செவ்வாய், 25 டிசம்பர், 2012

சுனாமி நினைவுகள்.



           2004-12-26
அது ஒரு ஞாயிறுகாலை
சனியாய் விடிந்தது
பிணியாய் முடிந்தது 
இப்போதும் எண்ணிப்பார்க்கையில்
நினைவில் சுனாமியாய்
அத்து மீறி அலையென எழுந்து
உயிரை உலுக்கி விடுகிறது 

மகிழ்ந்தபடி அலை கையசைத்து
மடிநிறைய மீன்கள் தந்த கடல்
ஊர் நிறைய மரணங்கள் தந்த
ஒரு மாயப்போழுது

ஆசியாவின் கரைகள்  எங்கும்
கண்ணீரின் ஓடங்கள் கரை ஒதுங்கி
தரைதட்டி தவித்த தருணங்கள் அவை

கடலின் தீராபசிக்கு
சில நாடுகளின் பல..  ஊர்கள்
ஊணாகி உரு அழிந்து
வீணாகிப்போன விபரீதம்
நிகழ்ந்த நிமிடங்கள் அவை
நினைக்கும்போது
நெஞ்சில் நீர்முட்ட
உடைந்து விழிகள் 
உருகி வடிகின்றன

அன்னைபோல் எண்ணி
அனைவராலும்
உயிருக்கு மேலே
உயர்த்திப்பிடித்த கடல்
சீற்றத்தொடெழுந்து
சிறைபிடித்து உயிர்களினை
குஞ்சு,குமரை
குடிமறவா பாலகரை
பிஞ்சுத் தாய் மாரை
பிரித்து உறவுகளை
சிலுவையில் அறைந்த
மாயப்பொழுது
மனசைவிட்டு மறையாத
காயப்பொழுது...........

அது சரி ..ஏ கடலே
தூத்து வாரி உயிர்களை
அள்ளிக்கொண்டு போனாயே
திருப்பித்தரும் தீர்மானத்தோடா?!