வியாழன், 28 ஜூன், 2012

முட்டையின் கோதுகளிலான வாழ்க்கை.




  1. இது இக்கணமே
    உடைந்துநொறுங்கும் சாத்தியங்களால்
    நிரப்பப்பட்டிருப்பது தெளிவாகிற்று

    இன்றைக்கும் கனவுகள்
    எழுந்து விழிப்பதற்கு ஏதுவாக
    அழகும்,பதுமையும் நிறைந்த
    பெரும் தரித்திரங்களை அழைத்துவந்து
    நிறுத்திவிடுகிறது வாசலில்

    இதிலிருந்தே அறியமுடிகிறது
    இவை பாதுகாப்பற்ற மேற்பூச்சுநிறைந்த
    படாடோபமென்று

    ஒழுங்கு படுத்தல்களோ,உறுதிப்பாடோஇன்றி
    சிக்கல்களை தோற்றுவிக்கிறபடி
    தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த நொடிவரை

    எவரையும் பயமுறுத்தி வீழ்த்த பயிற்றப்பட்ட
    மிருகத்தைப்போல

    உறுமியபடி துரத்திக்கொண்டிருக்கிறது காலம்.

செவ்வாய், 26 ஜூன், 2012

நினைவு கூறல்.

வாசற்படி,தின்னை,என் அன்னைமடி
எப்பொழுதும் நான்
ஞாபகங்களால் தவழ்ந்து விளையாடும்
ஞானமடங்கள்
பூரணமான எனது
புனிதஷ்த்தலங்கள்

வாழ்க்கையை திரும்பிப்பார்க்கிறபோது
தென்படும் என் திசைகள்
தன் துணையை பயணமொன்றுக்கு
கையசைத்து வழியனுப்ப மனமின்றி தவிக்கும்
காதலியைப்போல் நானும்

மயிலிறகால் வருடும்
மழலை பருவத்தை 
நிகழ்காலத்தில் நினைவுகளில் கூட
மீட்டிப்பார்க்கநேரமின்றி
மின் விசிறியாய் சுழல்கிறேன்

காலம் என்னை
தன் அடுப்பன் கரையின்
அம்மிக்கல் போலவே ஆக்கிவிட்டது.

சனி, 16 ஜூன், 2012

நக்குத்தின்னிக் காகம்.

மாம்பழக்குருவியின் அழகில்
ஒரு கொளுத்த கொக்குபோல் அது வந்தது
இப்ப அவிஞ்சவெங்காயம்.
செப்பத்தப்பாரு.
அதுர மூஞ்சியும்,மொகறையும்
'கரண்ட்'அடிச்ச வெளவாலாய் கறுத்துபோச்சு.

அவன்ட,இவன்ட எச்சிக்கு
அலையவேண்டி இருக்கு.
ஒழுங்கா இருக்க தெரியாததால
ஒன்டித்திரியுது.

சொந்தக்காற காகம்,சாச்சாமொற
என்ன பலாய்க்குத்தான் இப்படி செஞ்சிதோ
காச கொடுத்து கஷ்ட்டத்த வாங்கின கதைதான்.

பாயாத பண்டிஎண்டன்
கேட்டுதா கெழட்டுகாகம்?
'ஹறாம்'குட்டியா இப்ப அலைஞ்சி திரியுது.
சட்டப்படிவேலையும் இல்ல நல்ல
சரியாக வேளைக்கும் இல்ல திண்ண.






குடையுடன் வந்த மழை.


முதன்,முதலாய் கிழக்கின்
மாரிமூலைக்குள்ளிருந்துதான் எட்டிப்பார்த்தது
பின்-ஊருக்குள் வந்து
வாசலுக்கு முன்னாலிருக்கும் ஒழுங்கையால் போனது.

கருப்பும்,வெழுப்பும் கலந்த புதுநிறம்
பார்ப்பதற்கு ஒருசாதி மப்பும்,மந்தாரமுமாய் இருந்தது
எல்லோரும் சொல்வதுபோல்
பருவகாலத்து மழையோன்றுதான் அது.

