ஞாயிறு, 29 ஜூலை, 2012

எரிகின்ற நெருப்பு நான்.


நீ சூடேற்றி மகிழ
புகைந்து ஊறி கனன்ற தீயாய்
உன் வருகைக்காக சாம்பலுக்குள்
புதைத்து வைத்திருந்தேன்
என் முழுமையையும்.

வாசல் திறந்து வெகு நாட்கள்....,
வரவே இல்லை நீ..
தாமதமானதை சொல்வதென்றால்
பத்தாய் கணிக்கத்தகு
இரண்டு காலங்கள் கடந்திருக்கிறது
என்னைத்தாண்டி.

இன்று காலம்,நீ
இரண்டும் எனக்கு ஒன்று போல்தான்.
ஆச்சரியப்பட தகு எந்த நிகழ்வையும்
எனக்குள் நிகழ்த்தாததால்
வாழ்தல் பற்றிய கனவோ
புணர்தல் பற்றிய நினைவோ
தற்போது துளியும் இல்லைஎன்னிடம்.

கால நிலையின் மழைக்கிற
பருவத்தில் இருக்கிறதே ஒரு கதகதப்பு
அதை சமாளிப்பதில் இருக்கும் சங்கடம்
உணர்ந்து,ஊறி உருகி கரைந்த
உணர்வெனது.

மலைகளை எரிக்கும் தாகமிருந்தும்
என்னை குளிர்ப்பிக்க இயலாமல்
தோற்றுப்  போனவனை மட்டும்
பொசிக்கி விடவென்று உமிழ்ந்தனன்று
எரிகின்ற நெருப்பு நான்.

                                          

சனி, 28 ஜூலை, 2012

புது விதி எழுது நீ.


உயிரை பிய்த்து தின்னும் சோகம்
அரங்கேறுகிறது நமக்கு அண்மையில்
கண்களை குருடாகவும்,
மனமதை மலடாகவும்
வைத்திருப்பதா வாழ்க்கையென்பது
சாமானியனாய் இருக்கும் ஈமானியனே
சிந்திப்பதற்கு கூடவா சில நொடி இல்லை?

புத்தனை புகழ்ந்தபடி
காவிக்கறையில் காட்டேரிகளாய்
காடுகளோடலையும் பேய்களின் பிடியில்
புனிதம் மிகு பூக்கள்
வள்லூறுகளின் வல்லுறவுக்கு
நிர்ப்பந்திக்கப்பட்டு நிவாரணமின்றி
அனுதாப்படக்கூட ஆளற்று
சரித்திரம் சுமந்த ஒரு சமுகம்
சரணகெதியடைந்து சாவின் மடியில்.

பிணம் பார்த்து பிரமித்ததும்
மரணம் கண்டு மௌனித்ததும் போதும்
வெகுண்டெழு வேங்கையென
அறிவை தொழினுட்பத்தோடு
தொடர்பு படுத்து
உலகின் புலன்களுக்கு உனது கருத்தை
பயப்படாமல் சேர்க்க ஒரு பாதை செய்.

ஐநா என்ன அதையும் தாண்டி
போக முடியும் இந்த
புதிய தலைமுறையால்
சும்மா இருப்பது சுகம் என்றிராமல்
ஆளக்கால்பதி அதிரடி முடிவெடு
மியன்மார் முஸ்லிம்களுக்காக
இறைவனை இரஞ்சு
தொழுகையில் தினம் துதி
தொழினுட்பத்தால் புது விதி
எழுது நீ இயலும் உன்னால்.











வெள்ளி, 27 ஜூலை, 2012

எவனோ ஒருவனுக்கு ஏதோ ஒரு யோசனை.



