வெள்ளி, 27 ஜூலை, 2012

எவனோ ஒருவனுக்கு ஏதோ ஒரு யோசனை.



விதையொன்றை பார்த்தாகிலும்
உன்னை விசாலமாக்கு
மழைஈரம் கண்டதும் மண்ணை முட்டி
முளையால் தன் முகம் காட்டுகிறதே விதை
அதுதான் அதன் ஆத்மார்த்த பலம்
உனக்குள்ளும் ஓராயிரம் பலம்
ஒளிந்திருக்கிறது
அமாவாசையிலிருந்து விடுபட்டு
வைகறைக்கு வா

நேரம் உரம் வாழ்க்கை பயிருக்கு வளம்
ஒவ்வொரு வினாடியையும்
ஔடதமாய் அளவிடு
கையாலாகாத்தனத்தை கை விடு
விதிக்கப்பட்ட வாழ்வின் விபரம் படி
மகானாகவோ,மாகாத்மாவாகவோ வேண்டாம்
முதலில் மனிதனாக மாறு-பின் 
புனிதனாகத்தேறு

சிந்திக்கத் தெரிந்திருக்கிறது அல்லவா
அது உனக்கு கிடைத்த சிறப்பு விருது
கவனமாக கையாளு
முடிந்ததைஎல்லாம் படி
முடியாததையும் செய்து பார்க்க முனை
பின்னென்ன
எதையும் செய்து முடிக்க இயலும் என்ற
தெளிவு உன்னை
வெளியிளிருப்போர்க்கு விபரிக்கும்

சலவை செய்யும் பொது கறையும் கரையும்
நீ உன் புத்தியை புடம் போடும் பொது
அது உன் சக்தியின் பலத்தை
சத்தியம் செய்யும்
கடிகாரத்தை கொஞ்சம் கவனி
விநாடி முள்ளால் தானே மணியையும்,நாளையும்
நகர்த்தி விடுகிறது
காலம் சும்மா இருந்தால் சுற்றுமா பூமி?

எறும்பு,தேனீ இரண்டில் ஒன்றின்
கொள்கையாவது உனக்குள் கொண்டுவா
வாழ்க்கை பூ வனமல்ல,போர்க்களம்
வெற்றியை தேடி விரை

மகத்துவம் மிக்க மனிதா
எப்போதும் எடுப்பார் கைப்பிள்ளையாய் இராதே
அது சோம்பேறியாக்கும் அன்றில்
கோழையாக்கும்
நீ ஆளப்பிறந்தவன்,புவியை வென்று
வாழப்பிறந்தவன்
சுமைகளை சுகமாக நேசி
தோல்விகளை வெற்றி என்று சுவாசி

ஒரு தோல்வியின் முடிவுதான் உனக்கு
வெற்றியின் விலாசம் தருகிறது
விழத்தெரியாதவனால் எழத்தெரியுமா என்ன
யோசி நல்ல மனிதர்களை வாசி
 காற்றில் தூய்மையிருந்தால் நோய் நெருங்காது
சுவாசத்தில் தூசியிருந்தால் சுகம் திரும்பாது
ஆரோக்கியம் அற்றவனுக்கு
ஆயுள் குறுக்கப்படுகிறது
சுகதேசியின் வாழ்க்கை நீட்டப்படுகிறது
சிக்கல்கள் பற்றி சதா
சிந்தித்துக்கொண்டிருப்பவனே
முடிச்சுகளை அவிழ்க்க முனை

அடுத்தவனுக்கு குழி பறிப்பதை விட்டு,விட்டு
உனது பாதையை சீர்செய்ய சிரத்தைஎடு
ஒருவனாவது உன்னால் உயர  ஒரு படியாகு
இல்லையெனில்;
ஒழுக கற்ருயர்ந்து நீ உருப்படியாகு.

3 கருத்துகள்:

  1. Jesslya Jessly · Peradeniya University
    Jiffry,

    மிக நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்!

    இன்றைய தலைமுறையினருக்குத் தேவையான நேர்மறைச் சிந்தனைகளால் கவிதை நிரம்பியிருக்கின்றது; நல்ல விடயம். தவிர, அன்றாட வாழ்க்கையிலே இயல்பாக கடைப்பிடிக்கக்கூடிய ஆலோசனைகளும் அடங்கியிருப்பதுதான் கூடுதல் தகுதி. தமிழ் வார்த்தைகள் உங்களுக்கு வசப்பட்டிருக்கின்றன ஜிப்ரி.

    அதேவேளை, வார்த்தைச் சிலம்பமாடிய சில இடங்களிலே அறிவியல் உண்மைகளை மறந்து விட்டீர்கள் போலிருக்கின்றது. (காலம் சும்மா இருந்தால் சுற்றுமா பூமி? என்று கேட்டிருப்பது ஒரு உதாரணம். But, பூமி சுற்றுவதால்தான் காலமே நகர்கின்றது).

