புதன், 27 மார்ச், 2013

விருட்சத்தின் முகம்.




விதையின் கருப்பையிலிருந்து
வீரியத்துடன் முட்டி உடைத்த படி
பூமியின் மார்பு தவழ்ந்து
முகமலர்த்தி துளிர்க்கிறது செடி
பனி முகிழ்த்து,மழை குளித்து
வெயில் பருகி,நிழல் நிறுவி
ஒரு தோப்புக்கான ஆயத்தங்களை
இனி தொடங்கி வைக்கும்
தன் கிளைகளின் வழி......

வரும் நாளில் பூப்படையும்,மாசமாகும்
பிஞ்சு பிடிக்கும்,காய்கள் பெருக்கும்
கனிகள் உதிர்க்கும்
பறவைகள் பசியாற பந்தி விரிக்கும்
இலைகள் இறங்கி
வேர்களை முத்தமிடும்
விந்தை நிகழும்
ஒரு அடவிக்கான தயாரெடுத்தலுடன்
...............................................,

அக்கணமே காற்றில் உதிர்ந்து ஒரு பூ
விருட்சத்தின் பெயரை
நிழலால் எழுதி செல்கிறது தினம்
அதன் உபயங்களை....,

வாசல்கள் திறந்து நிதம்
மரத்தின் பக்கங்களை இலவசமாக
வாசிக்கும் மனிதா நீ..
சுய நலங்களால் வடிவமைக்கப்பட்ட
உனது முகத்தை எப்படி அடையாளப்படுத்த
உத்தேசித்திருக்கிறாய்?