செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தனிமையின் கொலைவெறி



கண்ணுக்குள் பூதங்களை
இறக்கி விடுகிறது தனிமை
தனிமை மிக கடுமையான பயங்காட்டி
திரும்பும் திசைகள் எங்கும் திகில்
கூட்டம்,கூட்டமாய் கொலை முகங்கள்
விமோசனமுள்ள ஒரு கண்டத்தை
எட்டி விடுவதற்கான முயற்சி அடங்கிய
வழமையான என் பிரயத்தனங்களில்
உயிரின் பாதியை திறந்து
ஊற்றி எடுத்துக் கொண்டு
என் இரவு விடிகின்றது


பொழுதின் காலைத் தேநீர்
என் வாழ்வென்னும் அவஸ்த்தை
அது ஊதிப் பெருக்க
என்னை ஊற்றி குடிக்கிறது
இன்றைய ஒவ்வொரு நாளும்

குவளையில் எஞ்சியிருக்கும் துளியாய்
மீதமிருக்கும் காற்றை
தக்க வைப்பதற்கு
பெரும் சிரத்தை
எடுக்க வேண்டியிருக்கிறது

இளமையின்
வண்ணத்து பூச்சிகள் உலவிய
வனத்திற்கு திரும்பி
அழகிய பூங்கனவுகளை
என்னில் பதியமிட்டு
நான் வளர்ந்த வாசல் தேடி
முதிர்ந்த நட்சத்திரங்களால்
மொழி பிரிக்கப் பட்டு
நிலா கதைகளால்
நிரம்பியிருந்த முற்றம் காண

மனசை போய் வாவென்று
அனுப்பி வைத்திருக்கிறேன்
அது இந்நேரம்
எந்த இடத்தில் அலைகிறதோ
தனிமையின்
கொலை வெறிக்குள் தள்ளிவிட்டு
என்னை விட்டுச்சென்ற

சந்தோஷத்தை தேடி!