சனி, 16 ஜூன், 2012

குடையுடன் வந்த மழை.


முதன்,முதலாய் கிழக்கின்
மாரிமூலைக்குள்ளிருந்துதான் எட்டிப்பார்த்தது
பின்-ஊருக்குள் வந்து
வாசலுக்கு முன்னாலிருக்கும் ஒழுங்கையால் போனது.

கருப்பும்,வெழுப்பும் கலந்த புதுநிறம்
பார்ப்பதற்கு ஒருசாதி மப்பும்,மந்தாரமுமாய் இருந்தது
எல்லோரும் சொல்வதுபோல்
பருவகாலத்து மழையோன்றுதான் அது.

மின்னலை கண்களில் செருகி வைத்திருந்தது
எப்போது வேண்டுமானாலும்
களற்றி வீசுவதற்கு தயாராக.

'இதப்போல எத்தன மழைய பாத்திருக்கம்'
என்றவன் மீது இடியை
வெற்றிலைபாக்கு போல் வாயில் மென்று துப்பியபடி
 கையில் குடையுடன் காலாற நடந்த கன்னிமழையது.

அதுக்கென்ன பெய்தும்,பேயாமலும் போனது
 ஒழுகிக்கரைந்து நனைந்து கொடுகியது நான்தானே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.