மின்னலை கண்களில் செருகி வைத்திருந்தது
எப்போது வேண்டுமானாலும்
களற்றி வீசுவதற்கு தயாராக.

'இதப்போல எத்தன மழைய பாத்திருக்கம்'
என்றவன் மீது இடியை
வெற்றிலைபாக்கு போல் வாயில் மென்று துப்பியபடி
 கையில் குடையுடன் காலாற நடந்த கன்னிமழையது.

அதுக்கென்ன பெய்தும்,பேயாமலும் போனது
 ஒழுகிக்கரைந்து நனைந்து கொடுகியது நான்தானே.


புதன், 13 ஜூன், 2012

மீண்டுமொரு யாசிப்பு.


ஞாபகங்களில்
ஒரு மொட்டின் இதழ்விரிப்பாய்
சில்லென மலர்கிறது உன் முகம்.

பிரியதெரிந்த மனதால்
மறக்க தெரிவதில்லை.
உயிர் நிறைய
உறைந்துகிடக்கிறது சிநேகம்.

வாலிபம் முழுதும்
சௌந்தர்யங்கள் தூவிய என் அன்பே,
இடைவெளிகளில்
நாம் சந்தித்த பெரும் கோடைகள்
காயப்படுத்தியதாய் தோனவில்லையெனக்கு,
சிலிர்க்கவைத்த பழைய மழையின்
தூவான,தூறல்களின்முன்.

நிமிர்ந்த மரங்கள் நிறைந்த
பள்ளிச்சாலையில் நீ ..,
குனிந்தபடி குவிந்துநடந்ததும்
நானுன்னை தொடர்ந்து கடந்ததும்
ஈரம் காயாமல் இன்னும்.

திங்கள், 11 ஜூன், 2012

நெருப்பள்ளிக்கொட்டும் வெயில்.


உருகி வழிகிறது உசிர்
கடைசி மூச்சை இருகப்பிடித்திருக்கும்
கட்டாயத்தில் மனிதம்
போறணையில் போட்ட பாணாய்
பொங்கி அவிகிறதுதேகம்.

என்ரவாப்பா இது என்ன வெயிலப்பா
வேம்பிப்பளுக்கிறதும்,கொட்டுண்டுபோகிறதும்
இங்கதான்கூட இந்த மயிர்.
வேண்டாண்டம்பி இந்த வெளிநாட்டு மோகம்.

போகணும் அடுத்த ஜூனுக்கிடையில்
மிக அவசரமாய் போகணும்
ஊரை நினைக்கையில் ஒப்பாரி வைக்கிறது மனசு
சீ...என்ன வேக்காடு,கண்கெட்டு ஊத்துண்ணும் சூடு.

நாசமத்த காலம் ஏன்தான் சூரியனை 
தொண்டைக்குள் இறக்கி வைத்திருக்கிறதோ தெரியாது.
விழுங்கி சாகடிக்கவேண்டியதுதானே 
உலகத்தை ஒரு நொடிப்பொழுதில்.


கடந்த ஜூன் வீரகேசரி மத்தியகிழக்கு பதிப்பில் பிரசுரமானது.

ஞாயிறு, 10 ஜூன், 2012

புன்னகையால் ஒரு போர் செய்.



புன்னகை
இதயம் நிகழ்த்தும் தொழுகை
இதழ்கள் புகழ்த்தும் கவிதை.

முகவரி அறியா முகத்தையும்
புன்னகையால் புலம் விசாரிப்பதால்
மொழிப்பிரச்சினையில்லா நலன் விசாரிப்பு

புன்னகை ஒரு புனிதப்போர்
இரும்பை உருக்கும் ஈர்ப்புத்திரவம்
இரு இதழ் நடத்தும் ஈரச்சரசம்

புன்னகை மௌனத்திற்கெதிரான பிரகடனம்
புன்னகை புனிதமான புதிர் நடனம்
புன்னகை பொக்கிஷம்,புன்னகை அற்புதம்
புன்னகை பலம்,புன்னகை தவம்
புன்னகை சந்தோசத்தின் சரணாலயம்
புன்னகை சங்கீதத்தின் சாம்ராஜ்யம்.

