திங்கள், 31 மார்ச், 2014

மலையேறும் கொழுந்துக் கூடைகள்.



வெற்றிடத்தின் கனதியால்
பின்னப் பட்டிருக்கிறது
மிக நேர்த்தியாய் வாழ்வின் கூடை

முதுகின் முகடுகளில் இருள் பிரிய
இருப்பை தக்க வைப்பதற்கான
பிரயத்தனங்களால் புலர் பொழுதுகள்
இரத்தம் உறுஞ்சி அட்டைகள் கொழுக்க
இரக்கம் குறைந்து சேட்டைகள் வலுக்க
கங்காணியின் கண்காணிப்பில்
இயலாமையின் தினப் பதிவு

துளிர் கொழுந்துகளின் இடையில்
நிறுபடுகின்றது தினக்கூலி
வெட்டுக் குத்துகளுக்கு நடுவில்
வேதனைக்குரிய வேதனம்
சாதத்திற்கு போதுமாகி
சமையல் உலையென கொதிக்க
பொங்கியெழும் பசிவயிறு
பூசி மெழுகப் படுகின்றன
கஞ்சிக் கலவைகளால்
கால் வயிறு,அரை வயிறாய்

மனம் விரும்பும் மாற்றுத் துணிக்கு
பண்டிகை வரும் வரைக்கும்
ஆடை விரதம் இருக்க வேண்டிய
அநியாய விதி
வீடெனும் கனவுவேறு
ஒரு செங்கல்லுக்கேனும் பெறுமதியற்று
உடைந்து கலைகின்றன
பனி படர்ந்த பச்சிலை காடுகளில்...

இப்படியே முதிர்ந்த ஜீவிதம்
வாழையடி வாழையாய்
கிளையென துளிர்க்க
ஒழுகி கரையும் லயங்களில்
தள்ளாடுகின்றன பரம்பரை
மோட்சம் அற்ற மொக்கைகளாக
பல கோடி ஆயிரத்தி ஓராவது
பகலையும் தாண்டி!