புதன், 15 ஆகஸ்ட், 2012

மனம் நனைத்த மழை.



உலர்ந்திருந்த ஒரு பொழுது
முகில்கள் வானில் முளைக்க
மயில்கள் ஆடின களைக்க
காற்று கூடி கலைக்க-நீர்
பூக்கள் வானம் தெளிக்க
மழை,மழை,மழை
பூமிக்கு வான் நீட்டும்
புதினப் பூச்செண்டு
இயற்கை எழுதும்
ஈரக் கவிதை
குளிரூட்டப்பட்ட கூதல் சந்தம்
தலை துவட்டியபடி
மனம் ரசிக்கும் ரம்யம்


மரங்களுக்கு வானம் வழங்கும்
தண்ணீர் தர்மம்
இயற்கைக்கு இயற்கையின் ஈகை
மழை
அழகான ஆனந்தம்
இதமான இன்பம்
துளி,துளியாய் சிலிர்க்க வைக்கும்
தூவான சில்மிஷம்
புத்துணர்ச்சி தந்து மனம் நிறைக்கும்
புனித நீர் புதையல்

மரங்கள் சிரிக்க
இலைகள் முளைக்க 
கிளைகள் விரிக்க
மொட்டுகள் முகிழ்க்க
பூக்களாய் மகிழக்க 
இயற்கை செழிக்க
மழை,மழை,மழை

மா  களனிகள் நிறைக்க
மா மருதம் நிலைக்க
மகா பஞ்சம் பறக்க  வேண்டும்
மழை,மழை,மழை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.