ஞாயிறு, 18 நவம்பர், 2012

நிலவை கொலைசெய்தவன்!




வானாய் விரிந்த பெருவெளியில் 
நட்சத்திரங்களிடை மின்னி ஜொலித்து
பதுமையால் நிரம்பி வழிந்த
பழுங்கு பாத்திரமாய்
அது ஒவ்வொரு நாளையும் செதுக்கி
பருவங்களால் தன் வாழ்வை
சிருஷ்டித்து வைத்திருந்தது

இருளுக்குள் வசித்தவனின்
கனவை  நிரப்பிக்கொண்ட
நிலவை வியந்து பாடினான்
கவிதைகளை அள்ளி இறைத்தான் 
ஒவ்வொரு கணமும் கிறங்கவைத்தான்
நிலவுக்கு இரக்கம் சுரக்க
ஈரம் கவிய
அது அவனுக்காகவே
உதித்து கிடந்தது ஊர்நிறைய ஒளிபரப்பி

 ரசனைகளை அள்ளி  பொழிந்தான்
பூக்களை வரவழைத்து
புதினம் காட்டினான்
உருகி,உருகி பெருக்கெடுத்து
பிரவாகமாகி 
அன்புக்கடல் செய்தான்
அதில் நீந்தி விளயாடுவதான
பாசாங்கினை யாருக்கும்
தெரியாதபடி கரைத்து விட்டான்
நிலா கவிழ்ந்து வீழ்ந்தது கடலில்
அவன் விரித்து வைத்திருந்த
வலையின் மோக கண்கள்
தீவிரமாக திறக்க
மூச்சு முட்டியது நிலவுக்கு

இப்போது சொல்லுங்கள்
நிலவை இவன்தானே கொலை செய்தவன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.