வெள்ளி, 20 ஜூலை, 2012

புன்னகையால் ஒரு போர் செய்.



 புன்னகை
இதயம் நிகழ்த்தும் தொழுகை
இதழ்கள் புகழ்த்தும் கவிதை.
முகவரி அறியா முகத்தையும்
புன்னகையால் புலம் விசாரிப்பதால்
மொழிப்பிரச்சினையில்லா நலன் விசாரிப்பு

புன்னகை ஒரு புனிதப்போர்
இரும்பை உருக்கும் ஈர்ப்புத்திரவம்
இரு இதழ் நடத்தும் ஈரச்சரசம்

புன்னகை மௌனத்திற்கெதிரான பிரகடனம்
புன்னகை புனிதமான புதிர் நடனம்
புன்னகை பொக்கிஷம்,புன்னகை அற்புதம்
புன்னகை பலம்,புன்னகை தவம்
புன்னகை சந்தோசத்தின் சரணாலயம்
புன்னகை சங்கீதத்தின் சாம்ராஜ்யம்.

முதலீடு அல்லாமல் செலவு செய்யும் மூலதனம்
முதல் போட்டால் கிடைக்கும் வேதனம்.
புன்னகை வணங்கும் கை
புன்னகை வாழ்த்தும் மெய்

புன்னகை மனிதனே
உனக்கு மட்டும் கிடைத்த உயிர்ப்பு
காணும் உயிர்களை கண்களால் நலம் கேள்
புன்னகையால் வணங்கு
புன்னகையால் வாழ்த்து ....,முடிந்தால்

புன்னகையால் ஒரு போர் செய்.


3 கருத்துகள்:

  1. Jesslya Jessly · Peradeniya University
    ஜிப்ரி,

    புன்னகையைப்பற்றி புன்னகை மாறாமலே எழுதியிருப்பீர்கள் போலிருக்கின்றது. எப்பொழுதும் உற்சாகமாக இருக்கும் கலகலப்பான மனிதர்களைக் கண்டால் அவர்களது மகிழ்ச்சி நம்மிலும் தொற்றிக்கொள்ளுமல்லவா...அதுபோல..உங்கள் புன்னகைக்கவிதையை படித்த மாத்திரத்திலேயே மனமெங்கும் புன்னகைப்பூக்கள் மத்தாப்பாய் சிதறுகின்றன.

    உண்மையிலேயே நன்றாக இருக்கின்றது.

    அழகாகப் புன்னகைக்கும் சிறுமியை பொருத்தமான படத்தேர்வும் செய்து வெளியிட்டிருக்கும் கிண்ணியா நெற்றுக்கும் பாராட்டுக்கள். ஜிப்ரி, ஒரு சிறிய வேண்டுகோள்: கடைசி வரியிலே உங்கள் அனுமதியுடன் ஒரு சொல்லை இணைத்துப் படித்துப் பார்க்கின்றேன் எப்படியிருக்கின்றது பாருங்கள்:

    '.....முடிந்தால் புன்னகையால் ஒரு போர்கூடச் செய்'.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மில் நிறையவே பஞ்சம் பிடித்த கஞ்சப்பிசனாரிகள்
      உலவுகிறார்கள் புன்னகை என்றால் கிலோ என்ன விலைஎன்று
      கேற்கிற கூட்டம் அவர்களுக்கு கட்டாயப்படுத்தி இருக்கிறேன்
      புன்னகையால் ஒரு போர் செய் என்று.மேலும்; உங்கள் வரியும்
      அழகு.கருத்துக்கு நன்றி

      நீக்கு
  2. Mohamed Lafir Mohamed Jalaldeen · Works at Dar Al Handasah
    புன்னகையை இரசித்து, அதன் தேவையை உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.

    நபிகளாரின்; 'உன் சகோதரனைப் பார்த்து புன்னகைப்பதும் தர்மமாகும்' என்ற வாக்கு இங்கு ஞாபகப்படுத்த வேண்டிய ஒன்றாகும்.

    புன்னகை அது உன் உதட்டின் 'நகை'.
    அகத்தின் வனப்பை உதட்டில் ஒட்டிவைக்கும் ஓவியம்!

    பதிலளிநீக்கு

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.