வியாழன், 15 மே, 2014

வழியெங்கும் பிதற்றுபவனின் குரல்

“அலகுகளால் செதுக்கிய கூடு” பற்றி

வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 

                                          கவிஞர் ரமேஷாலம்.
   

வணக்கம்.
இது எனக்குப் புது முயற்சிதான். மழலையைப் பேசத்
தடுமாறும் குழந்தையின் முயற்சியைப் போல.
ஒருவிதத்தில் பார்த்தால், அதிகப் பிரசங்கித் தனம்
என்று கூடத் தோன்றுகிறது. மிகவும் குறைவாகவே எழுதி இருப்பவன், மிகவும் குறைவாகவே அறியப்பட்டவன், ஒரு நூல் தொகுப்பின் மேல் வைக்கும் விமர்சனம் எத்தனை தூரம் மதிப்பிற்குரியது...என்பதில் எனக்கு ஐயம் இல்லாமலில்லை. இருந்தாலும், வாசிப்பவனின் கருத்துக்களை, எழுதுபவன் எதிர்நோக்கியே இருக்கிறான், அதில் எழும் பாராட்டால், தனக்கான உலகைத் தகவமைத்துக் கொள்கிறான் என்னும்
என் நம்பிக்கைதான் (என் கவிதைகள் குறித்து எனக்கான எதிர்பார்ப்புகள் இதுவாகவே இருப்பதால்) இந்த அதிகப் பிரசங்கித்தனத்தை
ஆவலுடன் செய்யச் சொல்கிறது என் மனதின் இந்தக் கணம். தளம் அறிந்த,
மூத்த, சிறந்த படைப்பாளிகளின் கவிதைகள் குறித்தான என் வாசிப்பின் அனுபவத்தை...
உங்களோடு பகிரும் ஆவலில் "அலகுகளால் செதுக்கிய கூடுகளில்" தன் மூக்கை நுழைத்திருக்கிறான்... "அலகுகளால் செதுக்கிய கூடு"...

எத்தனை அழகான, கவித்துவமான தலைப்பு..
என் நண்பர் ரோஷான். ஏ. ஜிப்ரி-யின் கவிதையின் தலைப்பு. வெளி நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழ் தாயின் புதல்வர் அவர். அலகுகளால் செதுக்கப்பட்ட..
தமிழர்களின் வாழ்வுக் கூடுகளைப் பிய்த்தெறிந்துவிட்ட இந்த நூற்றாண்டின் துயரங்களை, தன் இனத்தோடு கவிதைகளின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறவர் அவர். ஒரு பறவையின் முயற்சியைப் போல, பிய்த்தெறியப்பட்ட
கூடுகளைத் தன் அலகுகளால் மீண்டும், மீண்டும் செதுக்கும், (துயரங்களைப் பகிர்ந்த படியும், அவற்றைப் புறம் தள்ளிய படியும்,..அறம் வெல்லும்... அஞ்சற்க...என்ற படி) தன்னாற்றல் படைத்தவர். ஈழத் துயர் தவிர்த்து பொதுவில் பார்த்தாலும்...எல்லோருக்கும் அவரவர் வாழ்வு "அலகுகளால் செதுக்கிய கூடு" தானே. தலைப்பே பெரும் கவிதையாய், வாழ்க்கையாய்...பெரும் துயரமொன்றின் மீளா வெளிப்பாடாய் இருக்கும் ஒரு தலைப்பைத் தாங்கும்... புத்தகத்திற்குள்
நுழைந்திருக்கிறேன்.

ரோஷான். ஏ. ஜிப்ரி...இந்தத் தளத்தில் எல்லோருக்கும்
அறிமுகமான பெயர்தான். நான் தளத்தில் இணைந்த சில நாட்களுக்குள்ளாகவே...இவரது கவிதைகளைப் படிக்கும் வாய்ப்புப் பெற்று...பின் இன்றுவரை...அவரது கவிதைகளின் தொடர் வாசகனாய் இருப்பவன். ஒரு கதை எழுத்தாளருக்கு
தொடர் வாசகன் இருப்பது போல... ஒரு கவிஞருக்கு அமைவது... என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை இந்தத் தளத்தில் தொடர்ந்து எழுதுபவன் என்ற முறையில் நான் நன்கு அறிவேன். அந்த விதத்தில்...ரோஷான். ஏ. ஜிப்ரியின் கவி ஆளுமை பற்றி...நான் அதிகம் சொல்ல எதுவும் இல்லை.

