ஞாயிறு, 6 ஜனவரி, 2013

என் கவிதை முளைக்கும் தெரு.



வாழ்வை கனவுகண்ட
பூக்கள் பறிக்கப்படும்
ஒவ்வொரு செடியின் அடியிலும்
ஆறுதலாக அமரவேண்டுமென்றுதான்
ஆசை
ஆயினும் அது
சாத்தியப்படுவதில்லை
என்னை துரத்திக்கொண்டிருக்கும்
பேய்களை விரட்டிக்கொண்டிருப்பதால்

துன்பியல் நெரிசல்களின்
அடர்த்தி செறிய
பயங்கரங்களின் வாய்நிறைய
பற்கள்
கடித்து குதற ஏதுவான கூர்மையுடன்

நாக்கின் பாதுகாப்பு
அச்சுறுத்தல்களுக்குள்ளான
கணம் என்பதால்
அநியாயத்திற்கு
மவுனிக்க வேண்டியிருக்கிறது

இப்பவும் யாரோ ஒருவரின் நியாயமற்ற
மிக கோபமான பார்வை
எகுகளை பாய்ச்சிவிடுகின்றன
மலைகளையே குழாங்கற்களாய்
தூக்கி வீசி
ஆவிகளை ஓட்டுகிறவனுக்கு
அம்புகள் தூசி......அறிக!

எனக்காக நேரத்தை செலவழித்து
நீங்கள் சிரமப்பட வேண்டாம்,
இதில் ஏதும் இல்லையென்று
கோபித்து குறைசொல்லவும் வேண்டாம்
ஏனனில் இது
உங்களுக்காக படைக்கப்பட்டதல்ல

வரண்ட தெரு வெளியில்
பசியில் அலையும்
கறவை பசுவோன்றிற்கு
காராம் புல்லாய் இருந்து
விட்டு போகட்டும் என் இது.