விதையொன்றை பார்த்தாகிலும்
உன்னை விசாலமாக்கு
மழைஈரம் கண்டதும் மண்ணை முட்டி
முளையால் தன் முகம் காட்டுகிறதே விதை
அதுதான் அதன் ஆத்மார்த்த பலம்
உனக்குள்ளும் ஓராயிரம் பலம்
ஒளிந்திருக்கிறது
அமாவாசையிலிருந்து விடுபட்டு
வைகறைக்கு வா

நேரம் உரம் வாழ்க்கை பயிருக்கு வளம்
ஒவ்வொரு வினாடியையும்
ஔடதமாய் அளவிடு
கையாலாகாத்தனத்தை கை விடு
விதிக்கப்பட்ட வாழ்வின் விபரம் படி
மகானாகவோ,மாகாத்மாவாகவோ வேண்டாம்
முதலில் மனிதனாக மாறு-பின் 
புனிதனாகத்தேறு

சிந்திக்கத் தெரிந்திருக்கிறது அல்லவா
அது உனக்கு கிடைத்த சிறப்பு விருது
கவனமாக கையாளு
முடிந்ததைஎல்லாம் படி
முடியாததையும் செய்து பார்க்க முனை
பின்னென்ன
எதையும் செய்து முடிக்க இயலும் என்ற
தெளிவு உன்னை
வெளியிளிருப்போர்க்கு விபரிக்கும்

சலவை செய்யும் பொது கறையும் கரையும்
நீ உன் புத்தியை புடம் போடும் பொது
அது உன் சக்தியின் பலத்தை
சத்தியம் செய்யும்
கடிகாரத்தை கொஞ்சம் கவனி
விநாடி முள்ளால் தானே மணியையும்,நாளையும்
நகர்த்தி விடுகிறது
காலம் சும்மா இருந்தால் சுற்றுமா பூமி?

எறும்பு,தேனீ இரண்டில் ஒன்றின்
கொள்கையாவது உனக்குள் கொண்டுவா
வாழ்க்கை பூ வனமல்ல,போர்க்களம்
வெற்றியை தேடி விரை

மகத்துவம் மிக்க மனிதா
எப்போதும் எடுப்பார் கைப்பிள்ளையாய் இராதே
அது சோம்பேறியாக்கும் அன்றில்
கோழையாக்கும்
நீ ஆளப்பிறந்தவன்,புவியை வென்று
வாழப்பிறந்தவன்
சுமைகளை சுகமாக நேசி
தோல்விகளை வெற்றி என்று சுவாசி

ஒரு தோல்வியின் முடிவுதான் உனக்கு
வெற்றியின் விலாசம் தருகிறது
விழத்தெரியாதவனால் எழத்தெரியுமா என்ன
யோசி நல்ல மனிதர்களை வாசி
 காற்றில் தூய்மையிருந்தால் நோய் நெருங்காது
சுவாசத்தில் தூசியிருந்தால் சுகம் திரும்பாது
ஆரோக்கியம் அற்றவனுக்கு
ஆயுள் குறுக்கப்படுகிறது
சுகதேசியின் வாழ்க்கை நீட்டப்படுகிறது
சிக்கல்கள் பற்றி சதா
சிந்தித்துக்கொண்டிருப்பவனே
முடிச்சுகளை அவிழ்க்க முனை

அடுத்தவனுக்கு குழி பறிப்பதை விட்டு,விட்டு
உனது பாதையை சீர்செய்ய சிரத்தைஎடு
ஒருவனாவது உன்னால் உயர  ஒரு படியாகு
இல்லையெனில்;
ஒழுக கற்ருயர்ந்து நீ உருப்படியாகு.

கனவு தேசத்து அழகிக்கு.


நிஷ்ட்டை கலைத்து நெஞ்சு நுழைந்து
நேர் எதிர் வந்தவளே
கொஞ்சு தமிழில் குளைத்துவார்த்தை
கொள்ளை கொண்டவளே
எண்ண இனிக்கும் இன்ப நிகழ்வை
எனக்குள் தந்தவளே
வண்ணக்கனவாய் வாசல் வந்து
வருடிச்சென்றவளே

சிரித்து மயக்கும் பூவாய் வந்து
சிநேகம் கொண்டவளே
சிறுகச்,சிறுக இதயம் தன்னை
சீண்டித்தின்றவளே
வெட்டி வீழ்த்தும் பார்வை கத்தி
வீசிச்சென்றவளே
கட்டியணைத்து காதில் காதல்
பேசிச்சென்றவளே

அறிமுகமான முதல் நாள் இரவே
அழைந்து கொண்டவளே
மறைமுக மாகி வாழ்வுமுளுக்க
மனதைத் தின்றவளே
முத்துப்பற்கள் கண்ணுக்குள்ளே
மோதிச்சிதறுதடி
கொத்துப் பூக்கள் சூடும் கூந்தல்
நதியாய் தோணுதடி
அச்சில் செய்த அழகுப்பெண்ணே-உன்
அன்பு போதுமடி
எச்சில் கூட விருதாய் எண்ணி-என்
இதயம் ஓதுமடி

உன்னை செய்த மிச்சம் தானா
நிலவு பூங்கிளியே
இன்னும் எதற்கு அச்சம் வீணா
ஒன்றிட வாவெளியே

இனிமைப்பூவே கனவுத்தீவே-நீ என்
இளமைக்கு பரிசு
இனிமேல் என்றும் இணைந்து வாழ
இளகாதா மனசு?! 

