ஞாயிறு, 21 அக்டோபர், 2012

மரத்தை நினைந்தழுது.


அது மரமல்ல....,
ஞானமடம்
எங்கள் குடும்பப்பள்ளி
கூடுமிடம்

உண்ணக்கனிதந்து
உறங்க மடிதந்த
நிழல் வீடு

உன்னை வேரோடு சாய்த்து
வீழ்த்தி விட்ட செய்தி
கேட்ட கணமே
கேவிற்று என் மனசு...,
ஆறாத்துயரில்
அழவேண்டும் போலிருக்கு

விளா மரமென்று
வீராப்பாய் சொன்னவர்கள்
எழா மரமாக்கி உன்னை
ஏன்தான் தறித்தனரோ?

வீட்டிற்கு முன்னால்
வேடந்தாங்கல் ஆனதற்கா?
ஓட்டுக்கு ஊறுசெய்து
உடைத்து அழித்ததற்கா?
ஓசிப்பழம் தின்று
உடம்பு வழர்த்தவர்கள்
வீட்டுக்கு முன்னால்
விளா மரம் இருப்பது
ராசி இல்லையென்று
ஜோசியம் சொன்னதற்கா?
இல்லை;
இலையுதிர்த்து பழுக்கூட்டி
ஈர்க்குகள் தேய்ந்ததற்கா?
முன்னால் ஒரு தொத்து
முளைக்க விடுவதற்கா?

விளா மரமென்று
வீராப்பாய் சொன்னவர்கள்
எழா மரமாக்கி உன்னை
ஏன்தான் தறித்தனரோ?

மசக்கை வரும் பெண்களே
உங்களுக்கு இனி
மாங்காய் மட்டும்தான்
பழங்கள் புறக்கி
பழஞ்சோறு கரைத்துண்ட
வாண்டு பசங்களெல்லாம்-இனி
வான் முகட்டைதான்பார்த்து
எச்சில் நா ஊற
இதயத்தால் அழுவனரே

உன்னில் குடியிருந்த
ஊர்குருவி என்னாச்சோ?
காகம் கரைந்து
களைப்பாற எங்கு போச்சோ?
................................................
உறவுகளே....,
தெவிட்டி போனதென்று-இட
தேவைக்கு அழித்திருப்பின்
அடுத்த வழவுக்குள்
ஓர் மரத்தை மிக
ஆளமாய் நட்டிடுவீர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.