சூசகமாக சொல்வதென்றால்
யாசகம் கேட்டுத்தான்
இத்தனை உயரத்திற்கு வந்து
என்னை அவள்
வாழ்த்தி வணங்கினாள்
இரண்டு சமுத்திரங்களுக்கு நடுவில்
அவளது உலகம் படைக்கப்பட்டிருந்ததாக
சொல்லியழுத பொது
எனது கடல்களும் உப்புக்கனதியால்
உவர்க்கத்தொடங்கின
மிகவும் குறுகிய நன்மைகள் மட்டுமே
அனுபவித்திருக்க வேண்டுமவள்
இல்லையென்றால் துயரங்களையே
வாழ்வாக்கியிருக்க வேண்டிய
அவசியமிருந்திருக்காது
இனிமைகளை பருக எத்தனித்து
ஏக்கத்தின் தாகத்தால்
தோற்றதொரு தோற்றம்
முகம் முழுக்க நிரம்பி வழிந்தது பசியாய்
கைப்பிடித்தவன் கைகளுவியதால்
எந்த ஆறுதல்களாலும்
அணைக்கப்படாத தீ
அவள் தேகமெங்கும்
தீய்த்திருக்க வேண்டும்
கொடுத்ததை வாங்கியவள்
நன்றிப்பூக்களை உதிர விட்டு
படிக்கட்டுகளில்
இறங்கிக்கொண்டிருந்தாள்
தடுக்கி விழுந்து அவள் முன்
உருண்டு கொண்டிருந்தது என் மனசு
அவளது வாழ்க்கையைப்போல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.