புதன், 25 ஜூலை, 2012

அரசனின் தோற்றமும்,மறைவும்.



 இரண்டு அசிங்கங்களில் ஊறித்தெளிந்த
ஒரு துளி திரண்டு ஊதிப்பெருக்க
விசித்திரங்களற்ற சாதாரணமான
பிண்டமொன்றிலிருந்துதான்
உறுப்புருப்பெற்று வெளியேறி
பூமியின் மடியில் வந்து விழுந்தான்.

பின் வேகமாக வழர்ந்து
அதிகாரத்தை கைப்பிடிக்குள் நிறுத்தி
கோலோச்ச தொடங்கியவன்
இத்தனை மோசமான பின்விளைவுகளை
தோற்றுவிப்பானென்று யாரும் அறிந்திருக்கவில்லை.

ஒரு கனவுபோல் தோன்றி
கலைந்திருக்க வேண்டியது
இன்று ஊரே வெறுக்கும் விபரீதமாகிற்று

சமுத்திரங்களை பருக எத்தனிக்கிற பேராசை,
குடிகெடுத்து வாழும் முனைப்புடனான
தயாறெடுத்தல் நிறைந்த கர்வம்,
எதிலும் அடங்காத ஒரு தாகம் என
மனித பன்புகளை அலக்களித்துச்செல்லும் சுயம்
வெறுப்பை மேலோங்கசெய்தது மக்களிடை.

இத்தனை நாளும் இருந்த கெடு முடிய
பலத்தை அத்து மீறி பாவித்த குற்றத்திற்காக
அரசனுக்கான தகுதியை உருவிஎடுக்க
ஊர்கள் திரண்டன
அதிகரித்துப்போன நெருக்கடிகளிலிருந்து
தன் இருப்பை தக்கவைக்க எடுத்த பிரயத்தனங்கள்
தோல்வியுற தூக்கி எறியப்பட்டான்.
இனி எப்பொழுதும் மீண்டெழ முடியாத ஆளத்தில்.

சனி, 21 ஜூலை, 2012

சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.



 இலைகள் உதிர தனித்த மரங்களின்
பூங்கனவுகள் சிதைகிற கோலம்
இரவுக்கரும் பலகையில்
மயான நிசப்தத்தால்
காலம் எழுதிச்செல்லும்

பயம் துளிர்த்த அச்சத்தோடு
பூமியின் மார்பு வெடிக்க
சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்கள்
ஒளிப்பாசணங்களை அருந்தி 
மரணத்தை கூவியழைக்கிற இசை கவிந்து
மண்ணின் முகத்தில்
படியும் பிண கோலங்களாய்

ஈசல்கள்,ஈசல்களின் வாழ்வை
அறிந்து கொள்ளும் முனைப்புடன்
சந்தேகம் வினவி தோற்றுப்போகும்
நிமிஷங்களில் விடிந்து கிடக்கும் காலை
கூட்டித் தள்ளுகிற ஈர்க்குகளுக்கும்,
கொத்தித்தின்னுகிற அலகுகளுக்கும் 
ஒரு பொழுதுக்குள் நிகழ்ந்த
பெரும் துயரம் அலட்சியமாகவே இருக்கும்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

புன்னகையால் ஒரு போர் செய்.



