வியாழன், 27 நவம்பர், 2014

அப்பாவின் பேய் கதைகள்.



சிறுபராயம் முதல் எனக்கு
கதைகளில் கொள்ளை பிரியம் என்பதால்
எப்பவும் அப்பா ஏதாவதொரு கதையினை
சொல்லிக்கொண்டிருப்பார்

முதலில் பயங்காட்டுவதாய் வரும்
“பேய்”கதையில் தொடங்கி
அரச கதை,பின்-நரிக்கதை
சிங்கம்,புலிக்கதை,”கிரீஸ்”மனிதன் கதை
மொழிகடந்த தெருக்கதைகள் என
அது ஓவ்வொன்றும்
நீண்ட கதைகளால் ஆன கதைகள்
அவற்றை கேட்க
இனிமையாகவும்,சுவரஷ்யமாகவும்,
பயங்கரமானதாகவும் இருந்தன
கற்பனையில் கதைகளை
கட்டிச் சமைத்து கதைப்பது கேட்க
அப்போது பிடித்தமானதாய் இருந்தது
ஆனால்;பின்வந்த காலங்களில்
அப்பாவின் கதைகள்
சப்பையாகவும்,குப்பையாகவும்
சகிக்க முடியாதபடி இருந்தன கேட்க
பொய்க்கு கூட பொருந்தவுமில்லை
எனக்கு புத்தி பிடிபட்ட விடையம்
அப்பாவுக்கு பிடிபடாமல் இருந்திருக்கலாம்


அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார்
என்பதற்காக
எல்லாக் கதைகளையும்
கேட்டுக் கொண்டிருக்க முடியாது இல்லையா?
இன்றும் அப்படித்தான்
அப்பா கதை சொல்ல தொடங்கினார்
குறுக்கிட்ட நான்
அப்பாவிடம் சொன்னேன்


“இது எனது முறை”
நான் ஒரு கதை சொல்கிறேன் என்று
அப்பா காதுகளை கூர்மையாக்கினார்
என் கதை கேட்க
நான் சொன்னேன்
அப்பாவுக்குரிய மரியாதையுடன்

நீங்கள் ஓய்வெடுங்கள் என்று.

திங்கள், 10 நவம்பர், 2014

இரையாய் போகும் விதியானான் கதையொன்று.




கறவை பசுக்கள்
அடி மாட்டு விலையாகும் மண்ணில்
நாங்கள் எலும்பும் தோலுமாகி
விலை போகா மனித எருதுகளாய் இருந்தோம்
என அவன் சொன்னபோது
தொடக்கத்தில் நம்ப முடியாமல்தான் இருந்தது



குறிஞ்சி பூக்களில் குருதி உறுஞ்சி
நகர அட்டைகள் நகரக்காண
அது பொய்யில்லை என்று புலனாகியது


துளிர் மேய்ந்து பசி துறக்கும் தொடர் விதி
வெந்நீர் கோப்பைக்குள்
சாயம் போகும் வரை மிக நீளமானது

கூடை போதிகளாய் இருந்தோம்
என்ன பயன்
இடை தராசுகளில் கனதியற்ற இலவம் பஞ்சாய்
எங்கள் பக்க நாக்கு எழவே இல்லை
என்றவன் சொன்னபோதும்
நியாயமிருந்தது அவன் பால்



கை கட்டி நின்ற காலம் தொட்டு
அதே அலை வரிசையில்
வேற்று விலங்குகள் ஊடறுத்த அரவங்களில்
வெற்றிலையின் அடி கிள்ளி எறியும் காம்பாய்
வீசிய இடத்திலேயே வீழ்ந்து கிடந்தோம்
கழிவு கந்துகளாயும் என்றான்



குவ’லயங்களில்’
துயில் பற்றமறுத்த இரவின்
குளிரடர்ந்த அதிகாலை
வண்ணாத்திகள் கூட நான் வனம் ஏகிய நொடி
ஈரம் கவிய சரிந்து கவிழ்ந்து விழ்ந்திருந்தன
என் உறவுகளின் கனவு மாடங்கள் அவர்களுடன்.



மண்பற்று மீளா துயிலாய்
மறுபதிப்பு செய்யப்பட
மண்டியிட்டு கிடந்த மடமே மயானமாக
மலர்ந்து முகிழ்த்த மண்தரை
புல்வெளி புதைகுழியாய் போக
மலைமுகடு,பச்சைக்காடு
எங்கும் நிலை குலைந்து
பற்றி எரிகிறது கொழுந்து விட
இன்னும் பிளக்கும் மலைகள்
ஒப்பாரிகளால் வெடிப்பு விள


வண்ணாத்திகளின் உலகம் இருள
பேயலையும் காடு பயமுணர்த்தி வளர்கிறது
சூழ கடல் பெருக்கெடுக்க



எண் திசையும் தக்கை மிதக்க அமிழும் தூண்டில்
இரையாயிருந்தோம்
முதலைகள் மிஞ்சிய ஆழியில் என்றான்
பலியிட நிறுத்தப் பட்ட கடா ஒன்றின்
பாவங்களுடன்!

குறிப்பு - அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும் !

ரோஷான் ஏ.ஜிப்ரி.