தன்னைப் பற்றிய அறிமுக பக்கத்தில்...ரோஷான்...
"கூடை கூடையாய் கனவுகள் இருக்கிறது...
வாழ்வின் முகங்களைத் தவிர.."என்று எழுதி இருக்கிறார். கனவுகளை விதைக்க ஒரு பிடி மண்
இல்லாமல் துரத்தப் பட்டவர்களின் வாழ்வின் துயரத்தைச் சொல்ல இதைவிட வேறு வார்த்தைகள் கிடைக்காது. இத்தனைக்கும்...
ஒரு பிடி மண்ணுக்காக "குரு ஷேத்திரம்" நடத்திய வரலாறும், நாகரிகமும் நம்முடையது. எதையும் பாராமல் இருக்க, தன்னலத்தோடு மட்டும் இருக்க
கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாய் பழகிவிட்டோம். இதில் மாற்றம் எப்போது வரும் என்றுதான் இன்னமும்...கூடை கூடையாய் கனவுகள் சுமந்து வசிக்கிறோம்.

வாழ்தல் சுமையாகி விட்ட தீவிலிருந்து வெளியேறி விட்டவரின் வாழ்வின் துயரங்களைப்,
பெரும் பாடுகளைத் தன் கவிதைகளில் தொடர்ந்து எழுதி வரும் ரோஷான்...இந்தத் தளம் மட்டுமின்றி...தமிழின் பெரும் கவிஞர்களாலும் உற்று நோக்கப் பட வேண்டியவர்.அலங்காரமான வார்த்தைகளின்றி... வாழ்வின் வலியை...உணர்த்தும் எழுத்துக்களால்...தமிழை அலங்கரிக்கும் ரோஷன்...இந்தத் தளத்தின் வளரும் கவிகளால் வாசிக்கப் பட வேண்டியவர்...
விவாதிக்கப் பட வேண்டியவர்...நன்கு தளத்தில் பகிரப் பட வேண்டியவர் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து..."அலகுகளால் செதுக்கிய கூடு" தந்தவரின் கவிதைகளுக்குள் நுழைகிறேன்.... "அலகுகளால் செதுக்கிய கூடு " தொகுப்பில்
தன் பங்களிப்பாக எட்டு கவிதைகள் அளித்துள்ளார்
ரோஷான்.
1) அடக்குமுறை
2) அலகுகளால் செதுக்கிய கூடு
3)ஓவியத்தின் குமுறல்
4)தொலைந்து போவதென்னும் வாழ்வு
5)முட்டைகளின் ஓடுகளிலான வாழ்க்கை
6)பசியின் வலை
7)பூக்களைப் பாடுகிறேன்
8)விருட்சத்தின் முகம்
என்னும் எட்டுமே மனிதன் தன் வாழ்வின் கூட்டிலிருந்து எடுத்தெறிந்து விட்ட எட்டு உயிர்ச் சுள்ளிகளைப் பற்றிப் பேசுகின்றன.

அடக்குமுறையில்...இந்த நூற்றாண்டிலும் பெண் குறித்தான ஆண் இனத்தின் அவலப் புரிதல்களை
எளிய, வலிமையான வார்த்தைகளில் சொல்கிறார்
ரோஷான்.
" என் மொத்த எடையில்..
மூன்றிலொரு பங்கு மாமிசம்
சிறிதளவு எலும்பு...நரம்பு...கூடுகள்...
கூடவே கொஞ்சம் குருதி...
புடைத்த மார்பு, பொதுவான நிறம்
பிள்ளைகளைப் பெறக் கூடிய பேறு
இவையனைத்தும் இடம் பெற்றவள்தான்
பெண்டாட்டி என்று
புரிந்து வைத்திருக்கிறாய்...."

