செவ்வாய், 6 நவம்பர், 2012

தாய்மைக்கு என்ன விலை?!


பாசத்தை பங்கிட
உலகில் உன் போல் ஒருத்தி நீதான்
வார்த்தைகளுக்குள்
வரையறுக்க முடியாத
சமுத்திரத்தை மிஞ்சிவிடும்
சரித்திரம் நீ

நிகரில்லா தாய்மை
நிலைக்கின்ற வாய்மை
போலி அறியா பொறுமை
உனக்கு மட்டுமே வாய்த்த வரம்
உன்போல் தாய்மார் இருப்பதால் தான்
பூமி தன் போக்கை மாற்றாமல்
சொகுசுகளோடு இன்னும்
சுழன்றுகொண்டிருக்கின்றது

விதைகளை பயிராக்கி
விருற்சமாக்கும் வித்தை
பூமிக்கு அடுத்து இங்கு
உன்னால் மட்டும்தான்
சாத்தியமாகும் என்பது
உலகம் உணர்ந்த சத்தியம்

உயிருக்குள் ஒட்டுவைத்து
உயிர் வழர்த்து
உதிரத்தை அமுதாக்கி
ஊட்டிவிட்டு
பாதுகாப்பு வலயத்துக்குள்
பத்திரப்படுத்துகிற பக்குவமான 
ஆற்றலும்,ஆளுமையும்
நிறையப் பெற்றவளும்,
நிறைவாய் பெற்றவளும்
நீ மட்டும்தான்

உலகில் நோக்குபவர்களுக்கு
நான் ஊனமுள்ள குறை பிரசவம்
உனக்குமட்டும் நான்
நிகரான சரிசமம்
இல்லாததை இருப்பதாக
உன்னால் மாத்திரம்
எப்படிதாயே ஏற்க முடிகிறது?

சுமையாகி உனக்கு
வலிகளோடு வந்தவனை
சொத்தாக எண்ணி
இறுதிவரை இடுப்பில்
ஏந்தியபடி
என் ஆழுமையை
உலகம் உணரவேண்டும்
என்பதற்காய்
பாதம் தேய,தேய
பல்கலைக்கழகம் வரை
சுமந்து கொண்டிருக்கிறாயே
தாய்மை என்கிற தவமே
உன்னை தாயாய் பெற்றதென் வரமே

இறைவனுக்கு பின்னால் இருக்கும்
இன்னொரு சக்தி
நான் அறிந்தவரை
நீதான் என்பதை நிருபிக்கின்றாய்
உனக்கு விலை உலகில் இல்லை
உனக்கு நிகர் நீயே எல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.