திங்கள், 17 டிசம்பர், 2012

விலகி நில்!


ஒவ்வொரு இரவிலும் பூக்கூடைகள் 
இறக்கி வைத்தாய்
என் மன வாசலெங்கும் வாசம்
சொற்க வசம் ஏகிய கனவுகள்
நீ தந்தாய்......
என் வாழ்க்கை திரண்டு, முற்றி
அர்த்தமாகி விட்டதென்ற ஒரு
அநியாய கற்பனையில் கனிந்தேன்

குறும் புன்னகை வீசி 
சூடான பானத்தை ஆறிய
பார்வையால் பருகி
குடும்பத்தை அனுப்பி பேசுவதாக
குறிவேறு சொல்லி குடிபெயர்ந்தாய்

நாற்திசையும் முற்ற வெளியெங்கும்
நம்பிக்கையின் வேர்கள் நட்டாய்
சுற்றத்தினர்  முகங்களில்
சுமுக புன்னகையின் பூக்கள்
எனக்குள் பட்டாம் பூச்சிகளின் பறத்தல்

வந்தவர்கள் உன் வாக்குமூலத்தை
சமர்பித்தார்கள்
என்னை உயிருடன் எரிக்க
சிதைக்கு வைக்கும் சிறு தீயாய் ....!
பொறிகலங்கி  போனேன் நான்
அசையும் வாகனம்,
அசையா சீதனம்-சீர்வரிசை
போதாதற்கு என் அழகை விமர்சித்து
ஒரு ஆச்சரியகுறிப்பு 

நிறங்களை மொழிபெயர்த்து
விமர்சித்த உன் கூற்றை
நான்  ஆட்சேபிக்கின்றேன்

என் கருமையை வசைபாட
உன்னை நான் நியமித்தாய்
நீ  நினைத்திருக்கிறாய்
உன் அறியாமையை
பறைசாற்றியபடி..............,

கிழடாகிப்போன உன்னையும்
மலடாகிப்போன உன் மனசையும்
கட்டிக்கொண்டு காலமெல்லாம் அழ
நாதியற்றவள் என்று நீ
நம்பிக்கொண்டாய் போலும்?
சீ..கேவலம்
விமோசனம் வேண்டும் விலகி  நில்!