மெத்தப் படித்தவர்கள் நாட்டில் நிறைந்து விட்டாலும்...ரோஷனின் கருத்தின் உண்மையின்
ஆழத்தை, செய்திதாள்களும், மெகா சீரியல்களும்,
சினிமாக்களும், நமக்கு தினம்தோறும் நினைவுபடுத்திய படியேதான் இருக்கின்றன.

அலகுகளால் செதுக்கிய கூடு...களில் தலைமுறைகளின் வாழ்வின் கனவுகளைச் சிதைத்துக் கொன்றுவிட்ட சந்தர்ப்பவாதிகளைக்
குறித்துச் சாடுகிறார் ரோஷான்.

"தேன் கூடுகளைக் கலைப்பதில்
நீங்கள் எடுக்கும் கவனம்
அதன் ஆக்கத்திற்கான
சிரமத்தை ஆராய ஒருபோதும்
சிரத்தை எடுத்ததில்லை
முரட்டுக் கோடாரிகள் கொண்டு
நீங்கள் வீழ்த்தியது...

....வம்சத்தின் வரலாற்றை..."

ஆனாலும்...காலத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ரோஷன் தன் இனத்திற்கு நம்பிக்கையூட்டும் வார்த்திகளால் இந்தக் கவிதையை முடிக்கிறார்...

"காலத்தைத் திரும்பிப் பார்த்து...
கைச் சேதங்களைக் கணக்கிடும் போது
நிராயுதபாணிகளாய் நிற்பீர்கள்...
எதுவுமற்று ஏதிலியாய்க்
குற்றவாளிக் கூண்டில்..
அப்போது நான்...

அலகுகளால் தயார் செய்து கொண்டிருப்பேன்
இன்னொரு கூட்டை வேறொரு கிளையில்..."

கவிஞனின் பெரும் நம்பிக்கையே...காலம்தான்.
அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்குச் சொல்வதற்காகத்தான் கவிதை அவன் கையில் ஆயுதமாகிறது.

பெரும் நம்பிக்கையைச் சொல்லும் ரோஷானின்
மற்ற கவிதைகள் பற்றிச் சொல்ல... ரோஷானின் மூன்றாம் கவிதை "ஓவியத்தின் குமறல்" ஆகத் துவங்குகிறது.அழகை ஆவணப்படுத்துவதுதான் ஓவியம் எனப் புதுக் கருத்தை முன் வைக்கும் ரோஷான்...வாங்கியவனும், வரைந்தவனும்...ஓவியத்தின் குமுறலை உணராமல்...பாராட்டைப் பங்கிட்டுக் கொள்ளும் பண்பற்ற தன்மையைச் சொல்கிறார். .உடைந்து சிதறும் உணர்வுகளின் வலி,
சட்டங்களுக்குள் மரணித்து விடுகிறது என்கிறார்..
அனாதை இல்லங்களிலும், காப்பகங்களிலும்...
முதியோர் இல்லங்களிலும்...சுவற்றில் மாட்டப் படாத ஓவியங்கள் திரிவதை... இந்தக் கவிதையின் உருவகமாகக் கொண்டால்...மொழியறியாத மௌனங்களின் வலி...நம் வீட்டின் சுவர்களிலும்...
மோதிச் செல்வதை நம்மால் உணர முடியும்.

நான்காம் கவிதை...திருமணம் என்னும் புதிய உறவில்....பழைய உறவுகளை இழந்துவிடக் கூடும் என நினைக்கும் பெண்ணின் பயத்தைக் கவிதையாக்கி இருக்கிறார் ரோஷான். அவளின் விருப்பம் அறியாமல், நிச்சயிக்கப் படும் திருமணத்தில் தான் பலியாடாக மாற்றப்படுவதை உணர்கிறாள் அந்தப் பெண்...காலம் காலமாய் நிலவும் பெண்களின் நிலையை....அழுத்தமாய்ச் சொல்லும் இந்தக் கவிதையை....

இந்தப் புதுப் பயணத்தின் தூரத்தை யாரையாவது
அளவிட்டு சொல்லச் சொல்கிறாள்...அந்தப் பெண்...

எதற்கெனில்...

