செவ்வாய், 27 நவம்பர், 2012

வெட்கமில்லா மனிதர்கள்.




விசுவாச மனிதனென்றும்
பசுவான புனிதனென்றும்
அக்கரை உள்ளவன் போல்
அவைகளை நிரப்புகின்றார்
சர்ச்சைகள் என்று வந்தால்
சபையதில் தலைமறைத்து
பச்சையாய் பொய்கள் சொல்லி
பதவியை தக்கவைப்பார்
வெட்கமே இல்லாவாறு
வெளியிலே தலைவன் என்பார்

பாமரன் போன்று பேசி
பம்மாத்து வேலை செய்யும்
கொச்சையாய் போன ஒரு
கொள்கையை வைத்துக்கொண்டு
அச்சமே இல்லாவாறு
ஆழ்கிறார் ஊரை எல்லாம்
நிச்சயம் இவர்களெல்லாம்
நீதியின் முன் நிறுத்து
தண்டனை கொடுத்து நன்று
தகுதியை களைய வேண்டும்

உத்தமன் போல பேச்சு
உளுத்தது போல சேவை
சத்திய வானைப்போல
சமுகத்தை விற்றபடி
புத்தியே கெட்டுலவும்
போலிகள் முகம் கிழித்து
வெட்கமே இல்லார் என்று
வெளியிலே காட்ட வேண்டும்

நம்மிலிருக்கும் இன்னொரு முகம்.




மனசுக்குள்
விஷமுள்ள பாம்புகளும்,
கொடிய மிருகங்களும்
வளர்த்தபடி
நாம் எப்போதும் 
சுயநலத்தின் வட்டத்தினுள்ளேயே
சுற்றிக்கொண்டிருக்கின்றோம்

நமக்கு தெரியாததை விட
தெரிந்தது அதிகம் என்று
தெளிந்தும் இருக்கிறோம்
பூஜ்ஜியத்தினுள் அதிகம் பொருள்
இல்லை என்பதை
இன்னும் புரியாதவர்காளாய்

வெப்பம் தகிக்கிற வேளை
நிழல்களை தரிசிக்கிறோம்
இலைகள் உதிர்கிற கணம்
வேர்களை மறந்து விட்ட படி..

கணிப்புகள் நம்மை சூழ்ந்து
சிந்திக்க வேண்டும் என்றே
முகங்களை வடிவமைத்து
வரம்புகளை மீறுவதர்க்கென்றே
கால்களை தயார் படுத்துகின்றோம்
ஒவ்வொரு முறையும்!

செவ்வாய், 20 நவம்பர், 2012

மனிதம் அழிந்த பின் மண் எதற்கு?




பிஞ்சு அரும்புகளின் உயிர் பிய்த்து
குருதியில் குளிப்பாட்டி கபனிடுகின்றன
இஸ்ரேலிய ஈனப் பிசாசுகள்

காஸாவில் உதிரும் உயிர்களுக்கு பகர
கண்ணீர் துளிக்குக்கூட
கஞ்சத்தனம் பார்க்கும்
பல.. கல்புகள்(கல்ப் கன்றிகள்)

தற்காப்புக்காக உலக சண்டியனை
தலையணைக்கடியில் வைத்து
வணங்குபவர்களே இது கேளும்.....,
மௌனித்த படி நீங்கள் இன்னும்
ஊமையாக உலவினால்
எதிர்காலத்தில் உங்கள்
எண்ணை கிணறுகளில்
இரத்தம் வடித்து
ஏற்றுமதி செய்யவரும்

யூதர்களின் யுத்த வெறியை
நித்தம் நினைக்கையில்
 நாளங்கள் வெடித்து கொப்பளிக்க
இதயத்தை நனைத்து விடுகிறது
இரத்தத்தின் ஈரம்

இங்கே
பாசிச புடையாங்களின் பல்லை பிடுங்க
வக்கின்றிப்போய்
வழி புரியாமல் ஐ.நா வாய்பொத்தி
சாரைகளுக்கு சமாதானம் சொல்கிறது

பூமி பிடிக்கும் நோக்கோடு
வசிப்பவனுக்கு
புதை குழி தோண்டுபவனே
மனிதம் அழிந்த போன பின்
எதுக்குடா இந்த மண்?

ஞாயிறு, 18 நவம்பர், 2012

நிலவை கொலைசெய்தவன்!




