சனி, 30 ஏப்ரல், 2016



மிதக்கும் தக்கைகளில்
உள்ளே முள் வைத்து
ஊண் முலாம் பூசி
உலையேற்றும்
தோரணையோடு
தொங்கிக் கொண்டிருக்கும்
இரை நாக்குகளே
தெளிந்த நீர் திவலைகளை
இனியாகிலும் தீட்டாக்க வேண்டாம்

கனவுகளின் மீன் குஞ்சுகளை
உங்கள் பசிப் பாசி “சத்து”க்கு
பந்தி வைத்து பலி பீடமேற்றி
ஆங்காங்கே அசுரர்களாய்
அவர்களின் நதிகளை
தூர் வாரி நீங்கள்
துப்பரவு செய்ததாய்
கூவங்களில் வீசிய
கொடுமை போதும்


உடையும் பொம்மை கண்டாலே
உதிர்ந்து விழும் பூ மனசுகளை
வேரோடு  சாய்த்துவிடும்
வெறித்தனம் வேண்டாம் இனி..

புலர்வின் வெளிச்சங்கள் சுமந்த
விடிவெள்ளிகளை
உலுக்கி உதிர்த்து உயிர் பலியாக்காது
அவர்களின்
வதிவிடங்களில் வாழவிடுங்கள்


மின் வேட்டுகளையோ
இடி முழக்கங்களையோ இறக்கி
பெருவெள்ளத்தை துவக்கி வைக்காமல்
நட்சத்திரங்களின் வானத்தை
சிதைத்து விடாமல்
சன்னலை திறந்துவிடுங்கள்
தூறும் மழை ரசித்து
துள்ளி மகிழட்டும்
அந்த குழந்தை மீன் கூட்டங்கள்

இலைகளை உலுக்கி விடாதீர்கள்
கனவுகள் உடைந்து விடும்
பட்டாம் பூச்சிகளின் வெளி
அலாதியான உலகம்.


*****************
சிறுவர்கள்,சிறுமிகள் மீதான கொடுமைக்கு

எதிரான குரலாய்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கசப்பில் முடியும் கடைசித்துளி..




ஆற விட்டு,ஆறவிட்டு
அருந்தி முடிக்கிறேன்
காலம் என்னிடம் கையளித்த
இந்த தேனீர் கோப்பை
தீரும் நேரம்


பழகிப்,பழகி பருகியாயிற்று
இனிப்பில் தொடங்கி
கசப்பில் முடிகிறது கடைசித்துளி


நிலைக்க விடாது நிதம்
பின் தொடர்கின்ற
பிணக்குகளை விட்டும்
துரிதமாய் நான் மிக தூரமாவேன்

இப்போது கடக்க இருக்கும் படி
கடைசிப் படியாய் இருக்கலாம்
இந்நொடி உள்ளிழுத்த சுவாசம்
இறுதி மூச்சாய் இருக்கலாம்


எந்த குளிருக்கும் தெரியாத
ஒரு கோடையை
எந்த பகலும் அறிந்திரா
ஒரு இரவை
எந்த பேச்சுக்கும் பதிலற்ற
ஒரு மௌனத்தை
நிரந்தரமாய்

நான் விட்டுச் செல்வேன்!

சிலிர்ப்பு மிகு இந்நொடி.....,


அதிரசங்களில் இல்லா
சுவையூறிய உன் மொழி நடையில்
காந்தத்தை மிஞ்சிய
வசீகரத்தின் ஈர்ப்பால்
உன்னை வந்தடைந்திருக்க வேண்டும்
என் மனப் பட்டாம்பூச்சி

காதல் பூமேயும் தேனீயாய்
கண்களை சிபார்சு செய்யும் வனத்தில்
உள்ளச் சிறகசைய மிதக்கிறேன்

தவிர்க்க முடியா இனிமைகளில்
லயித்தல் சுகமாகும் கணம்
வாசமிகு ஜவ்வாதுகளில்
ஒன்றி விடுவது இயல்பாகிறது.

கற்பனைக் கொடி துளிர்க்க
நெற்றிக் கிளையில் குங்குமப் பூ
கூடை நிறைக்கிறது
கொத்து மல்லி வாசம்
அல்வாவின் ருசியில் எச்சில் புரள
நாவெங்கும் மாதுளை முத்துக்கள்

சிலிரப்பு மிகு இந்நொடி
கனவுகளின் தீர்ப்பை
திருத்தி எழுதுவது விதி என்றால்
ஆயுளுக்கும் போதுமானதாய்
காலமே எனக்கொரு
கைக்குட்டை செய்தனுப்பு

இடம் பெயர்ந்து
பரீட்சையமற்ற பாதைதான்
பயணமென்றால்
நான் தொலைகிறேன் வழிவிடு

சூழ்நிலை சுவரில்
ஆணியாய் என்னை அறை
அவனில் என்னையோ
என்னில் அவனையோ
மாட்டி விடுவதற்கான கட்டத்தை
நெருங்கிவிட்டதா இறுதிச்சுற்று
அப்படியாயின்
அவனது முற்றத்தில் என் கோலத்தை
கண்ணீரில் கரைத்து
எப்படி வரைவது என்ற இடத்தில்தான்
முதல் புள்ளியை வைக்க வேண்டும்.