வெள்ளி, 27 ஜூலை, 2012

கனவு தேசத்து அழகிக்கு.


நிஷ்ட்டை கலைத்து நெஞ்சு நுழைந்து
நேர் எதிர் வந்தவளே
கொஞ்சு தமிழில் குளைத்துவார்த்தை
கொள்ளை கொண்டவளே
எண்ண இனிக்கும் இன்ப நிகழ்வை
எனக்குள் தந்தவளே
வண்ணக்கனவாய் வாசல் வந்து
வருடிச்சென்றவளே

சிரித்து மயக்கும் பூவாய் வந்து
சிநேகம் கொண்டவளே
சிறுகச்,சிறுக இதயம் தன்னை
சீண்டித்தின்றவளே
வெட்டி வீழ்த்தும் பார்வை கத்தி
வீசிச்சென்றவளே
கட்டியணைத்து காதில் காதல்
பேசிச்சென்றவளே

அறிமுகமான முதல் நாள் இரவே
அழைந்து கொண்டவளே
மறைமுக மாகி வாழ்வுமுளுக்க
மனதைத் தின்றவளே
முத்துப்பற்கள் கண்ணுக்குள்ளே
மோதிச்சிதறுதடி
கொத்துப் பூக்கள் சூடும் கூந்தல்
நதியாய் தோணுதடி
அச்சில் செய்த அழகுப்பெண்ணே-உன்
அன்பு போதுமடி
எச்சில் கூட விருதாய் எண்ணி-என்
இதயம் ஓதுமடி

உன்னை செய்த மிச்சம் தானா
நிலவு பூங்கிளியே
இன்னும் எதற்கு அச்சம் வீணா
ஒன்றிட வாவெளியே

இனிமைப்பூவே கனவுத்தீவே-நீ என்
இளமைக்கு பரிசு
இனிமேல் என்றும் இணைந்து வாழ
இளகாதா மனசு?! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.