காதலில் பிரிவு கடினமானது
ஊறி உருகி உதிர்கிற படி உயிர்.
நிமிஷா,நிமிஷ நெருக்குதல்களில்
வருஷங்கள் அனுபவித்த வதை!
மிகவும் அந்நியப்பட்டுப்போன
நமது அன்பு பற்றி
துயர்மிகு விசும்பல்களுடன்
ஒலிக்கின்றது என் பாடல்.
ஆழியில் சுழலும் குமிழியின் தகிப்புடன்
தன் உருவை தக்கவைக்க இயலாமல்
தவிக்கின்றதென் ஆன்மா
இனி.....,
மோட்ஷ விமோசனத்துக்கான
பிரயத்தனங்கள் என்னிடமில்லை;
வாழ்வு பற்றிய கனவை
பிரிவு கலைத்து விட்டது.
தனிமையின் வேக்காட்டில்
உயிர்,உருகி சிதைகிற நிமிஷங்களில்
புழுங்கி வெந்த மனசை நான்
பசியாறிக்கொண்டிருக்கின்றேன்.
வெப்பிசாரக்கோடுகளால்
காலம் நிரப்பி வைத்திருக்கும்
கண்ணீர் வெளியில்
என்னிடமிருப்பது......,
வெறுமையை தவிர வேறில்லை.
உயிரே உனக்கெப்படி அங்கு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.