தன்..."கனவுகளையும், எதிர் பார்ப்புக்களையும்
இங்கேயே புதைத்துவிட்டுப் புறப்படுவதற்கு?"

ரோஷானின் ஐந்தாம் கவிதை...நம் வாழ்வின் மேற் பூச்சு நிறைந்த படடோபங்களைச் சொல்கிறது.
ஒழுங்கற்று...சிக்கல்கள் நிறைந்த வாழ்வைக்..
காலம் மிருகமெனத் துரத்துவதைச் சொல்கிறது . மனிதர்களெல்லாம் "முட்டை வாசி"களாக இருக்கும் இந்த நாட்களை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார் ரோஷான்
தனதிந்தக் கவிதையில். ரோஷானின் ஆறாம் கவிதை ஏழையின் வாழ்வைச் சொல்கிறது.பதினாறு ரூபாய்க்குள் ஒரு நாள் வாழ்வை முடித்துக் கொள்ளச் சொல்லும் அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்கும் யாருக்கும் பொருத்தமானதுதான் இந்தக் கவிதை.

"நங்கூரமிட்டும்
தள்ளாடிக் கொண்டிருக்கிறது...
தோணி...
மீனவனின் குடும்பத்தைப் போல்..."

நம்மில் பெரும்பாலோனோரின் வாழ்வின் நிலைமை இதுதானே. முதல் தேதியில் பூக்கும்
கண்கள்...முதல் வாரத்திலேயே மடிந்து விடுபவைதானே. எதிர் நீச்சலாய் இருக்கும் வாழ்வு...களைத்துக் கண் அயர்கையில்...

"கூடை கூடையாய்...
வண்ணத்துப் பூச்சியின் நிறத்தில் கனவுகள்"

நாள் கழிவதே பெரும்பாடாய் இருக்கையில்...
திருவிழாக்கள் வந்து விடுகின்றன.

பசியின் வலை பரவும்...காலக் குளத்தில்...
திறந்த வலையின் கண்களினூடே
கலைந்து சிதறுகிறது....ஏழையின் புத்தாடைக் கனவுகள்...
வாழ்க்கைக் குளத்தின் படுகைகளில்...

பசியின் வலை பரவிய வாழ்க்கையில்...சிக்கிய மீனாய் இருக்கும் வாழ்வின் துயரத்தை, கனவுகளின் நிறைவேறாத ஒளிச் சிதறலை...
ஆடும் தோணியிலிருந்து தப்பி...தரை தட்ட விரும்பித் தவிக்கும் மனதை...கசியும் வார்த்தைகளால் எழுதி இருக்கும் ரோஷானின்
கவிதை மனத்தின் அன்பு....பெரும் கவிஞனுக்கு மட்டுமே உரியது.விலை பேச முடியாதது.

தன் ஏழாம் கவிதையிலும்...எட்டாம் கவிதையிலும், பூக்களையும், விருட்சத்தையும்
பேசும் ரோஷான்...அதிலிருந்து மனிதர்கள்
கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை எடுத்துரைக்கிறார்,பூக்களையும், விருட்சங்களையும், மனிதனை நேசிக்கச் சொல்லும் ரோஷான்...சுயநலங்களால் வடிவமைக்கப் பட்ட நம் முகங்களை...எப்படி
அடையாள படுத்திக் கொள்வது?...என்ற கேள்வியுடன் முடித்திருக்கிறார்.

மொத்தம் எட்டுக் கவிதைகள்...எட்டும் எட்டுத் திசையிலும் பரவ வேண்டிய கவிதைகள்...

வாழ்வின் ஆதூரங்களை, தலை சாய்க்க விரும்பும்
விருப்பத்தை...வாழ்வின் நிதர்சனமாய் (பெரும்பாலும்...பெரும்பாலானோருக்கு) இருக்கும் தோல்வியை...வருத்தங்களை...தொகுப்பின் மூலமாகப் படிக்கத் தந்த ரோஷானுக்கு
என் நன்றிகளை மீண்டும் சொல்லி...

புதிய கவிஞரின் புதிய கவிதைகள் குறித்தான

எனது கருத்துக்களை...மீண்டும் தொடர்வேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.