 புன்னகை
இதயம் நிகழ்த்தும் தொழுகை
இதழ்கள் புகழ்த்தும் கவிதை.
முகவரி அறியா முகத்தையும்
புன்னகையால் புலம் விசாரிப்பதால்
மொழிப்பிரச்சினையில்லா நலன் விசாரிப்பு

புன்னகை ஒரு புனிதப்போர்
இரும்பை உருக்கும் ஈர்ப்புத்திரவம்
இரு இதழ் நடத்தும் ஈரச்சரசம்

புன்னகை மௌனத்திற்கெதிரான பிரகடனம்
புன்னகை புனிதமான புதிர் நடனம்
புன்னகை பொக்கிஷம்,புன்னகை அற்புதம்
புன்னகை பலம்,புன்னகை தவம்
புன்னகை சந்தோசத்தின் சரணாலயம்
புன்னகை சங்கீதத்தின் சாம்ராஜ்யம்.

முதலீடு அல்லாமல் செலவு செய்யும் மூலதனம்
முதல் போட்டால் கிடைக்கும் வேதனம்.
புன்னகை வணங்கும் கை
புன்னகை வாழ்த்தும் மெய்

புன்னகை மனிதனே
உனக்கு மட்டும் கிடைத்த உயிர்ப்பு
காணும் உயிர்களை கண்களால் நலம் கேள்
புன்னகையால் வணங்கு
புன்னகையால் வாழ்த்து ....,முடிந்தால்

புன்னகையால் ஒரு போர் செய்.


வெறிச்சோடிக்கிடந்த ஒரு கோடை.



 சூரியன் இறங்கிநடந்தது ஊரில்
பூச்சி,புழு தங்காததால்
வானம் மலட்டுப்பேர் கேட்டகாலமது
சாவு நிச்சயிக்கப்பட்டதால் கிணறுகளிலிருந்து
தவளைகள் தாவ எத்தனிக்கவில்லை
பூமியின் படுகை எங்கும் புலால் நெடி
ஆறுகள் சேறுவெடிக்க
வெறிச்சோடிக்கிடந்த ஒரு கோடை.

வேர்கள் கைவிட்டதால் புழுக்கம் மரங்களுக்கு
ஆடைகள் அவிழ்த்து வீசின காற்றில்
பறவைகள் கூடழிந்து எதிலியாய் ஏங்கின
வேறொரு தேசமேக விரும்பி
பசியில் அலைந்து
மண்ணின்தோலை உரித்தெடுத்தன மந்தைகள்.

சாகுபடிகள் எல்லாம் சாகும் படிகளாய்
இனி பஞ்சம் பாய்போட்டுறங்கும்
காய்த்த நிலம் கருகி வறண்ட ஒருகாலம்
இன்னும் நீடித்தால் பூமிக்கு மனிதர்கள்
இன்னொரு கிரகத்திலிருந்து இறக்குமதி செய்ய வரும்.
முக்கிய அறிவித்தல்;
சற்றுமுன் கிடைத்த தகவல்களின் படி
வானம் இப்ப மாசமாம்
அப்ப மழை பிறக்கும் ஊர் கூடிபெயர் வைக்க.





புண்ணியங்களின் பூக்காலம்.



கண்ணியமான பொழுதுகள் உழுதி
புண்ணியமான நிகழ்வுகள் எழுதி
அரங்கேற்ற முஸ்லிம்கள் ஆயத்தம்
அதுதான் ரமழான் பிறை தோற்றம்
வான் கரைஎல்லார் விழியும் மாலை
வளர்பிறை தேடி அலையும் நாளை
அடுக்களை,வீடு மனம் சுத்தமாகும்
அலுமாரி திறபட கை"குர்ஆன்"தேடும்
பள்ளிகள் ஒருபடி மேலே துலங்கும்
பரிசுத்த வேதம் பூமியில் இலங்கும்.

இளையவர்,முதியவர் இருவரும் சமமென
இறைவனின் நியதியை அனைவரும் வரமென
பசியினை துறந்து நிசிகளை மறந்து 
பாவத்தை எரிக்க விறகுகள் சேர்ப்பார்
ஆபத்திலிருந்து அனைவரும் காப்பார்
அடிக்கடி வாய்கள் வேதத்தை ஓதும்
அடிப்படை கொள்கையில் மாற்றங்களேகும்
கோடிகள் சேர்த்தவன் குடிசையில் வாழ்பவன்
மாடிகள் கட்டி மன்னனாய் ஆழ்பவன்
சரிசமம் என மனம் கூறும் -நோன்பு
முடிந்த பின் முருங்கையில் ஏறும்.

