வியாழன், 17 மார்ச், 2016

 

மலைப் பூவில் அலையும்
மேக வண்ணாத்திகளின் சிறகில்
வளைகிறது நிற வாளின் கூர்”மை”

பின் அந்தி
மேல் திசையில்
மஞ்சள் சோறாக்க
கழுவி துடைத்த வான இலை
கோடை விருந்துக்கு தயாராய்

நட்சத்திரங்களின் கண் பட்டு
ஒளிரும் பிரயாசத்தில்
மின்னி திளைக்கிறது
உப்புநீர் சாலையில் பால்நிலா


சாளரத்தை சாத்தி தாளிட்டு
திரை சீலையை
இழுத்து விட்ட
இந்து சமுத்திர கடல் வீடருகில்
கோடைக்குள் தாகிக்கும் குடியிருப்புகள்


நறுமுகைகள்
பனியில் இதழ் திறக்க
கனவில் பூவுதிர்க்கும் சொற்கவனம்
வேர்படர வாடி தேய்கிறது
அந்திம மடிப்புகளில்

மழையற்ற வெம்மையில்
சமுக பதக்கடைகளின் விளைச்சல்
அமோகமாய் ஆக
சாக்குகளை நிறைக்கின்றன
வெறும் கொந்துகள்

இடைவெளியின்
இணைப்புச் சங்கிலிகள்
கண்ணறுந்து துண்டிக்க
நங்கூரம் விலக
பிடி தளரும் படகாய் அவ்வோடம்

கால காற்றின் பால்
இழுபடுகிறது இருப்பு
பாலையை சமீபித்தபடி


யாரோ விட்டுச் சென்ற
தனிமையின் அருகில் யாரோ

நீர் வற்றிய குளக்கரையில்
அலைந்திருக்கின்றன
பசித்தலைந்த பட்சியின் அலகுகள்

பெயரை எழுதி வைக்காமல் போன
எவரோ ஒருவரின் வாழ்வின் தடம்
ஈரம் காயாமல் இருக்கிறது
மழை விட்டுச் சென்ற
கோடையையும் தாண்டி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.