சனி, 4 ஏப்ரல், 2015

வஞ்சித்தல்!



கண்கொத்திப் பாம்பின்
சாயல் ஒத்த
உன் பார்வைவிழ
என் கிளை பிரிகிறது

தனித்த தண்டவாளமாய்
இழுபட்டு போயிற்று
வாழ்வின் இருப்பு

கூட்டுப் பிரார்த்தனையின்
அதிஉச்ச நம்பிக்கையை
நீ வீசிய சிறு கல் சிதைத்திற்று


இந்த வதைகளில்
எந்த ரசமும் இருப்பதற்கான
சாத்தியமும் இல்லை இனி...
அது வெறும் மெழுகு சிலையாய்
உருகி வடிந்து உறைகிறது
என்பதை தவிர

தவத்தின் உச்சக்கட்டங்களை தாண்டி
மனம் விரும்பியதென்று மார்தட்டி
பசி மறந்து,துயில் துறந்து
பெருக்கிய முற்றம்
இன்றுன் ஆக்கிரமிப்பின்
அத்துமீறல்களுக்குள் அகப்பட்டு
சீர் குலைந்து சிதறிய வாசலாய்

பொறிகலங்க வைக்கும் அறங்களை
புகட்டவும்,போதிக்கவும்
சாத்தியமாகும் உன்னால் என்பதை
சாட்சி பகிர்ந்திற்று
சமகால நடவடிக்கைகள்

வார்த்தைகளால் தீயிட்டு கொளுத்தவும்
வஞ்சித்தலால் கூந்தல் கட்டி விரட்டவும்
அறியுமாயிருந்த உனக்கு
இழப்பு,தவிப்பு எதையும் நீ
அறிந்துணர அவகாசம் எடுக்கவில்லை

சுவைமிகு என் மனசின் துணுக்குகளை
படித்துப் பார்க்க தவறும் எல்லா காலத்திலும்
ரசம் வடியும் தேனீயாய்
இறுதிக்கணம் வரை
நான் சுற்றி அலைவேன்
நீ கலைத்து விட்ட இவ்வெளியில்!