வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

புழுவின் உணவு.



 பூச்சிகள் பீச்சும்
ஒரு புழுவுடன் வசிக்கிறேன்
பழகிப்போன விதியென்றாகிற்று.

அருவருக்கத்தக்க,விலக்கப்பட்ட
எல்லாவற்றிலும் மேய்ந்துவிட்டு
அருகே நெளியும் புழுகண்டு
உடல் கூனிக்குறுகும்
விம்மிக்கசியும் மனசை பெற்றோர்களின்
வறுமையால் ஒற்றிக்கொண்டு
வாழவேண்டியதாகிற்று 
வாழ்வென்பதால்.

விளக்கணைந்து
குறுக்கீடுகளற்ற நிசியில்
நிரம்பித்ததும்பும்
மௌனத்தினூடே தாவி ஊரும் புழு அது
என்னை இலையாய் கிடத்தி
இரா முழுக்க
இரகசிய மர்மங்கள் துளாவி
பசியாறி மகிழும்
......................................,
விடிய தாழ்திறக்கும் கதவின் பின்
விரிந்து கிடக்கும் பழுக்கள்
இதயத்தை அழுத்தும் சுமைகளாக!

எனது பகல் முழுவதையும்
அருந்தி ருசிக்க
மனையும்,பிள்ளைப்பூச்சிகளும்
இரவை தின்று தொலைக்கும்
அருகிலுள்ள புழு.

இப்படித்தான் ஒவ்வொரு பொழுதுகளும்
புழுவின் உணவாகி
செ'ரி'(த்)துக்கொண்டிருக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.