வானாய் விரிந்த பெருவெளியில் 
நட்சத்திரங்களிடை மின்னி ஜொலித்து
பதுமையால் நிரம்பி வழிந்த
பழுங்கு பாத்திரமாய்
அது ஒவ்வொரு நாளையும் செதுக்கி
பருவங்களால் தன் வாழ்வை
சிருஷ்டித்து வைத்திருந்தது

இருளுக்குள் வசித்தவனின்
கனவை  நிரப்பிக்கொண்ட
நிலவை வியந்து பாடினான்
கவிதைகளை அள்ளி இறைத்தான் 
ஒவ்வொரு கணமும் கிறங்கவைத்தான்
நிலவுக்கு இரக்கம் சுரக்க
ஈரம் கவிய
அது அவனுக்காகவே
உதித்து கிடந்தது ஊர்நிறைய ஒளிபரப்பி

 ரசனைகளை அள்ளி  பொழிந்தான்
பூக்களை வரவழைத்து
புதினம் காட்டினான்
உருகி,உருகி பெருக்கெடுத்து
பிரவாகமாகி 
அன்புக்கடல் செய்தான்
அதில் நீந்தி விளயாடுவதான
பாசாங்கினை யாருக்கும்
தெரியாதபடி கரைத்து விட்டான்
நிலா கவிழ்ந்து வீழ்ந்தது கடலில்
அவன் விரித்து வைத்திருந்த
வலையின் மோக கண்கள்
தீவிரமாக திறக்க
மூச்சு முட்டியது நிலவுக்கு

இப்போது சொல்லுங்கள்
நிலவை இவன்தானே கொலை செய்தவன்?

செவ்வாய், 6 நவம்பர், 2012

தாய்மைக்கு என்ன விலை?!


பாசத்தை பங்கிட
உலகில் உன் போல் ஒருத்தி நீதான்
வார்த்தைகளுக்குள்
வரையறுக்க முடியாத
சமுத்திரத்தை மிஞ்சிவிடும்
சரித்திரம் நீ

நிகரில்லா தாய்மை
நிலைக்கின்ற வாய்மை
போலி அறியா பொறுமை
உனக்கு மட்டுமே வாய்த்த வரம்
உன்போல் தாய்மார் இருப்பதால் தான்
பூமி தன் போக்கை மாற்றாமல்
சொகுசுகளோடு இன்னும்
சுழன்றுகொண்டிருக்கின்றது

விதைகளை பயிராக்கி
விருற்சமாக்கும் வித்தை
பூமிக்கு அடுத்து இங்கு
உன்னால் மட்டும்தான்
சாத்தியமாகும் என்பது
உலகம் உணர்ந்த சத்தியம்

உயிருக்குள் ஒட்டுவைத்து
உயிர் வழர்த்து
உதிரத்தை அமுதாக்கி
ஊட்டிவிட்டு
பாதுகாப்பு வலயத்துக்குள்
பத்திரப்படுத்துகிற பக்குவமான 
ஆற்றலும்,ஆளுமையும்
நிறையப் பெற்றவளும்,
நிறைவாய் பெற்றவளும்
நீ மட்டும்தான்

உலகில் நோக்குபவர்களுக்கு
நான் ஊனமுள்ள குறை பிரசவம்
உனக்குமட்டும் நான்
நிகரான சரிசமம்
இல்லாததை இருப்பதாக
உன்னால் மாத்திரம்
எப்படிதாயே ஏற்க முடிகிறது?

சுமையாகி உனக்கு
வலிகளோடு வந்தவனை
சொத்தாக எண்ணி
இறுதிவரை இடுப்பில்
ஏந்தியபடி
என் ஆழுமையை
உலகம் உணரவேண்டும்
என்பதற்காய்
பாதம் தேய,தேய
பல்கலைக்கழகம் வரை
சுமந்து கொண்டிருக்கிறாயே
தாய்மை என்கிற தவமே
உன்னை தாயாய் பெற்றதென் வரமே

இறைவனுக்கு பின்னால் இருக்கும்
இன்னொரு சக்தி
நான் அறிந்தவரை
நீதான் என்பதை நிருபிக்கின்றாய்
உனக்கு விலை உலகில் இல்லை
உனக்கு நிகர் நீயே எல்லை