்
ஈரப்பதம் மிகு இதம் தரும்
சிலிர்ப்பான சில்மிஷங்கள்
உனக்கே உரித்தான உரிமம்
அவ்வப் போது எமக்கும்
பந்தி வைத்து பசியாற்றுகிறாய்

ஜீவித வெடிப்புகளின் இடையே
உயிர் உடைந்து உருகி
கலைகிற கணங்களெல்லாம்
புன்னகைத்து பூஞ்சரங்களை
பா சரமாய் பரிசாய் பகிர்கிறாய்

பிறப்பித்தலின் விலையை
சிறப்பித்தல்களால் தர விளைகிறாய் நீ
வண்ணங்கள் கலந்து உன்னை
வடிக்காத போதும்
எம் எண்ணங்கள் உணர்ந்து
இலங்கிடும் உயிர் ஓவியமே

எமது இறுதி வரை
இதே மனசோடும் வயதோடும்
இப்படியே இருக்க மாட்டாயா?
மனம் ஏங்கிற தினங்களில்
மழையாகிற கணங்களாய்!