ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருக்கும் காலம்.




ஒன்றை தொலைப்பதும்
வேறொன்றை தேடிஎடுப்பதுமான
நிலைப்பாடோடு தன் பயணத்தை
தொடக்கிவைத்திருக்கின்றன
இன்றைய பொழுதுகள்

விமோசனத்துக்கான காத்திருப்போடு
நம்பிக்கையின் முதிர் நிலையை
கடந்து கரைஏறியபடி வாழும் ஜீவிதம்

தவறுகளை ஒழித்து வைப்பதற்காக
இருள்களை நேசிக்கின்ற
மனிதர்களோடு மல்லுக்கு
நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் என..
நிறம் வெளிறி,நிஜம் தொலைந்து
பிடிக்காத ஒன்றையே
தெரிவு செய்ய வேண்டிய
ஒரு தேய்வு நிலை

சர்பத்தையோத்த
விஷங்களை பீச்சும்
அதிகாரங்களுக்கிடையில்
நெளிய வேண்டியிருக்கின்ற நெருக்குதல்
இன்னும் சொல்வதென்றால்;
காயங்களை மருந்தாக்கிக்கொண்டு
மாயங்களுக்கு
மகுடி ஊதவேண்டியிருக்கின்றன

விபத்தின் வலியிலிருந்து
விடுபடுவதற்குள்
சந்தோசத்தின் சஞ்சரிப்பு
நிகழ்வில் இறந்தவன் மனைவி
நிறைமாதம்
கணவன் தொலைந்த
கவலை மறப்பதற்குள்
பேறு கிடைத்த பெருமிதத்தில்

யாரையும் தெரியாது என்று
விலகி விடத்தான் விருப்பம்
இருந்தாலும்;இன்று
தெரிவு செய்யப்பட்டதன் முறைப்படி ஒருவரை
தெருவுக்கு அழைத்துவந்து
நிறுத்தி விடுகிறது காலம்
ஒரு இடைவெளியை நிரப்பிவிட!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.