புதன், 6 ஜூன், 2012

பழையபடி மரங்கள் பூக்கும்


பெரும் நெருப்பின் சுவாலை தணிந்து
பனி நடக்கும் ஊரில் பஞ்சுமெத்தை விரித்து
புற்கள் வரவேற்கும் கால்களை.

கன்றிய இதயங்கள் இளகி
முகம் பார்க்கும் மலர்களில்.
கூட்டு பறத்தலினூடே காற்றில் அசையும்
புள்ளினங்களின் தேர்ந்த பாடலில் மயங்கி
உயிர்கள் கழித்து விளையாடும்.

நிறைந்த குளங்களிலிருந்து
குதித்துவிழும் மீன்கறிவாசம் பசியின் வயிறு தடவும்.
நிலவை தட்டில் பிசைந்து ஊட்டிய பாட்டி
நினைவில் நின்று சிரிப்பாள்,
மனைவியின் உருவில் பேரப் பிள்ளைகளுடன்.
வடக்கின் குட்டானை கிழக்கின் நாருசிக்க
ஒடியல் காயும் வாசலெங்கும்.

பஞ்சத்தில் வேரிறக்கி பயிர்கள் காய்க்கும்
பரீட்சய முகங்களுடன் புதிது,புதிதாய்.
பிரிவின் இளப்பில் உறைந்து உட்கார்ந்த மனங்கள்
மீண்டெளும் விட்ட இடத்திலிருந்து தொடங்க

போகும் வழியில்
தலை தெறித்து, உயிர் மரித்து முண்டமாய் நிற்கும்
பனையின் அடியில்
புனை முருங்கை விதைகளை புதைத்து விடுவோம்
பழையபடி மரங்கள் பூக்க.