முதலீடு அல்லாமல் செலவு செய்யும் மூலதனம்
முதல் போட்டால் கிடைக்கும் வேதனம்.
புன்னகை வணங்கும் கை
புன்னகை வாழ்த்தும் மெய்

புன்னகை மனிதனே
உனக்கு மட்டும் கிடைத்த உயிர்ப்பு
காணும் உயிர்களை கண்களால் நலம் கேள்
புன்னகையால் வணங்கு
புன்னகையால் வாழ்த்து ....,முடிந்தால்
புன்னகையால் ஒரு போர் செய்.






புதன், 6 ஜூன், 2012

பழையபடி மரங்கள் பூக்கும்


பெரும் நெருப்பின் சுவாலை தணிந்து
பனி நடக்கும் ஊரில் பஞ்சுமெத்தை விரித்து
புற்கள் வரவேற்கும் கால்களை.

கன்றிய இதயங்கள் இளகி
முகம் பார்க்கும் மலர்களில்.
கூட்டு பறத்தலினூடே காற்றில் அசையும்
புள்ளினங்களின் தேர்ந்த பாடலில் மயங்கி
உயிர்கள் கழித்து விளையாடும்.

நிறைந்த குளங்களிலிருந்து
குதித்துவிழும் மீன்கறிவாசம் பசியின் வயிறு தடவும்.
நிலவை தட்டில் பிசைந்து ஊட்டிய பாட்டி
நினைவில் நின்று சிரிப்பாள்,
மனைவியின் உருவில் பேரப் பிள்ளைகளுடன்.
வடக்கின் குட்டானை கிழக்கின் நாருசிக்க
ஒடியல் காயும் வாசலெங்கும்.

பஞ்சத்தில் வேரிறக்கி பயிர்கள் காய்க்கும்
பரீட்சய முகங்களுடன் புதிது,புதிதாய்.
பிரிவின் இளப்பில் உறைந்து உட்கார்ந்த மனங்கள்
மீண்டெளும் விட்ட இடத்திலிருந்து தொடங்க

போகும் வழியில்
தலை தெறித்து, உயிர் மரித்து முண்டமாய் நிற்கும்
பனையின் அடியில்
புனை முருங்கை விதைகளை புதைத்து விடுவோம்
பழையபடி மரங்கள் பூக்க.

திங்கள், 4 ஜூன், 2012

குளத்தை நினைந்தழுது .....!



அல்லி மலர்ந்த குளம்
ஆம்பல்கள் நிறைந்தகுளம்
கல்லில் துணிதுவைத்து
களிப்போடு குளித்தகுளம்
சள்ளல் மீன் பிடித்து
சமைத்துண்டு மகிழ்ந்தகுளம்
இப்போது எங்கே இதயம் கனக்கிறது ,
இருவிழியும் பனிக்கிறது ......

ஊர் முற்றி கூடியதால்
உருமாறி போனதுவா..?
நீர்வற்றி போனதனால்
நிறம்மாறி போனதுவா ....?
ஈரைந்து வருடங்கள்
இல்லாத இடைவெளியை
ஆராய்ந்து பார்க்கையிலே
அடிமனது வலிக்கிறது ........

ஊரை முடமாக்கி -கல்மேல்
உட்கார வைத்திருக்கும்
பேரை நினைக்கையிலே
பிரியம் அன்றி கோபம் வரும் .
கல்மனையால் ,கட்டிடத்தால்
காணாமல் போயிருக்கும்
குளத்தை நினைந்தழுது
குளிக்கிறது இருவிழியும்.......

சினை வைத்த மீன்களெல்லாம்
செத்திறந்து போயிருக்கும்
ஒற்றைக்கால் தவமிருந்த
ஊர் கொக்கும் செத்திருக்கும்
பொட்டியான் மீன் புறக்கி
புதருக்குள் வைத்துண்ட
பூனையும் செத்திருக்கும்

இடுப்பில் குடமிடுக்கி
இசைப்பாட்டு பாடிவந்த
இளசுகள் முதிர்ந்திருக்கும் ....,
இருந்தும் மனதில்
பழசுகள் படிந்திருக்கும் .

