திங்கள், 21 ஏப்ரல், 2014

நான் நிறமுதிரும் பெருங்காடு.



தனிமரம் தோப்பாகாது என்கிரார்கள்
தோப்பாக இருக்கும்
தனித்தனி மனிதர்கள்
பாவப்பட தோன்றுகிறது இவர்களின்
பச்சாதாபங்களை பார்க்கும் போது

எல்லைகள் நிறுவ முடியா
என் இயலாமையின் தேகமெங்கும்
கழுகென கொத்திப் பிரிக்கவும்
கரு நாகாய் தீண்டி ரசிக்கவும்
இவர்களுக்கு இயலுமாகிறது


தசையும்,எலும்புகளும்,நிறமும்
பிடிப்பதில் இவர்கள் காட்டும் பிடிமானம்
மனசு பற்றிய இடங்களில்....,
பிசகும் மறுப்புகளை தவிர
கருணை என்பது-ஒரு
கடுகளவேனும்
இதயத்தில் இருப்பதில்லை உன்னிடமும்தான்

முதிர்வை காலம் நரையென
மொழிபிரிக்க
விரிசல் விழுந்த கரிசல் காடாய்
இன்றைய தேவையின் தேடல்
சருகுகள் உதிர பழுத்து விழுகின்றன


வாசலை கடந்து செல்கின்ற
அழைப்பு ஒலிகேட்டு
ஒவ்வொரு கணமும் திரும்பி மீள்கிறேன்
கண்களை அலையவிட்ட தெருவிலிருந்து....

கடந்து போயிருக்கிறாய் நீ
மலைகளை பற்றிக்கொண்ட மகிழ்வுடன்
முகமூடி தரித்த
மூன்றாவது மனிதனாய்

நானோ உன் முகம் காணா
கவலைகள் கிளைவிட
வீரியமற்ற விதைகளுக்கிடையில்
நிறமுதிரும் பெருங்காடாய் நிற்கிறேன்!