    ஆனால் கவிதைமொழிக்கு இவையெல்லாம் குறையல்ல. கண்ணதாசனே பாவமன்னிப்பு படத்தில் அந்தநாள் முதல் எனும் பாடலிலே '...எதுவும் மாறவில்லை... வான் நதியும் நீரும் கடல் காற்றும்... கொடியும் சோலையும் எதுவும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்' (வரிகள் மிகச்சரியாக நினைவில்லை) எழுதியிருப்பார். ஆனால் உண்மையில் மாறாதவை என்று எதுவுமேயில்லை என்பதுதான் அறிவியலுண்மை. இன்றைய பாலர் வகுப்பு மாணவனும்கூட இதைக் கேள்வி கேட்பான் என்பதால் நாம் மேலும் கவனமாக இருக்க வேண்டும்.

    கவிதையைப் படிக்கும்போது தமிழகத்தின் பிரபல கவிஞர் ஒருவரின் பாணி லேசாய் ஞாபகம் வருவதைப் புறக்கணித்து விட்டால், சந்தேகமேயில்லை மிக அருமையான கவிதைதான் ஜிப்ரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெஸ்லியா ஜெஸ்லியை வாசல் திறந்து வாழ்த்துக்கள் கூறி.
      வாஞ்சையோடு கைகுலுக்கி வரவேற்கிறேன்.உங்களை முதலில்.
      உளமாற பாரபட்சமின்றி பாராட்டியாகவேண்டும்.
      எதிலும் விசாலமான பார்வையுடன் ஊடுருவி ஆளத்தின் கடைசி.
      படுகை வரைக்கும் போய் திரும்புகிற ஆளுமை சிலிர்க்கவைக்கின்றது.

      எழுதி விட்டு மீழ் மதிப்பீடு செய்யாததன் குறையிலொன்றுதான் நீங்கள்.
      சுட்டியிருக்கும் வரி"சுற்றாமல் பூமி சும்மா இருந்தால்.
      காலத்தை உன்னால் கணிக்கமுடியுமா?" என்றாவது எழுதியிருக்கலாம்.

      அறிவியல் ரீதியான தவறு.உண்மையும் கூட,
      எதிலும் நீங்கள் எடுக்கும் சிரத்தை வலுவானது.உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

      வேறொருவரின் சாயலென்று என்னை சொல்வதை மறுக்கிறேன்.ஏனெனில்;.
      இது எனது முறை.

      நீக்கு
    2. Jesslya Jessly · Peradeniya University
      Jiffry,

      விமர்சனங்களை பெருமனதுடன் ஏற்றுக்கொள்ளும் உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில், பல அனுபவம் வாய்ந்த படைப்பாளிகளுக்குக் கூட அந்தப் பக்குவம் இல்லாதிருக்கின்றதை கிண்ணியா நெற்றின் நூல் அறிமுகம் பகுதியிலேயே பார்த்திருப்பீர்கள். அதனாலேயே, மிக விரைவில் 'விமர்சனங்களுக்கு ஒரு விமர்சனம்' என்ற தலைப்பிலே ஒரு பத்தி எழுத உத்தேசித்திருக்கின்றேன்.

      அது இருக்கட்டும். எதையுமே படைக்கும் படைப்பாளிக்கு அதன் பிரசுரத்தைப் பார்த்துவிடத் துடிக்கும் பெற்றதாயின்/தந்தையின் மனது இருப்பதுதான் இயல்பு. அதனால்தான் நாம் பொதுவாக ஓரிருமுறை படித்துப் பார்த்ததும் சுயதிருப்தி கொண்டு அனுப்பி விடுகின்றோம்.

      ஆனால், எதையும் ஆக்கிய பின்னால் சிறிது 'ஊறப்போடுவது' அவசியம் என்று எனது தந்தை கூறுவார். சிறிது இடைவெளி விட்டபின்னர் திருத்திச் செழுமைப்படுத்தினால் பல தவறுகள் தவிர்க்கப்பட வாய்ப்புண்டு அல்லவா..? அந்த அனுபவம் எனக்கு நிறையவே கைகொடுத்திருக்கின்றது.

      மற்றது, நாம் யாரை நிறைய வாசிக்கின்றோமோ யாரை நமது ஆதர்சமாக நினைக்கின்றோமோ அவர்களின் எழுத்துகளின் சாயல் நம்மையறியாமலே நமது எழுத்துகளிலும் படிந்து விடுவது வழமையே.

      எனது எழுத்துகளிலும் கூட பிரபல எழுத்தாளர்களின் சாயல் இருப்பதாக சில நண்பர்கள் கூறுவதுண்டு. ஆனால் எனக்கு அது புரிவது குறைவே. அதுபோலத்தான் உங்களுடையதும். இது கூட ஒரு குறையல்ல. நல்ல எழுத்துக்களையும் சிறந்த உத்திகளையும் கையாளத் தெரிவதற்கே நிறைய மூளையும் ஆளுமையும் வேண்டும் அல்லவா..?

      காலப்போக்கிலே அவற்றிலிருந்து விடுபட்டு நமக்கென தனிப்பாணி வந்து விடும் என்பதால் அது பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை ஜிப்ரி!

      நீக்கு

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.