நிலையினை மாற்றிட முடியும்-என்ற 
நிய்யத்து மனதினில் வைப்போம்
நிறை மனதாய் நோன்பு நோற்போம்-மறுமை
நிரந்தர வாழ்வுக்காய் உழைப்போம்
மகத்துவ நோன்பிடம் கேட்ப்போம்-பெருமை
மா நபி வழியினில் சேர்ப்போம்
புண்ணிய ஆறு  புறப்பட்டு வருது
கண்ணியத்தோடு நீ அள்ளிப்பருகு.

புதன், 11 ஜூலை, 2012

நிழல் யாத்திரை.


இதுவரைக்கும் தெரியவில்லை இதன் தூரம்.
அடுத்த சந்திப்பில் முடியலாம் அல்லது,
இன்னும் கொஞ்சம் நீளலாம்...

ஒரு மயக்கம்,இன்னும் சொல்வதென்றால்;
இறுதி மூச்சை இறுகபிடித்திருக்கும் பெரும் சிரமம்.
வசிகர புன்னகைகள் வீசி வழைத்து போட்டவள்
கண்கள் உடைந்துவிள கால்மாட்டில்
என் உயிர்கள் மெழுகாய் உருகின அருகில்.
நிமிஷங்களை எண்ணிக்கொண்டிருக்கிறேனா?
நிறம் பிரிக்க இயலாத ஒரு நெருடல்.

இப்போதெல்லாம் வியாதிக்கு,வியாதி
மாத்திரைகளும் மலிந்துவிட்டன.
அளவோடு குடித்தால் உறக்கம் கொடுக்கும்
அதிகமானால் உயிரை எடுக்கும்.
அனுபவம்கள் என்னை ஒரு மரம் போலவே மதித்து
கூடுகட்டி தலையில் குடியிருக்கின்றன
தத்துவங்களை உதிர்க்கும் வித்தகனாய் நான்.

சுற்றத்தினரின் சுக விசாரிப்பு
இளசுகளின் ஏளனப்புன்னகைகள்
மனசை வருடிவிடும் மயிலிறகுகளாய்
அரைவாசிக்கு மேல் தேறியதோர் திருப்தி.

கண்விழித்தேன்
இரவின் கழுத்து துண்டிக்கப்படிருந்த ஒருகாலை.
அவசர மனிதர்களின் உலகில்
எதுவும் அறியாதவர்களாய்
அவரவர் அலுவல்களில்...,
மூழ்கியிருந்தார்கள் அலுவலகத்தில்.
எனது இருக்கையில் வேறொருவன்
பதவி உயர்வு கிடைத்த தொணிமாறாமல்.

நவீனத்தின் பிசாசு முகங்கள்!


சுருங்கிப்போனது வாழ்வு
ஒரு "பென்ரை"வுக்குள் 
வாசிப்பு,நேசிப்பு எல்லாம்
மடிகணணி மங்கையின் மடிக்குள்
விசை தட்ட விரிகிறது
புதினங்களுடன் பூமிப்பந்து 
சுழலும் உலகை ஒரு நொடியில்
சுற்றிவரும் சூட்சுமம்தனை 
அறிந்து கொண்டது வியப்பைத்தரும்
விஞ்ஞானம்

ஒரு புறம் ஐந்தடி மனிதனின் ஆடை
அடியாய் குறைய,
மறுபுறம் கை குத்தரிசி சோறும்
கருவாட்டு குழம்பும் இருக்க
"பாஸ்ட்புட்"மேல் பற்றுக்கொண்டு
விரும்பிக்கேட்கிறது
கொழுப்பு பிடித்த கொள்ளை மனசு

பெரிசும்,இளசும் "பேஸ்புக்"எனும்
மோகக்கட்டிலில் உரித்துபோட்ட அம்மணமாய்
கிளர்ச்சிதரும் காம வார்த்தை புணர்ச்சிகளோடு
செய்மதி தொழில்நுற்ப தூண்டிலில்
மதிகெட்ட மீனாய் மனிதம்

நாகரீகத்தை நவீனத்தின் பிசாசு முகங்கள்
கையாளும் விதம்
கவலையை தருகிறது
இத்தனைக்கும் இவர்களுக்கு
 'கவறச்சி 'என்கிற பேய் கட்டாயம் வேண்டும்
"சிக்னல்"என்கிற வேப்பிலையோடு