ஞாயிறு, 3 ஜூன், 2012

பசியின் வலை...!



நீரில் எதிர்நீச்சலுடன்...
விழித்தபடி வலையின் கண்கள்

அசரும் நிமிசங்களிலெல்லாம்
வண்ணத்துப்பூச்சியின் நிறங்களில்
கூடை, கூடையாய்
கனவுகள்!

நங்கூரமிட்டும்
தள்ளாடிக்கொண்டிருக்கிறது தோணி
மீனவனின் குடும்பத்தைப்போல்...

சோர்வு வருகிறகணம்
தரை தட்ட எத்தனிக்கிறது மனசு

சவளை ஊன்றிவலிக்கிற
சாட்டில்
ஓங்கியும் அடித்தாச்சு...
மீனை விரட்டி
சிக்கிய ஒன்றிரண்டும்
ஆமை சப்பிய முள்கூடாய்

இருந்தும்;
ஏதேனும் ஒரு பாடு
மனப்பாரம் குறைக்கும்
புலால் விற்றகாசில்
பொழுது புலர்த்தி
சதாபொழுதை சமாளிக்க!

இடையில் வரவிருக்கும்
பெருநாள் - ஐந்து உசிரின்
புத்தாடை கனவு
வலையின் திறந்த கண்களின் வழியே
பழையபடி கலைந்து சிதறும்...!!
வில்லுக்குளத்தின் படுகைகளில்...!
                                      தினகரன் வாரமஞ்சரி 03 ஜூன் 2012

சனி, 2 ஜூன், 2012

பாதுகாப்பு வலயத்திற்குள் .

ங்கொய்....,ங்கொய்.

நுளம்புகளின் தொணதொணப்பு

அருச்சனியத்தை உண்டாக்குகின்றன.
"சனியன் புடிச்சதுகள்"
பளாரென்று செவியில் ஒரு அறை
வலி எனக்கு
நுளம்பைக்கொன்ற திருப்தி மனசுக்கு

இனி செரிவராது வலைகட்டணும்.
என்ன வாழ்க்கையிது அலுப்புதட்டியது.

"நேரம் போகுது படுறப்பா"
கட்டிலிடுக்குகளிலிருந்து...,
மூட்டைகள் சொன்னது.



வெள்ளி, 1 ஜூன், 2012

அண்டப்புளுகன்

முன்பொருநாள் கண்ட அதேபோலிவுடன் ஊர்.
மேடை,தோரணம்,கொடியென
இம்முறையும் தெருத்,தெருவாய்
மலிந்துகிடந்தது அவனது பெயர்.

வான் பிளக்கும் பட்டாசு வெடிகள்,
அண்ணாவியர்களின் பொல்லடி,
பாவாக்களின் ரப்பான்மேளம்,
பொண்டுகள் குலவையென
நாட்டின் பெரும் தியாகியைப்போல்
வரவழைக்கப்பட்டான்.

விளம்பரப்பலகைபோல் முன்வரிசையில்,
ஊரின் முதிர்ந்த முகங்கள்
களைகட்டியிருந்தது மேடை

பேச ஆரம்பித்தசிலர்
ஏளெட்டுட்டுப்பேரை கழுகி குடித்தனர்.
அந்த பகுதியில் அடித்த காற்றில்
ஒரு சாதி செடிநாத்தம்.
சுவாசிக்க முடியாமலிருந்தது.
இப்போது அவன் முறை
கரகோசத்தோடுபேசஎழுந்தான்
சூனியகாரர்களின் வித்தைகள்சில தெரியுமவனுக்கு
உலகமகா பொய்களை சாக்கு,சாக்காய்
அவிழ்த்து விட்டான்
மேடையிலிருந்து இறங்கி
தொண்டர்களின் காதுகளிலேறி உட்காரும்படி ஏவி.