சனி, 27 ஜூலை, 2013

சர்ப்பங்கள் நெளியும் மண்!


பட்டங்கள் ஏற்றி தும்பிகள் பறந்து

இறகுலரா எங்கள்
பட்டாம் பூச்சிகள் பாடி,ஆடி
மகிழ்ந்துலவிய மலர் வெளிகள்
புடையன்கள் உலவும் புதராய்,
கறையான் களிடமிருந்து
காப்பாற்றிய காணி,பூமிகள் எல்லாம்
இன்று சர்ப்பங்களின் புற்றாய்

யாராலும் எளிதில்
விளங்கிக் கொள்ள ஏதுவற்ற முறையில்
சமாதான பட்சிகளின் வாழ்வின் மிச்சம்
பீதிகளால் மொழி பிரித்திருக்கின்றன

சுதந்திரத்தை அச்சப் படுத்தியவாறு
விரிபுடையன்கள்
மலைப் பாம்புகளின் சாயலில்
மண் பற்றி,விஷத்தை பீய்ச்சியபடி
வழி நெடுகிலும்.................,
புழுதி உறுஞ்சி நெளிகின்றன

முறையற்று பிறப்பித்த
ஹறாம்குட்டிகளாய்
மசூதி,மாட்டிறைச்சிக் கடை,
மையவாடி,தெருக்கோடி என..

எங்கும் இனி..இப்படித்தான்
பாம்புகள் ஊரும் ஊருராய்..
நாட்காலிகளை நகர விடாமல்
தன் இருப்பை தக்க வைப்பதில்
குறியென இருக்கும் ஒரு
சமுகத்தின் குரல்கள் மௌனித்து
பிணமாய் இருக்கும் நாட்களில்!