சனி, 16 ஜூன், 2012

நக்குத்தின்னிக் காகம்.

மாம்பழக்குருவியின் அழகில்
ஒரு கொளுத்த கொக்குபோல் அது வந்தது
இப்ப அவிஞ்சவெங்காயம்.
செப்பத்தப்பாரு.
அதுர மூஞ்சியும்,மொகறையும்
'கரண்ட்'அடிச்ச வெளவாலாய் கறுத்துபோச்சு.

அவன்ட,இவன்ட எச்சிக்கு
அலையவேண்டி இருக்கு.
ஒழுங்கா இருக்க தெரியாததால
ஒன்டித்திரியுது.

சொந்தக்காற காகம்,சாச்சாமொற
என்ன பலாய்க்குத்தான் இப்படி செஞ்சிதோ
காச கொடுத்து கஷ்ட்டத்த வாங்கின கதைதான்.

பாயாத பண்டிஎண்டன்
கேட்டுதா கெழட்டுகாகம்?
'ஹறாம்'குட்டியா இப்ப அலைஞ்சி திரியுது.
சட்டப்படிவேலையும் இல்ல நல்ல
சரியாக வேளைக்கும் இல்ல திண்ண.






குடையுடன் வந்த மழை.


முதன்,முதலாய் கிழக்கின்
மாரிமூலைக்குள்ளிருந்துதான் எட்டிப்பார்த்தது
பின்-ஊருக்குள் வந்து
வாசலுக்கு முன்னாலிருக்கும் ஒழுங்கையால் போனது.

கருப்பும்,வெழுப்பும் கலந்த புதுநிறம்
பார்ப்பதற்கு ஒருசாதி மப்பும்,மந்தாரமுமாய் இருந்தது
எல்லோரும் சொல்வதுபோல்
பருவகாலத்து மழையோன்றுதான் அது.

மின்னலை கண்களில் செருகி வைத்திருந்தது
எப்போது வேண்டுமானாலும்
களற்றி வீசுவதற்கு தயாராக.

'இதப்போல எத்தன மழைய பாத்திருக்கம்'
என்றவன் மீது இடியை
வெற்றிலைபாக்கு போல் வாயில் மென்று துப்பியபடி
 கையில் குடையுடன் காலாற நடந்த கன்னிமழையது.

அதுக்கென்ன பெய்தும்,பேயாமலும் போனது
 ஒழுகிக்கரைந்து நனைந்து கொடுகியது நான்தானே.